Announcement

Collapse
No announcement yet.

அந்த நாளை மறக்க முடியுமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அந்த நாளை மறக்க முடியுமா?

    மறக்க முடியாத நாள்.

    1962 டிசம்பர் மார்கழி மாதம். ஸ்ரீ பெரியவர்கள் இளையாத்தங்குடியில் முகாம் இட்டிருந்தார்கள். நீண்டகால முகாம். புது பெரியவர்கள் ஏகாந்தமாக சாதனையில் முழு நேரம் ஈடுபட்டிருந்தார்கள்.

    நாங்கள் சகோதரர்கள் நால்வரும் பிக்ஷா வந்தனத்திர்க்கான முதல் நாள் இரவே அங்கு போய் சேர்ந்து விட்டோம்.

    இளையாத்தங்குடியில் ஸித்தி அடைந்திருக்கும் ஸ்ரீ காமகோடி பீடம் பூர்வாசார்யாள் அதிஷ்டானத்தை ஒட்டிய பூஜகர் வீட்டில் பூஜை. கூட்டமே இல்லை.

    அந்த வீட்டின் ஒரு சின்ன அறையில் கிழக்கு பார்க்க ஒரு ஜன்னல். உள்ளே பூஜை. நாங்கள் ஜன்னலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறோம். காலை 4.30 புது பெரியவர்கள் தோளில் தண்டத்தை சார்த்திக் கொண்டபடியே குடம் குடமாக ஜலம் கொண்டு வந்து பூஜை அருகில் உள்ள வெள்ளித்தவலையிலும் சற்று தள்ளியுள்ள கங்காளத்திலும் நிரப்புகிறார்கள். பூஜை, வேதி, முதலியவைகளை அந்தந்த இடத்தில் வைக்கிறார்கள். ஸ்ரீ பெரியவாள் ஆசனத்தை தட்டி மேலே மடித்துணி மடித்துப் போடுகிறார்கள். அபிஷேகங்களுக்கு பழ ரசங்கள் பிழிந்து வடிகட்டி எடுத்து வைக்கிறார்கள்.

    ஸ்ரீ பெரியவாள் அனுஷ்டானம் முடிந்து அந்த தீபவெளிச்சத்தில் தேஜோ ராசியாக உள்ளே நுழைகிறார்கள். அந்தச் சின்ன அறையில் மூன்றாவது நபர் நுழைய இடமில்லை.

    ஸ்ரீ பெரியவாள் அமர்ந்ததும் பூஜைப் பெட்டிகளை எடுத்து பூஜை வேதியில் வைத்து விட்டுப் புதுப் பெரியவர்கள் பூஜை விமானத்தை துடைத்து சுத்தம் செய்கிறார்கள், எல்லாம் தண்டத்தைத் தோளில் அணைத்தபடியே. கொஞ்சம் அயர்ந்தாலும் தண்டம் கீழே விழும், அல்லது பூஜையின் மேல் விழும். அவ்வளவு சுறுசுறுப்பாகவும் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.

    வெளியில் இருந்தபடியே சாஸ்த்ரிகள் மந்திரம் சொல்கிறார். புதுப் பெரியவர்கள் ஆபரணங்களை சரிப்பார்த்து துடைத்து வைத்து விட்டுப் பால் அபிஷேகம் முடிந்தவுடன் ஜன்னல் கதவைச் சார்த்துகிறார்கள். பிறகு சந்தனாபிஷேகத்தின் போது திறந்து மறுபடியும் மூடுகிறார்கள். உள்ளே நிவேதனங்களை அவர்களே கொண்டு வைத்திருக்க வேண்டும். தீபாராதனையின் போது ஜன்னலைத் திறக்கிறார்கள். முன் தீபங்களை அப்புரபடுத்துகிறார்கள்.

    வெளியிலே நாங்கள் பனியிலே சால்வைகளைத் தலைமுதல் கால் வரை போர்த்திக் கொண்டு, வெட வெடவென்று குளிரில் நடுங்கிக் கொண்டு தர்சனம் செய்கிறோம். உள்ளே புதுப் பெரியவர்கள் வியர்க்க வியர்க்கப் பம்பரமாகக் கைங்கர்யம் செய்கிறார்கள்.

    பூஜை முடிந்ததும் ஸ்ரீ பெரியவர்கள் உள்ள போய் விட்டார்கள். புதுப் பெரியவர்களும் அதிஷ்டானத்திர்க்குப் போய் விட்டார்கள்.

    காலை 7.30 நாங்கள் பிக்ஷா வந்தன சாமான்களுடன் காத்திருக்கிறோம்.

    ஸ்ரீ பெரியவர்கள் வீட்டுக் கதவை திறந்து கொண்டு வந்து வாசல் வராந்தாவில் அமருகிறார்கள். நாங்கள் பிக்ஷா வந்தனம் செய்கிறோம். சிப்பந்திகள் பிக்ஷா வந்தன சாமான்களை எடுத்துச் செல்கிறார்கள்.

    பதினைந்து இருபது நிமிஷம் மௌனத்திற்குப் பிறகு ஸ்ரீ பெரியவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்.

    “நீங்கள் எல்லாம் பனியிலும் ஊதலிலும் நின்று பூஜை தர்சனம் பண்ணினேளோ?”

    நாங்கள் மௌனமாகத் தலை அசைக்கிறோம்.

    “உள்ளே ஒரு கீக்கடம். அதிஷ்டானத்திலேயே புது பெரியவர் இருக்கிறதாலேயே அவர் இருக்கிற இடத்திலே பூஜை நடக்கணும்னு தோணித்து. இங்கே பெரிசாக் கொட்டகை எல்லாம் போடறோம்னு சொன்னா. அதிஷ்டானம் சத்தம் இல்லாமல் சாந்தமாக இருக்கனும்கிறதினாலே அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுவோ சின்ன உள்ளு. மூன்று பேர்க்கூட அங்கே நடமாட முடியாது. தானே பூஜை கைங்கர்யம் பண்ணனும்னு புதுப் பெரியவர் ஆசைப்பட்டா. விஸ்தாரமான இடமாக இருந்தா இரண்டு பேர் சகாயத்துக்கு வைச்சுக்கலாம், இங்கே இவ்வளவுதான் இடம். புதுப் பெரியவா பீடாதிபதிகளை இப்படி வேலை வாங்கராறேன்னு நீங்க நினைக்கலாம். நான் கூட வேண்டாம்னு சொன்னேன். புதுப் பெரியவர் தான் பிடிவாதமா மன்றாடி என்கிட்ட பெர்மிஷன் வாங்கிப்பிட்டா. ரொம்ப ச்ரமப்படறா நாலு நாளாக.

    குரு கைங்கர்யம் ரொம்ப சிரமம்னு அந்த நாளிலே இருந்தது. இந்த நாளிலே கூடவான்னு நீங்க நினைக்கலாம்.

    சிரமமான கார்யமானாலும் பிரியம் பக்தின்னு வந்துட்டா, சிரமம் தெரியாது. அதிலே ஒரு சந்தோசம் திருப்தி எல்லாம் ஏற்பட்டு விடுகிறது. அதனாலே புதுப் பெரியவா இந்த கைங்கர்யம் பண்ணனும்னு நினைக்கிறேன் ” என்று சொல்லி நிறுத்தினார்கள்.

    “எங்களுக்கும் குரு கைங்கர்யத்திலே இவ்வளவு ச்ரத்தை வரணும்னு பெரியவா தான் அனுகிரஹம் பண்ணணும்” என்று எங்கள் அண்ணா பிரார்த்திக்கிறார்.

    “புதுப் பெரியவாளை அச்ரயிங்கோ! குரு கைங்கர்யம் நன்றாக சித்திக்கும்” என்று அருள் பாலிக்கிறார்கள்.

    பகல் பூஜைக்கு பிறகு ஸ்ரீ பெரியவா எங்களை அழைத்து பிரசாதம் கொடுக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் புதுப் பெரியவர்களை அனுமதி இல்லாமல் தர்சனம் செய்ய முடியாது. நாங்கள் அனுமதி கேட்கிறோம்.

    ஸ்ரீ பெரியவாள் ஒரு பையனை அழைத்து “இவர்களுக்கு நாலு மணிக்கு மேல் புதுப் பெரியவாளை தர்சனம் செய்துவை” என்கிறார்கள்.

    நாங்கள் காத்திருக்கிறோம்.

    அப்பொழுது நான் தஞ்சாவூர் ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானத்தின் மேனேஜிங் ட்ரஸ்டி. கோவிலில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீ பெரியவாள் வந்து கும்பாபிஷேகம் செய்ய வேணும். அது நடந்த பிறகு தான் யாத்ரை என்ற தீர்மானத்துடன் இளையாத்தங்குடியில் தங்கி இருக்கிறார்கள்.

    இரண்டு தடவை கும்பாபிஷேகத்திற்கு நாள் வைத்துக் கொடுத்தார்கள். திருப்பணி முடியவில்லை.

    கும்பாபிஷேகம் தட்டிப் போகிறதே என்று வேதனையுடன் அன்று மாலை புதுப் பெரியவாளை நான் வந்தனம் செய்கிறேன்.

    “ஸ்ரீ பெரியவாள் இரண்டு தடவை நாள் வைத்து கொடுத்தும் கூட அவர்கள் சொன்ன படி செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது” என்று சொல்கிறேன்.

    புதுப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    “அவர்கள் சொன்னபடி நடக்காவிட்டாலும் கூட அவர்கள் நம்மை கருணையோடு கடாட்சிக்கிறார்களே! அதனாலே தான் அவர் பெரியவாளா இருக்கிறார்கள். அதனாலே வருத்தப்பட வேண்டாம். ஆகவேண்டியதைப்பார்” என்றும் அருள் செய்தார்கள்.

    அந்த நாளை மறக்க முடியுமா?
    Source: Kanchi Periyava Administrator
Working...
X