சற்று முன் ராஜ் டி.வியில் ஒரு குறும்படம்(?) ஒன்று ஒளிபரப்பானது. அதைக்கண்டு கண்ணில் தானாக கண்ணீர் பீறிட்டுக்கொண்டு வந்தது.
ஒரு பெரும் தொழிலதிபராய் விளங்கும் ஒரு இளவயது பையனைப் பார்க்க வந்த அவன் தகப்பனாரை அவன் உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்புகிறான்.
அவன் அருகில் இருப்பவன் ஏன் இப்படி உங்கள் தந்தையை வெறுக்கிறீர்கள் என்று கேட்கிறான்.
அவருக்கு ஒரு கண், அதனால் அவருடைய பையனாகப் பிறந்த எனக்கும் ஒரு கண், இதனால் நான் பள்ளிப் பருவம் முதல் பல இன்னல்களை அனுபவித்தேன், அவமானங்களை சந்தித்தேன், அவர் செய்த பாபம் என்னை பாதித்துவிட்டது என்று எண்ணினேன், எனக்குத் தாயரும் இல்லை, அதனால்தான் நான் அவரைவிட்டு சிறுவயதிலேயே விலகி வந்துவிட்டேன் என்கிறான்.

சில நாட்களில் அவன் தந்தை விபத்தில் இறந்துவிட்டதாக டி.வி செய்தியைப் பார்த்து தெரிந்து கொண்டு, அவன் நண்பனின் வற்புறுத்தலால் இறந்த தந்தையைப் பார்க்கப்போகிறான். அங்கே அவருடைய பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தது.
"அன்பு மகனுக்கு,
நீ என்றேனும் ஒரு நாள் என்னைத் தேடி வருவாய் என்று தெரியும்.
நீ பிறக்கும்போது உனக்கு இரண்டு கண்ணளுமே இல்லை, அதனால் நீ கண் தெரியாமல் மிகுந்த அல்லல் படுவதைக் கண்டு சகிக்க முடியாமல், உன்னை வளர்ப்பதற்கு ஒரு கண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, உன் வாழ்க்கைக்காக என் இரு கண்ணகளில் ஒன்றை உனக்குக் கொடுத்தேன். நான் இறந்தபின் இரண்டாவது கண்ணும் உனக்குத்தான், இது பரம்பரை வியாதியல்ல!"
பெற்றவர்கள் மனதையும், அவர்கள் உணர்வையும் பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியாது?!