1.எட்டுவகை லட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டுவகை நான் அறிந்தேன் கோலமயில் ஆனவளே
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமியே
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் அம்மா!
பொருள்: ஆதிலட்சுமித்தாயே! எட்டுவகையான அஷ்டலட்சுமிகளால் வாழ்வில் செல்வ வளம் பெருகுவதை நான் அறிந்து கொண்டேன். அழகான மயில் போல விளங்குபவளே! நான் வாழ்வில் வெற்றியுடன் மகிழ்ச்சியாக வழிகாட்டுவாயாக. வட்டமான தாமரை மீதிருப்பவளே! தாயே! நீ அருள்புரிவதற்கு இதுவே நல்ல சமயம்.

2
நனவிலும் கனவிலும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்விரி அனல்புகு கையவனே.
பொருள்: பரந்து விரிந்த கங்கையைத் தாங்கியவனே! மணம் மிக்க கொன்றை மலரைச் சூடியவனே! கனலாக எரியும் மழுவினை ஏந்தியவனே! சிவனே! நான் விழித்திருந்தாலும் சரி, உறங்கும்போது சரி... உன்னை வழிபடுவதற்கு மறந்ததில்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends3 நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.
பொருள்: விஷம் குடித்ததால் கரிய கழுத்தைக் கொண்ட சிவன் வாழும் தலம் கானப்பேர்(காளையார்கோவில்). அங்கு சென்று அமைதி மிக்க மனம், நல்ல நீர், பூ, ஓசை மிக்க மத்தளம், நைவேத்யம், இனிய பாடல் ஆகியவற்றால் வணங்கி வந்தால் நம் பாவம் யாவும் நீங்கிவிடும்.

4 குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
பொருள்: கோவர்த்தனகிரியைத் தாங்கி இந்திரன் பெய்வித்த மழையிலிருந்து ஆயர்களைக் காத்தான் கண்ணன். முன்பொரு நாளில் தன் திருவடிகளால் இந்த உலகத்தை அளந்தான். அப்பெருமான் வீற்றிருக்கின்ற உயர்ந்த மலையான வேங்கடத்தை வணங்குவோருக்கு முன்வினைப்பாவம் நீங்கும்.

5 வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
பொருள்: அறவழியில் நடக்கும் அந்தணர், தேவர்கள், பசுக்கூட்டம் அனைத்தும் வாழட்டும். குளிர்ச்சி மிக்க நீர்வளம் செழித்து நல்லாட்சி நடத்தும் மன்னன் வாழட்டும். தீமை எல்லாம் அழிந்து போகட்டும். சிவனின் திருநாமம் எங்கும் ஒலிக்கட்டும். உலகில் துன்பம் நீங்கட்டும்.

6 பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
பொருள்: ஸ்ரீரங்கத்தில் உறைந்திருக்கும் பெருமானே! பச்சை மலை போல திருமேனி கொண்டவரே! பவளம் போன்ற இதழும், தாமரைக் கண்களும் பெற்றவரே! அச்சுதரே! தேவர்களின் தலைவரே! ஆயர் குலத்தில் உதித்த கண்ணனே! இந்திரன் ஆளும் தேவலோகத்தை ஆட்சி செய்யும் பாக்கியம் கிடைத்தாலும் எனக்கு விருப்பம் இல்லை. உன்னை இங்கேயே வணங்கும் இந்த பாக்கியம் ஒன்றே போதும்.
.