கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ
மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
பொருள்: வெண்மையான சங்கே! குவலயா பீடம் என்னும் யானையின் தந்தம் ஒடித்த கண்ணனின் வாய் இதழ்களின் நறுமணம் எப்படி இருக்கும்? கற்பூரம் போல் மணக்குமா? தாமரைப்பூ வாசம் வீசுமா? அவனது பவளம் போன்ற சிவந்த இதழின் சுவை தித்திக்குமா? கண்ணன் மீது கொண்ட ஆசையால் கேட்கின்றேன். சொல்வாயாக.
குறிப்பு: இந்தப் பாடலைப் பாடியவள் ஆண்டாள்.

2
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.
பொருள்: வெண்பளிங்கு போல வெண்ணிறம் கொண்டவளே! பவளம் போல சிவந்த வாயும், மணம் கமழ்கின்ற தாமரை மலர் போன்ற கையும் பெற்றவளே! உடுக்கை போன்ற சிற்றிடை அமைந்தவளே! கலைமகளே! உன் திருவடியை அல்லும் பகலும் சிந்தித்தால், கல்லும் கூட கவி பாடும்.

3
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக- செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.
பொருள்: எனக்கு ஏற்பட்ட துன்பம் நீங்க வேண்டும் என்பதற்காக சக்ராயுதம் ஏந்திய திருமாலின் திருவடியை வணங்கி பாமாலை பாடினேன். விளக்கேற்றியும் வழிபட்டேன். இந்தப் பெரிய உலக@ம விளக்கின் அகலாகவும், பரந்த கடல் நீர் நெய்யாகவும், ஒளிமிக்க சூரியன் சுடராகவும் அப்பெருமானிடம் விளங்குகிறது.

4.
நமஸ்யே புருஷம் த்வாத்யமீஸ்வரம் ப்ரக்ருதே: பரம்!
அலக்ஷ்யம் ஸர்வபூதானாமந்தர்பஹி ரவஸ்திதம்!!
பொருள்: மாயையைக் கடந்த பரம்பொருளே! ஆதியானவனே! தலைவனே! எல்லா உயிர்களிலும் உள்ளும்புறமுமாக இருப்பவனே! யாராலும் அறிய முடியாத பெருமை மிக்கவனே! உன்னை வணங்குகிறேன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends5
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான்- பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே! தொழுது!
பொருள்: கடல் போல ஆழ்ந்திருக்கும் மனமே! பெரிய பூமி, அகன்ற வானம், சுழல்கின்ற காற்று, சேர்ந்திருக்கும் நெருப்பு, நீருமாக பஞ்ச பூதங்களின் வடிவாகத் திகழும் இறைவனே! ஒளிவீசுகின்ற சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்கும் திருமாலின் திருவடிகளை வணங்குவாயாக.

6
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
பொருள்: கோவர்த்தனகிரியைத் தாங்கி இந்திரன் பெய்வித்த மழையிலிருந்து ஆயர்களைக் காத்தான். அன்றொருநாள் தன் திருவடிகளால் உலகத்தை அளந்தான். அந்தப் பெருமாள் வீற்றிருக்கின்ற திருவேங்கட மலையை வணங்கினால் போதும். நம்முன்வினைப்பாவம் அனைத்தும் நீங்கி விடும்.