1 உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
பொருள்: பஞ்சபூதங்களால் ஆன உலகம் முழுவதையும் உருவாக்கியவரே! அவற்றை நிலைபெறச் செய்தவரே! காலம் முடிந்ததும் உலகை அழிப்பவரே! எல்லை யில்லாத திருவிளையாடல்களைச் செய்பவரே! தலைவரான நாராயணமூர்த்தியே! உம்மை நாங்கள் சரணடைகிறோம்.

2
ஆதிபூஜ்யாய தேவாய தந்தமோத கதாரிணே!
வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!
பொருள்: எல்லா பூஜைகளிலும் முதலாவதாக வழிபடப்படுபவனே! தேவாதி தேவனே! தந்தம், கொழுக்கட்டை ஏந்தியவனே! வல்லபதேவியின் பிராணநாதனே! கணேசமூர்த்தியே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.

3
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

பொருள்: பொன் போல் சிவந்த மேனியனே! புலித்தோலை ஆடையாக உடுத்தவனே!
மின்னுகின்ற சிவந்த சடைமீது மிளிர்கின்ற கொன்றை மலர்களைச் சூடியவனே! என்றும் நிலையானவனே! மாணிக்கம் போன்றவனே! திருமழபாடியில் குடிகொண்டிருக்கும் மாணிக்கம் போன்றவனே! என் அன்னையே! உன்னையன்றி வேறு யாரை நான் நினைப்பேன். நீயே எனக்கு அடைக்கலம் தரவேண்டும்.

4
மையார் கருங்கண்ணி கமலமலர் மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே!
வெய்யார் சுடராழி சுரிசங்கமேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே.
பொருள்: மை பூசிய அழகிய கண்களைக் கொண்டவளும், தாமரை மலரில் வீற்றிருப்பவளும், செக்கச்சிவந்த நிறத்தைக் கொண்டவளுமான திருமகளைத் தன் மார்பில் கொண்டிருக்கும் திருமாலே! ஒளிவீசிப் பிரகாசிக்கும் சக்கரம், வளைந்த சங்கு கைகளில் ஏந்தியவரே! என் கண்கள் உம்மை மட்டுமே காண விரும்புகின்றன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends5,
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
நூற்கடலும் நுண்ணூல் தாமரை மேல்- பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோ பாலகன்.
பொருள்: கோகுலத்தில் அவதரித்த பாலகனே! மருதமரங்களாக நின்றிருந்த கந்தர்வர்களுக்கு விமோசனம் தந்தவனே! பாற்கடல், திருவேங்கடம், குளிர்ச்சியான மேலுலகமாகிய பரமபதம், பாம்பணை, கடல்போன்ற பரந்தும், நுட்பமான வேதங்களை உணர்ந்தும் இருக்கும் யோகியரின் தூய தாமரை உள்ளம் ஆகிய இடங்களில் குடி கொண்டவனே! அருள்புரிய வேண்டும்.

6
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
பொருள்: செல்வ வளம், கல்விச் செல்வம், ஒருநாளும் தளராத உற்சாகமான மனம், தெய்வீகத் தோற்றம், நெஞ்சில் வஞ்சம் இல்லாத நல்ல நண்பர்கள் என்று உலகில் உள்ள நல்லவை அனைத்தையும், தன் அன்பர்களுக்காக தன் கடைக்கண் பார்வையாலேயே வழங்கி அருள்புரிவாள், அன்னை அபிராமி.