வேதம் - சாகைகளின் பிரிவினையும் வழக்கில் உள்ளவையும் - 1

ஆதிகாலத்திலிருந்தவர்கள் மஹாசக்தர்களாக, நிரம்ப யோக சக்தியும் புத்திவன்மையும் உடையவர்களாக இருந்ததால் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட வேத சாகைகளை அப்பியாஸம் பண்ணி வந்தார்கள். அநேகம் மஹிரிஷிகளுக்கு தாமாகவே வேத மந்திரங்கள் ஸ்புரித்ததும் உண்டு.

குருவிடமிருந்து அஸாதரணமாக மேத சக்தியினால் அபரிதமான வேத சாகைகளை கற்றுக்கொண்டார்கள். அதற்கப்புறம் இவர்களுக்காகவே வேத மந்திரங்கள் ஸ்புரித்ததும் உண்டு. குருவிடமிருந்து கற்றதற்கு மேலாகப் புதுப் புது வித்யைகளைப் பிரகாசப்படுத்தினார்கள். வேதம் முழுக்க ஸமுத்ரம் என்றால், அதைப் பூரணமாக அறிந்த யாரும் இருக்கவில்லைதான். ஆனாலும், இப்படி அந்த ஸமுத்ரத்தில் நிறைய பாகங்களைப் பற்றித் தெரிந்தவர்களாக ஆதிகாலத்தில் இருந்தார்கள்.

பிற்காலங்களில் மநுஷ்யர்களின் தெய்விகமான யோக சக்திகள் குறைந்துகொண்டே வந்து, கலி ஆரம்பத்தில் ரொம்ப க்ஷீணமடைந்து விட்டது. ஜனங்களின் ஆயுஸ், ஆரோக்யம், புத்திபலம் எல்லாமே ரொம்ப குறையலாயிற்று. புராணங்களில் இப்படிச் சொல்லியிருப்பதைத்தான், மேலே சொன்ன நச்சினார்க்கினியர் உரையிலும், 'சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர்'என்று சொல்லியிருக்கிறது. இதெல்லாம் பரமாத்மாவின் லீலைதான். ஏன் இப்படிகுறைய வேண்டும் என்றால் சொல்லத் தெரியவில்லை. "வேதங்களை நிரம்பக் கற்று யக்ஞாதிகளும் முடிவிலே ஆத்ம விசாரமும் பண்ணிக் கொண்டு வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாக நன்றாக விருத்தியாகிக் கொண்டுதானே வரவேண்டும்? அப்படியில்லாமல் நூதன நூதனமாக, விசித்ரமாக விளையாடிக்கொண்டு இந்த லோக நாடகத்தை நடத்துவதால் இப்படியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

ஆகக்கூடி evolution, evolution என்று (உயிரினம் மேலே மேலே அபிவிருத்தியாகிற கிராமத்திலேயே ஸ்ருஷ்டி போய்க்கொண்டிருக்கிறது என்று) டார்வின் முதலானவர்கள் சொன்னாலும், ஆத்மிகமாகவும், புத்திப் பிரகாசம், நல்ல குணம், யோகசக்தி முதலியவற்றை வைத்தும் பார்க்கிற போது evolution -கு நேர்மாறாக, கீழே கீழே டிக்ரி போவதாகத்தான் இருந்திருக்கிறது. இதிலே ஒரு freezing point (அப்படியே குளிர்ந்து, உறைந்து போய்விடுகிற நிலை) மாதிரி கலியுக ஆரம்பம் வந்தது.

கிருதயுகத்திலிருந்து மநுஷ்யர்களின் சக்தி குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அந்த யுகத்தில் அஸ்தி (எலும்பு) இருக்கும்வரை ஒருத்தருக்கு ஆயுஸ் இருக்கும். ரத்தம், மாம்ஸம் எல்லாம் வற்றிப் போய்விட்டாலும்கூட, எலும்புக் கூடு உளுத்து விழுகிற வரையில் உயிரோடு இருப்பார்கள். அவர்களுக்கு நிரம்பவும் தியான சக்தி உண்டு. அவர்களை 'அஸ்தி கத ப்ராணர்கள்'என்று சொல்லியிருக்கிறது.

த்ரேதாயுகக்காரர்கள் 'மாம்ஸ கத ப்ராணர்'கள். அதாவது ரத்தம் சுண்டி விட்டால்கூட மாமிஸம் அழுகுகிறவரை உயிரோடு இருப்பார்கள். இவர்களுக்கு யக்ஞாதி கர்மாக்களைப் பண்ணும் சக்தி விசேஷமாக உண்டு. த்வாபரயுக ஜனங்களுக்கு 'ருதிர கத ப்ராணர்'என்று பெயர். 'ருதிரம்' என்றால் ரத்தம். தமிழில் உதிரம் என்றாகியிருப்பது இதுதான். இவர்கள் ரத்தம் வற்றுகிறவரை ஜீவனோடு இருப்பார்கள். பூஜை பண்ணுவதில் இவர்களுக்கு சக்தி அதிகம். அப்புறம், இப்போது கலியுகத்தில் இருக்கிற நாம் 'அன்ன கத ப்ராணர்'கள். சோறு உள்ளவரைதான் நமக்கு உயிர் உடம்பில் தரித்திருக்கும். நமக்கு த்யான சக்தி, கர்மாநுஷ்டான சக்தி, பூஜை பண்ணும் சக்தி எதுவும் இல்லை. "கிருஷ்ணா, ராமா" என்று நாமாவைச் சொல்கிற சக்திதான் இருக்கிறது.

நாமாவே காப்பாற்றிவிடும் என்பது வாஸ்தவந்தான். ஆனாலும் அதற்காக பிரம்ம ஸ்ருஷ்டியிலிருந்து வந்திருக்கிற வேதங்களை அழிந்து போகும்படிப் பண்ணலாமா?அது பெரிய நஷ்டமல்லவா? அந்த நஷ்டத்துக்கு ஹேது கிருஷ்ண பகவானின் தேஹோத்ஸர்ஜத்தோடு (தேக வியோகத்தோடு) பெரிதாக ஆரம்பித்தது. கிருஷ்ண பரமாத்ம சரீரத்தை பரித்யாகம் பண்ணிவிட்டு, லோகத்தைவிட்டுப் புறப்பட்டவுடன் ஒரு பெரிய இருட்டு வந்து சூழ்ந்து கொண்டுவிட்டது.

கிருஷ்ண பரமாத்மா பேரிலும் இருட்டு (கிருஷ்ண-கருப்பு) ;அவர் பிறந்ததும் இருட்டு;காராக்ருஹ்திலே நட்ட நடுநிசியிலே அவர் பிறந்தார். ஆனால் அவரே லோகத்துக்கெல்லாம் ஞான ஜோதியாக இருந்தார்!அவர் மறைந்ததும் ஞானத்துக்குப் பெரிய ஹானி உண்டாகி பெரிய இருள் சூழ்ந்துவிட்டது. கெட்ட சக்திகளுக்கு ஒரு ரூபமாக இருக்கப்பட்ட கலிபுருஷனுக்கு அதிகாரம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம் எதற்காகவோ பரமாத்மாவே விளையாடிப் பார்த்துக் கொள்கிற லீலைதான்.

ஒரே ஜோதியாக வந்தார்; அப்புறம் ஒரே இருட்டு வந்து விடுமோ என்று பயப்படும்படியான நிலையை உண்டு பண்ணினார். இதற்கப்புறம் ஒரு கருணை உண்டாகி, "லோகம் இப்படி ஒரேடியாக வீணாகி விடவேண்டும்; கலிக்குக் கொஞ்சம் மாற்று மருந்து - கலியின் விஷத்தை முறிக்கிற மருந்து - கொடுத்து ரட்சிக்கலாம்"என்று நினைத்தார். வேதந்தான் அந்த மருந்து.

கலி புருஷன் அதைக் கபளீகரம் பண்ணிவிடாமல் காப்பாற்றிவிட்டால் போதும், லோகம் வழிகாட்டிக் கொண்டிருக்கும் என்று பரம கருணையோடு எண்ணினார். பழைய மாதிரி வேதம் ஜோதியாகப் பிரகாசிப்பது கலியில் சாத்தியமில்லை. கலிபுருஷனுக்கு அதிகாரம் கொடுத்தபின் அப்படிப் பண்ணுவதற்கில்லை. ஆனாலும், அது குறைந்த அளவுக்காவது எவ்வளவு பிரகாசிக்க வேண்டுமோ அந்த அளவு இருக்கும்படிப் பண்ணவேண்டும் என்று நினைத்தார். தம்முடைய அம்சாவதாரமான வேத வியாஸ மஹரிஷி மூலமாக இந்தப் பெரிய உபகாரத்தைச் செய்தார்.

Contd...2...
Source: subadra


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends