அபுதாபி: இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 4-1 என கைப்பற்றி கோப்பை வென்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றன. நான்கு போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் நடந்தது.
"டாப்-ஆர்டர்' திணறல்:
"டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு உபுல் தரங்கா (3), கேப்டன் தில்ஷன் (12), சாண்டிமல் (7), சமரசில்வா (1) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். இதனால் இலங்கை அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சங்ககரா அரைசதம்:
பின் இணைந்த சங்ககரா, மாத்யூஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. பொறுப்பாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது சங்ககரா (78) அவுட்டானார். அடுத்து வந்த ஜீவன் மெண்டிஸ் (2) நிலைக்கவில்லை. மாத்யூஸ் (61) ஆறுதல் தந்தார். பெரேரா (25) ஓரளவு கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் சோகைல் தன்வீர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
மிஸ்பா நம்பிக்கை:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ் (14), ஆசாத் ஷபிக் (26) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பின் இணைந்த யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த போது, யூனிஸ் கான் (36) அவுட்டானார். அடுத்து வந்த சோயப் மாலிக், "டக்-அவுட்' ஆனார். உமர் அக்மலுடன் இணைந்த மிஸ்பா (66) நம்பிக்கை தந்தார்.
உமர் அபாரம்:
அபாரமாக ஆடிய உமர் அக்மல் (61*), தன் பங்கிற்கு அரைசதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் ஜீவன் மெண்டிஸ் 3, பெர்ணான்டோ 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் 4-1 என தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது பாகிஸ்தானின் அப்ரிதிக்கு வழங்கப்பட்டது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends