திரு வேங்கடத்து அந்தாதி 10/100 அம்புதியே ! அச்சுதன் அம்புஜையுடன் அறிதுயில் செய்ய அருந்தவம் என்ன செய்தாய் ?

ஒருமாதவனியொருமாதுசெல்வியுடனுறைய
வருமாதவனின்மகுடம்வில்வீசவடமலைமேற்
கருமாதவன்கண்ணனின்பாற்றிருநெடுங்கண்வளர்கைக்-
கருமாதவமென்னசெய்தாய்பணியெனக்கம்புதியே

பதவுரை : ஒரு + மாது + அவனி
வரும் + ஆதவனின்
கரு + மாதவன்
அரு + மா + தவம்

அம்புதியே கடலே !
ஒரு மாது அவனி ஒரு மனைவியான பூதேவியும் ,
ஒரு மாது செல்வி இன்னொரு மனைவியான ஸ்ரீ தேவியும் ,
உடன் உறைய சேர்ந்து இருக்கவும் ,
வரும் ஆதவனின் மகுடம் வில் வீச உதய சூரியன் போல கிரீடம் ஒளி வீசவும் ,
வடமலைமேல் வேங்கட மலை மேல் இருப்பவனும் ,
கரு மாதவன் கண்ணன் கரிய நிறமுடைய மாதவன் என்றும் கண்ணன் என்றும் பெயர் உடையவனுமான திருமால்
நின்பால் உன்னிடம்
திரு நெடும் கண் வளர்கைக்கு அழகிய நீண்ட கண் மூடி நித்திரை செய்வதற்காக
என்ன அரு மா தவம் செய்தாய் என்ன அரிய பெரிய தவத்தை செய்தாய் ?
எனக்குப் பணி எனக்கு சொல்வாய் !