ஆடிப்பூரம்!

Click image for larger version. 

Name:	Adipuram.gif 
Views:	6 
Size:	59.4 KB 
ID:	964

ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் கூடிய நன்னாள் ஆண்டாள் அவதரித்த நாள். 09.08.2013....ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த அழகான நந்தவனத்தில் திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல். அதைக்கேட்ட மாத்திரத்தில் வேகமாக ஓடினார் பெரியாழ்வார். அந்த குழந்தையை வாரியெடுத்து அணைத்தார். குழந்தை அழுகையை நிறுத்தியது. `கோதை நாச்சியார்' என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை தான் ஆண்டாள்.பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தான் ஆண்டாளை பெறாமல் பெற்ற தந்தை. சிறுவயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.
பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தான் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.


ஒருநாள் பெருமாளுக்கு உரிய மாலையை ஆண்டாள் அணிந்திருந்ததை பெரியாழ்வார் பார்த்துவிட்டார். மகளை கண்டித்தார். பின்னர் வேறொரு மாலையை தொடுத்து அதை பெருமாளுக்கு அணிவித்தார். ஆனால் அது அறுந்து விழுந்தது. விபரீதம் ஏதும் நடக்கப்போகிறதோ? என்ற அச்சத்தில் இருந்தார் பெரியாழ்வார்.


அவரிடம், தான் ஏற்கனவே அணிந்து அழகு பார்த்த மாலையை கொண்டு கொடுத்து, பெருமாளுக்கு அணிவிக்குமாறு கூறினாள் ஆண்டாள். அவரும் அவ்வாறு செய்ய மாலை அறுந்துவிழவில்லை. அப்போது பெருமாள் அவர்கள் முன்தோன்றி, `ஆண்டாள் அணிந்த மாலையை யாம் ஏற்றுக்கொண்டோம்' என்றார்.


ஆண்டாள் `சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' ஆனாள். ஆண்டாள் பருவ வயதை அடைந்தபோதும் கண்ணன் மீது தீவிர பற்றுள்ளவளாக இருந்தாள். அதுவே காதலாக மாறியது. மணந்தால் ஸ்ரீரங்க பெருமானைத்தான் மணப்பேன் என்று வைராக்கியத்துடன் இருந்தாள். ஸ்ரீரங்கனை மணப்பதுபோல் கனவு கண்டாள்.


தான் கண்ட கனவை கவிதையாக்கி தோழிகளிடம் படித்து காட்டுவாள். தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தான் இறைவன் மீது தான் கொண்ட காதலை தந்தையிடம் சொன்னாள். பின்னர் இறைவனை மணக்க மார்கழி நோன்பு மேற்கொண்டாள். அதிகாலையில் எழுந்து குளித்து சகதோழியரோடு கோவிலுக்கு சென்று வழிபட்டாள் (அவள் மார்கழி மாதம் 30 நாட்களும் பாடிய 30 பாடல்கள் தான் திருப்பாவை).


ஒருநாள் பெரியாழ்வார் கனவில் ஸ்ரீரங்க பெருமாள் தோன்றி, "உனது மகளை ஸ்ரீரங்கம் அழைத்து வா. அங்கே யாம் அவளை மணந்து கொள்வோம்'' என்றார். அதன்படி ஆண்டாளை பல்லக்கில் அமர வைத்து ஸ்ரீரங்கம் அழைத்து சென்றனர். ஸ்ரீரங்க எல்லையை அடைந்தபோது திடீரென்று ஆண்டாள் மாயமாகிவிட்டாள்.


பெரியாழ்வார் அதிர்ச்சி அடைந்து பெருமாளை நோக்கி வேண்டினார்.அப்போது ஆண்டாளுடன் பெருமாள் காட்சி கொடுத்தார். "உமது மகள் லட்சுமியின் அம்சம். அவளையாம் ஏற்றுக் கொண்டோம்'' என்றார். ஆனால் அதை பெரியாழ்வார் ஏற்றுக்கொள்ளவில்லை. "தாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து முறைப்படி என் மகளை மணந்து செல்ல வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.


அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை மணந்தார் பெருமாள். இத்தகைய சிறப்புமிக்க ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டது ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாளன்று அதனால், அன்றைய நாளை ஆடிப்பூரம் என்று அழைத்து கொண்டாடுகிறார்கள். ஆடிபுரத்தில் விரதம் இருந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
http://www.yarl.com/forum3/index.php?showtopic=105353