ஆடி மாதம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

Click image for larger version. 

Name:	Adi Amman.jpg 
Views:	8 
Size:	63.0 KB 
ID:	966
பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வரும் சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஆன்மிக காரணமும், அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் தனித்துவம் இருக்கிறது.

பருவ கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருவிழா, உற்சவம், விரதம், வழிபாடு போன்றவற்றை ஆன்மிக ரீதியாக ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

அம்மன் மாதம், அம்பாள் மாதம், ஆன்மிக மாதம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆடி மாதத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என பல சிறப்புகளை கொண்ட ஆடி மாதம், பிறந்திருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் இதை கர்க்கடக மாதம் என்பார்கள்.

சூரியன், குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் பிரவேசிப்பதே ஆடி மாத பிறப்பாகும். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது.

சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருவதையே தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்கிறோம். இந்த மாதத்தில் பகல் குறைவாகவும் இரவு அதிகமாகவும் இருக்கும். காற்று அசுர வேகத்தில் வீசும். அதனால்தான் ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வழக்கு மொழி ஏற்பட்டது.

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. வீடுகள், கோயில்களில் உற்சவங்களும், விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் கோலாகல விழா, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், சுவாமி புறப்பாடு என்று பக்தி மணம் கமழும்.

இந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமும், சிறப்பும் வாய்ந்தவை. ஆடி செவ்வாய் தேடி குளி என்பது பழமொழி. அதாவது, விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சகல தோஷங்கள் நீங்கும்.


கல்யாண வைபோகம் கூடிவரும். புத்திர பேறு உண்டாகும். ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள், யாகங்கள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள். ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்.

கருமாரியம்மனின் அருள் மழையாலே மண் குளிரும் என சொல்வதுண்டு. மாரியம்மனுக்கு ஆடியில் கூழ்வார்த்து அவள் மனதை குளிரச் செய்தால், மாரியாக பொழிந்து மண்ணில் வளம் சேர்ப்பாள் என்பார்கள். அதனால்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என சொல்வார்கள்.

ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, நாக சதுர்த்தி, கருட பஞ்சம், வரலட்சுமி நோன்பு என பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாகும்.அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி பிதுர்க்களை நினைத்து வணங்கி திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையலிட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போர் ஆகியவர்களுக்கு அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு தோஷ, பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.


ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடற்கரைகளிலும், நதிக்கரைகளிலும் குடும்பம் குடும்பமாக கூடி உணவு உண்பதும், ஆடிப்பாடி கொண்டாடுவதும் மரபாகும். புதுமணத் தம்பதிகள் நிலாச்சோறு உண்டு, தாலி மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

கன்னிப் பெண்கள் திருமணம் நடக்க வேண்டி நூல் போன்ற மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொள்வார்கள். திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பிரசித்தி பெற்றது.

கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடிப்பூரம் ஆண்டாள்அவதரித்த திருநட்சத்திரமாகும்.

இந்நாளில் திருமண பாக்யம் கூடி வராமல் இருக்கும் பெண்கள் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த வாரணமாயிரம் என்று தொடங்கும் பாசுரத்தை பாடி வந்தால் திருமண பிராப்தம் கூடி வரும்.


Source: Chinthamani