ஆசை


பகவத் கீதையின் மொத்த கருத்துகளின் சாரம் கடமை அல்லது கர்மாவை பலனை எதிர் பாராமல் செய்வது ஒன்றே.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ள 999 நாமங்களும் ராம என்கிற நாமத்துக்குள் அடக்கம்.

பைபிளின் சாரம் உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்பதாகும்.

நான்கு வேதங்களின் சாரம் பரமாத்மா மட்டுமே.

இப்படி எல்லா பெரிய விஷயங்களும் ஒரு கபுறிப்பிட்ட உயர்ந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅது போல புத்தரின் போதனைகள் அனைத்திற்கும் அடிப்படையான கருத்து ஆசை என்பதே. அதாவது ஆசையை ஒழிக்க வேண்டும் என்பதே சூக்குமக் கருத்தாகும்.


உலகம் முழுவதையும் பரமாத்மாவிடம் இருந்து விலக்கி வைப்பது ஆசை என்னும் சாத்தானே. அதன் வயப்பட்ட அஞ்ஞானி அதை உற்ற நண்பனாகக் கருதி வாழ்கிறான். பிறகு அதனால் விளையும் துன்பங்கள் வலுக்கும் போது ஆசை நல்வாழ்வின் சத்ரு என்பதை உணர்கிறான். ஆனால் அந்த உணர்தல் கொஞ்ச நேரந்தான். மீண்டும் ஆசையெனும் வலையில் வீழ்ந்து மாய்கிறான். ஓட்டைச் சட்டியில் எப்படி நீரை ஊற்றி நிரப்ப முடியாதோ, அதுபோல ஆசைகளை நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது.

எதிரி எங்கிருக்கிறான் ? எப்படி இருக்கிறான் ? என்பது தெரிந்து கொண்டால் அவனை வெல்வது எளிது. அது போல இந்த ஆசை எனும் எதிரி எங்கிருக்கிறான் ? என்று கவனித்தால் அவன் நமது மனக் கோட்டையில் வசிக்கிறான் என்பது தெரிய வரும். மனதையும், புத்தியையும், இந்திரியங்களையும் கைப்பற்றி தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு ஆசை இந்த மொத்த உலகையும் ஆட்டிப் படைக்கிறது.

ஆன்மாவுக்கு சேவை செய்ய அமைந்துள்ள கருவி கரணங்கள் அனைத்தும் ஆசைக்கு அடிமைப்பட்டு ஜீவனை துன்பத்தில் சிக்க வைக்கின்றன. இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவன் வசமுள்ள கருவி கரணங்களை முற்றுகையிட்டுக் கைப்பற்ற வேண்டியது மட்டுமே. அதற்கு முதலில் இந்திரியங்களை முற்றுகையிட்டுக் கைப்பற்றி விட்டால் நம் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது போய் விடுகிறது. ஆத்ம சொரூபத்தை மறைப்பதால் ஆசை பாவ சொரூபமாகும். அத்தகைய ஆசையை வெல்வதே விவேகமும், வீரமும் ஆகும்.

என்றுமே ஸதூலத்தை விட சூக்கும் மேலானது. அதாவது உடலை விட இந்திரியங்கள் மேலானது. இந்திரியங்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. புத்தியினும் மேலானது ஆத்மாவாகும். அதாவது பழத்தின் மேல் தோலில் இருந்து உள்ளே போகப் போக பழத்தின் சூக்குமமான சுளையை அடைகிறோமோ, அது போல தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி என்று அனைத்தையும் வென்று உள்ளே போகப் போக ஆத்ம தரிசனம் வாய்க்கிறது. நமது பருத்த உடலை விட பொறிகள் மேலானவை. ஏனென்றால் உடலை விட பரந்த போக்கில் அவை வினை புரிகின்றன.

மனம் அவற்றை விட சூக்குமமானது. அது உணர வல்லது. அதை விடப் பெரியது புத்தி. மனம் சந்தேகம் கொள்வது. புத்தியோ மெய்ப் பொருளை நிச்சயிக்கிறது. அந்த புத்திக்கும் எட்டாதது ஆத்மா. அது மிகவும் பெரியது. எனவேதான ஆசையானது மனம் முதலியவற்றைப் பற்றிக் கொண்டு ஆத்ம சொரூபத்தை மறைக்கிறது.

ஆசையானது இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும் பற்றி நிற்கும் போதுதான் ஜீவபோதம் வளர்கிறது. இதனால் மனிதனுக்குத் துன்பங்களே விளைகின்றன. ஆனால் மனிதனோ இதையே இன்பம் என்று எண்ணி இருந்து விடுகிறான். இறுதியில் ஒவ்வொரு இன்பமும் துன்பமாகப் பரிணமிப்பதை அறியும் போதுதான் உண்மை புலப்படுகிறது.

இந்திரியங்கள், மனது, புத்தி இவையாவும் இறைவனை அடைந்திட விரும்பும் போது, அருள் தாகம் பெருகும் போது ஆசையெனும் விஷம் அடிபட்டு ஒழிகிறது. ஜீவபோதம் தேய்ந்து, பரபோதம் வளர்கிறது. பேரானந்தம் ஊற்றெடுக்கிறது. அதற்குப் பிறகு துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் பார்த்து விட்டோம் என்று தெரிந்தால் திருடன் எப்படி தலை தெறிக்க ஓடுவானோ, அது போல ஆசையின் சுபாவம் இன்னதென்று நமக்குத் தெரிந்து விட்டால் ஆசை ஒழிந்து போய்விடுகிறது.
Source:harikrishnamurthy |