ஆற்றங்கரையில் அஷ்ட நரசிம்மர்கள்!
"தருவளரும் பூஞ்சோலைத் தஞ்சை'' என்று 108 திருப்பதிக் கோவையில் குறிப்பிடப்படும் தஞ்சையின் வட பகுதியில், "விண்ணாற்றங்கரை' அமைந்துள்ளது. பழையனூர் என்ற பழசை என்னும் ஊரில், பூர்வீகச் சோழர்களது தண்டத் தலைவனாய் மிகச் சிறப்புற்றோங்கிய "விண்ணன்' என்னும் வேளாளப் பிரபு வாழ்ந்து வந்தார். இவர் பழசைப் பிரானுக்குக் காவிரி நீர் கொண்டு அபிஷேகம் பண்ணுதற் பொருட்டுத் தன் பெயரால் ஆறு ஒன்று வெட்டினார். அதற்கு "விண்ணாறு' என்று பெயர். மராட்டிய மன்னர் பிரதாப சிம்மன் (கி.பி. 1739-1763) தஞ்சையை ஆண்டு வரும் காலத்தில், வீரபத்திரையா என்ற இசை விற்பன்னர், விண்ணாற்றங்கரைக்கு வந்தார். அவரை தஞ்சை மன்னர் தமது அரண்மனைக்கு அழைத்துச் சென்று கௌரவித்ததாக "வாக்கேயகார சரிதம்' விளம்புகின்றது. தெலுங்கு மொழியில் அமைந்த "சங்கீத சம்பிரதாயப் பிரதர்சனி' கூறும் வாக்கேயகார சரிதத்தில் விண்ணாற்றங்கரை, "வெண்ணேட்டி கட்டம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு சிறப்புற்று விளங்கும் விண்ணாற்றங்கரையில் ஸ்ரீதஞ்சபுரீச்வரர், ஸ்ரீசொக்கநாதர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், சந்தியா மண்டபம் ஸ்ரீசுந்தரேசர், ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆகியோருக்கு ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீ நீலமேகர், ஸ்ரீ மணிபர்வதர், ஸ்ரீ வீரநரசிம்மர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீகல்யாண வேங்கடேசர் ஆகிய விஷ்ணு கோயில்களும் இங்குள்ளன. இப்படி மொத்தம் பத்து தேவ ஸ்தானங்கள் விண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளதாய் "தஞ்சைத் திருக்கோயில்கள்' என்னும் நூல் கூறுகின்றது.இவற்றுள் தஞ்சை, யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்மர் கோயிலில் கருவறை வீரநரசிம்மர், ஆழியுள் அமர்ந்த நரசிம்மர், வைகுந்த நரசிம்மர், கல்யாண நரசிம்மர், விதானத்து வீரநரசிம்மர் ஆகிய ஐவரை தரிசிக்கலாம். தஞ்சை மாமணிக்கோயிலாகிய ஸ்ரீநீலமேகர் கோயிலில் அபயவரத நரசிம்மர், செங்கமலவல்லித் தாயார் சந்நிதியில் கம்பத்தடி யோக நரசிம்மர், மேலும் வலவெந்தை நரசிம்மர் ஆகிய மூவரையும் சேர்த்து ஆற்றங்கரை விஷ்ணு ஆலயங்களில் அஷ்ட (எட்டு) நரசிம்மர்களை நாம் கண்டு வணங்கலாம்.கருவறை வீர நரசிம்மர்தஞ்சை யாளி நகர் சிங்கப் பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருப்பவர் இவர். வீரம் என்ற குணத்தின் வடிவாய் இலங்குபவர். தஞ்சகாசுரன் இறுதியில் எம்பெருமானிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் தஞ்சை யாளி வீர நரசிங்கமாகவே இன்றளவும் அருள்பாலித்து வருகிறார். திருமகள், மண் மகளுடன் சேர்ந்து பரமபதத்தில் அருள்பாலித்து வரும் வைகுந்தநாதனே தஞ்சகாசுரனுக்கு மோக்ஷ நிலையில் நரங்கலந்த சிங்கமாகக் காட்சி கொடுத்தார். ஆதலால் இத்திருத்தலத்திற்கு "மோக்ஷ ஸ்தலம்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.ஆழியுள் அமர்ந்த நரசிங்கன்விண்ணாற்றங்கரையிலுள்ள விஷ்ணு ஆலயங்கள் அனைத்துமே கிழக்கு நோக்கியுள்ளன. சிங்கப் பெருமாள் கோயிலில் வீரநரசிங்கன் முக்கியத் தெய்வம். இவர் சக்கரத்தினுள் அமர்ந்துள்ளார். இவருக்குக் கீழே பிரஹலாதன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரையும் நின்ற நிலையில் நிறுவி, நடுவே யோக நரசிங்கனை அமர்ந்த கோலத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர். சிங்கப் பெருமாள்கோயில் நரசிங்கனை ""தஞ்சை யாளியைப் பொன்பெயரோன் நெஞ்சமன்றிடந்தவன்'' எனத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளதை நினைவிற் கொண்டேதான் பிரஹலாதன், ஹிரண்யகசிபு ஆகிய இருவர் புடைசூழ ஆழியுள் அமர்ந்த நரசிங்கனை அமைத்திருக்கலாமெனத் தோன்றுகிறது.வைகுந்த நரசிம்மர்கருவறை வீரநரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீரநரசிங்கன் ஆகியோர் அனைவரும் இடதுகாலைத் தொங்கவிட்டபடி காட்சி தருகின்றனர். இருப்பினும் வீரநரசிங்கன் கோயிலான சிங்கப் பெருமாள் கோயிலின் கொடி மரத்தில் உபய நாச்சிமார்கள் இருமருங்கிலும் அமர்ந்தவராய் வைகுந்த நரசிம்மர், தன்னுடைய வலது காலைத் தொங்கவிட்டபடி காட்சி தருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.கல்யாண நரசிம்மர்தஞ்சை யாளிநகர் சிங்கப் பெருமாள் கோயிலினுள்ளே சென்று திருச்சுற்றில் கண்ணில் படும் வேத சுந்தர விமானத்தின் (மூலவர் விமானத்தின்) தென்மேற்கு மூலையில் (உச்சிஷ்ட்ட கணபதிக்கு மேற்கே) கல்யாண நரசிங்கனை காணலாம். லஷ்மி நரசிம்மன் என்று சொன்னால் லஷ்மியைத் தன் இடது பக்கம் அமர்த்திய கோலம்தான் நம்முடைய நினைவிற்கு வரும். மங்கையோடு நரசிங்கன் மனமகிழும் மாநரசிங்கனாக, விண்ணாற்றங்கரை நரசிங்கப் பெருமாள் கோயிலில் தென்திசை நோக்கிய திருமுகமண்டலத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவரது வலத்தொடை மீது அமர்ந்த திருக்கோலத்தில் விளங்குகிறாள் அன்னை மகாலஷ்மி.திருமகளின் இடது கரம் மேலே நிமிர்த்திய நிலையில் தாமரை மலரைத் தாங்கியும், வலது கரம் கீழே தொங்கவிடப்பட்டுள்ள நிலையிலும் அமைக்கப் பெற்றுள்ளது. அன்னையின் இரு பாதங்களும் மண் நோக்கி உள்ளன. நரசிங்கனோ வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வீராஸனத்தில் காட்சி நல்குவதோடு, மேலிரு கரத்தில் சங்குச் சக்கரங்களைப் பெற்றும், இடது கீழ்க்கையினைத் தன் தொடை மீது நிறுத்தியும், வலது கீழ்க்கையால் திருமகளை அணைத்தவாறும் விளங்குகின்றார். இத்திருவுருவம் காண்பதற்கரிதான ஒன்று.விதானத்து வீரநரசிம்மர்தஞ்சை யாளி நகர் சிங்கப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு வெளிப்புறம் வடக்குச் சுவரில் கோமுகத்திற்கு மேலும், ஆண்டாள் சந்நிதி வாயிலுக்குத் தெற்கிலும் வட திசையை நோக்கிய வண்ணம் காட்சி தருபவரே விதானத்து வீரநரசிம்மர், "பெரிதுக் கெல்லாம் பெரியவர்' என்ற வேத வாக்கியத்திற்குப் பெருமை சேர்த்திடும் வகையில் கருவறையில் பெரிய உருவாகக் காட்சி நல்கும் அந்த வீரநரசிங்கன், விதானத்தில் மிகச் சிறியவராக அமைந்துள்ளார். கர்நாடக மாநிலம், மேல்கோட்டை திருநாராயணபுரத்தின் தாயார் சந்நிதி முகமண்டபத்தில் காணக் கிடைக்கும் மிளகாழ்வார்போலே "அணோரணீயான்' எனப்படும் சுருதிச் சொல்லை உண்மையாக்கிடும் வண்ணம் சிறிய வீரநரசிங்கனாக இவர் இருக்கின்றார். உபய நாச்சியார்கள் இன்றித் தனித்தவாறே அமர்ந்த நிலையில் கருவறை வீரநரசிம்மர் போலவே சேவை சாதிக்கின்றார்.அபய வரத நரசிம்மர்இந்நரசிம்மரை தரிசிக்க விண்ணாற்றங்கரை ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இத்திருக்கோயிலின் கருடன் சந்நிதி விமானத்தில் தெற்கு முகமாக சங்கு, சக்கரம், அபயம், வரதம் போன்ற அமைப்புகளுடன் ஸ்ரீ நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருளாசி புரிகிறார். அழகிய உருவாக அரும்பெரும் சுதைமூர்த்தியாகத் திகழ்பவர் இந்த அபய வரத நரசிம்மர்.கம்பத்தடியோக நரசிம்மர்ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா உடனுறை நீலமேகப் பெருமாள் கோயிலின் தாயார் சந்நிதியில் முகமண்டபத் தூணில் தென்திசை நோக்கியவாறு கம்பத்தடி யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இவரது உருவம் காண்போரின் கண்களைக் கொள்ளை கொள்கின்றது. அவ்வகையில் அழகிய சிற்ப அமைதியுடன் அழகோடு அமைந்த யோக நரசிம்மரைத் தஞ்சை பிருஹதீச்வரர் ஆலயத்திலும் காணமுடிகின்றது. கம்பத்தடி யோக நரசிங்கன் தென்திசை நோக்க, கீழைத் திசையில் வீர ஆஞ்சநேயர் காட்சி கொடுக்கின்றார். இம்மூர்த்திகளை 108 முறை வலம் வந்தால் எண்ணியவை இனிது நிறைவேறும் என்பது தொன்று தொட்டுக் கூறப்பெறும் சிறப்புச் செய்தியாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும் இந்த வகை நரசிம்மர் அருளாசி புரிகின்றார்.வலவெந்தை லஷ்மி நரசிம்மர்ஸ்ரீதஞ்சை மாமணிக்கோயில் நீலமேகப் பெருமாள் சந்நிதிக்கு வடகிழக்குப் பகுதியின் முகமண்டப வடமேற்கு மூலையில், லஷ்மியைத் தன் வலத் தொடையில் அமர்த்தியுள்ள அற்புத நரசிங்கனை நம்மால் காண முடிகிறது. அவரது மேலிரு கரங்கள் திருவாழித் திருச்சங்கங்களை முறையே பெற்றும், கீழிரு கரங்களில் வலது கை பிராட்டியை அணைத்தவாறும், இடது கீழ்க்கையினைத் தன் தொடை மீது இருத்தியும் அமைக்கப் பெற்றுள்ளன. அவரது வலத் தொடை மீது, அமர்ந்த திருக்கோலத்தில் விளங்குகிறாள் அன்னை மகாலஷ்மி. அன்னையின் கரங்கள் அஞ்சலி முத்திரையுடன் அமைக்கப் பெற்றுள்ளன. அவளது இரு கால்களும் பூமியை நோக்கிய நிலையில் உள்ளன. இம்மூர்த்தியினைக் குறித்த சிறப்புச் செய்திகள் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் அஹிர்புத்ன்ய ஸம்ஹிதையிலும், ஸ்ரீவைகானஸம்-காஸ்யப ஞானகாண்டத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவை தஞ்சை சரசுவதி மஹால் வெளியிட்டுள்ள பராசர úக்ஷத்திர மகாத்மியத்தில் விவரிக்கப்பெற்றுள்ளன.ஸ்ரீவீரநரசிங்கனையும் ஸ்ரீநீலமேகனையும் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடுவதோடு ஆற்றங்கரையில் அஷ்டநரசிம்மர்களையும் சேவித்த புண்ணியத்தையும் பெறலாம்.
Posted by தஞ்சை மைந்தன்


V.Rajagopalan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends