Announcement

Collapse
No announcement yet.

தர்மம் காக்க ஓர் அவதாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்மம் காக்க ஓர் அவதாரம்

    தர்மம் காக்க ஓர் அவதாரம்


    Click image for larger version

Name:	krishna.jpg
Views:	1
Size:	74.3 KB
ID:	35002

    தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும், தர்ம வழி நடக்கும் எளியோரைக் காக்கவும் யுகந்தோறும் அவதரிக்கிறேன்'' என்றான் கண்ணன் கீதையில். அந்த வாக்கினைக் காக்க தர்மத்துக்கு நலிவு ஏற்படும்போதெல்லாம் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் நிகழ்கிறது.


    கிருத யுகத்தில் இரணியகசிபுவை அழிக்க நரசிம்மமாக, திரேதா யுகத்தில் ராவணனையும் கும்பகர்ணனையும் அரக்கர்களையும் அழிக்க ராமனாக, துவாபர யுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனாதியரை அழிக்க கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு.


    ஆவணி மாதம், அஷ்டமி திதியுடன் கூடிய ரோகிணி நன்னாள். கண்ணன் அவதரித்து, அந்த நன்னாளை புனித நாளாக மாற்றிக் காட்டினார். குறிப்பாக அஷ்டமியும் நவமியும் விலக்கப்பட்டவையாக இருக்க, நவமியில் ராமனாகவும், அஷ்டமியில் கண்ணனாகவும் அவதரித்து அவற்றுக்கு மகத்துவத்தைத் தேடித் தந்தார் ஸ்ரீவிஷ்ணு.


    தர்மத்துக்கு விரோதமாக அநியாயங்களைச் செய்து, எளியோரைத் தம் வலிமையால் நலியச் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமா தேவி. ஸ்ரீவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தைக் காப்பார் என வாக்குறுதி அளித்தார் பிரம்மா. அதன்படி ஸ்ரீகிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது.


    கபட அவதாரம்: கபடர்களுக்கும் சூழ்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அவதரிக்க வேண்டிய நிலை என்பதால், ஸ்ரீவிஷ்ணு தனது மாயா சக்தியால் இந்த அவதாரத்தையே ஒரு நாடகமாக நடத்திக் காட்டினார்.


    தனது தங்கையான தேவகிக்கும் வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று அசரீரி கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகியைக் கொல்ல முயன்றான். அப்போது தடுத்த வசுதேவர் தனக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதன்படி சிறையில் அடைத்து அவர்களைக் கண்காணித்தான் கம்சன். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாகக் கருவுற்றதும், திருமால், மாயா தேவியைப் படைத்து, "தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபன் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாகு' என்றார்.

    அதன்படி, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக எழுந்த பேச்சை கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் வளர்ந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாகக் கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார்.

    ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே அருள்புரிந்தார்.


    அதன்படி வசுதேவரும் செய்தார். அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, "துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கெனவே பிறந்து விட்டான்' என்று சொல்லி மறைந்தது.


    இப்படி அவதாரம் செய்வதே ஒரு நாடகமாக இருந்ததால், கண்ணனின் அவதாரம் எங்கினும், முள்ளை முள்ளால் எடுக்கும் சூழ்ச்சித் திறனும், எதிரியை வெல்லும் வகையும் நிறைந்து, தர்மத்தை நிலைநாட்டச் செய்தது.


    அவதார தினம்: ஆவணி தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் ஆகிய நாட்களில் கிருஷ்ண ஜெயந்தி என்ற ஸ்ரீஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தினம், மிக முக்கியப் பண்டிகை தினம்தான். போர்க் களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூல் பகவத் கீதை ஆனது.


    இந்த நன்நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களான சீடை, அப்பம், அதிரசம், பால், வெண்ணெய் முதலியவற்றைப் படைத்து, கிருஷ்ணரைத் தங்கள் இல்லத்துக்கு வரவழைக்கும் விதமாக, சிறு குழந்தையின் பாதங்களை தரையில் கோலமாக வரைந்து இந்நாளைக் கொண்டாடுகிறோம்.


    தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணன், கோபியர் போல் அலங்கரித்து மகிழ்வு அடைகிறோம்.இதனால் குறிப்பாக, இல்லங்களில் மழலைச் செல்வம் தழைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    http://dinamani.com/weekly_supplements/vellimani/2013/08/22/
Working...
X