ஸ்ரீநிவாசன் சங்கு சக்கரமேந்திச் சைவர்களின் சந்தேகம் தீர்த்தல்


குரு பரம்பரை ப்ரபாவத்திலிருந்து ஒரு நிகழ்வு...


உடையவரை அவரின் சிஷ்யர்கள் தண்டனிட்டு ‘தேவரீர் இதர சமயங்களை நிராகரித்து நம் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஸ்தாபனம் பண்ணி அருளினீர்...இனி தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திரிந்து திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்ய தேசங்களையும் சேவித்து வரவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தார்கள். இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம் தொடங்கி, பாண்டிய மண்டல திவ்ய தேசங்களை சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்ய தேசங்களுக்கு சென்று, வட நாட்டுக்கு எழுந்தருளி, திருசாலக்கிராமம், திருவதரி முதலான திவ்ய தேசங்களையும் சேவித்தபடியே திருமலை வந்தடைந்தார்.


தாழ்சடையனும் நீண்முடியனும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றா யிசைந்து


என்று ஆழ்வார் அருளினபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஸ்ரீநிவாசனுக்கு இலக்கணமாக நீள்முடியும், சங்கு சக்கர திவ்யாயுதங்களும், திரு யஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை செய்யும் ஜிவாத்மாவுக்கு பொருந்தும்படியான தாழ்சடை, ஒள்ளிய மழுப்படை, பாம்பு ஆபரணம் போன்ற சிவ-லக்ஷணங்களும் சேர்ந்திருந்தபடியால், சைவர்கள் ஸ்ரீநிவாசனை தங்கள் சிவன் என்று வாதாடினார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாததால் உடையவர், “உங்கள் தேவனுக்கு அடையாளமான திருசூலத்தையும், உடுக்கையும், எங்கள் பெருமானுக்கு அடையாளமான சங்கு சக்கரத்தையும் இத்தெய்வத்திற்கு முன்னே வைப்போம்; எதை ஏற்றுக்கொள்ளுமோ, அத்தெய்வமாக கொள்வோம்” என்று கூறினார். எல்லோரும் சம்மதித்தனர். அதுபோலவே, ஆயுதங்களை எம்பெருமான் திருமுன்பே வைத்துக் கர்பக்ருஹத்தை யாரும் இல்லாதபடியும் புகமுடியாதபடியும் நன்கு ஆராய்ந்து கதவை பூட்டிவைத்தனர்.


மறுநாள் விடிந்த பிறகு கதவை திறந்து பார்க்கையில், எம்பெருமான் சங்கு சக்கரம் கையில் ஏந்தி சேவை சாதித்தான். இதைக் கண்ட சைவர்கள் தம் ஆரியாமைக்கு வருந்தி ஸ்ரீநிவாசனின் புகழ் பாடினார்கள். எம்பெருமானாரோ ஆனந்தக் கண்ணீர் பெருகி ஸ்ரீநிவாசனை வணங்கி நின்றார்.


“அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்” என்று இராமானுஜர் திருமஞ்சன கட்டியத்தில் நாம் சேவிப்பதின் தாத்பரியமும் இதுவே.

Source:
http://madhurakavidasan.blogspot.com/2013_07_01_archive.html

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends