மந்திரங்களை தேவதைகளின் சப்த ரூபம்மிருகங்களில் பூனையைவிட நாய், நாயைவிடகுதிரை, குதிரையைவிட யானை, யானையைவிடச் சிங்கம் என்று ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று அதிக சக்தி உடையதாக இருக்கிறதல்லவா ? இப்படியே சிருஷ்டியில் மநுஷ்யர்களைவிட அதிக சக்தி உடையவர்களும் இருக்கிறார்கள். அவர்களையே தேவர்கள் என்பது. அவர்கள் இந்த லோகத்தில் பஞ்ச பூதங்களில் கரைந்து இருப்பதோடு, கண்ணுக்குத் தெரிகிற ரூபத்தில் தேவலோகத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். மந்திரங்களை நன்றாக ஜபித்து ஸித்தி அடைந்தால், ஸுக்ஷ்ம ரூபத்தினால் அவர்கள் செய்கிற அநுக்ரஹங்களைப் பெறுவதோடு, தேவ லோகத்தில் அவர்களுக்கு உள்ள ஸ்தூல ரூபங்களையும் தரிசனம் பண்ணலாம். இந்த மந்திரங்களுக்கு ஆதாரமான மூல சப்த சலனங்களால்தான் அவர்கள் பரமாத்மாவில் தோன்றியது. எனவே இதையே திருப்பிச் சொல்வதானால் மந்திரங்களை தேவதைகளின் சப்த ரூபம் என்று சொல்லலாம்.

யக்ஞத்தில் ஒவ்வொரு தேவதை பற்றியும் மந்திரம் சொன்னால் அந்த தேவதை அங்கு ஆவிர்பாவமாகிறது. நல்ல பக்குவிகளுக்கு இது பிரத்யக்ஷமாகவே தெரியும். தெரியா விட்டாலும் அந்த தேவதா சக்தி அங்கு ஸக்ஷ்மமாக வெளிப்பட்டிருக்கும். ஆனாலும், நேரே அதற்கு ஆஹதி தரக்கூடாது. பத்திரம் எழுதினால், Bond எழுதினால் அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும், ரிஜிஸ்திரார் முத்திரை போடவேண்டும் என்றெல்லாம் இருப்பது போல் வேதத்தில் சொல்லியிருக்கிற விதிகளின்படி அக்னியில் போட்டால்தான் அது அவர்களுக்கு எந்த விதத்தில் ஏற்கத்தக்கதோ அந்த விதத்தில் போய்ச் சேரும்.

' அக்னி எரிந்துவிட்டதே, மிஞ்சியதை யக்ஞ சிஷ்டமாக (பிரஸாதமாக) யாகம் பண்ணிநவர்களே சாப்பிட்டுவிட்டார்களே, அது எப்படி தேவர்களை அடைய முடியும் ?' என்று ஸந்தேஹப்படக் கூடாது. தேவர்கள் நம் மாதிரி பாஞ்ச பௌதிகமான (பஞ்சபூத மயமான) சரீரம் படைத்தவர்களலல்ல. எனவே நமக்குள்ள மாதிரி ஸ்தூலமான ஆஹாரம் அவர்களுக்குத் தேவை இல்லை. நமக்குங்கூட ஆஹாரங்களை வயிற்றிலுள்ள ஜாடராக்னி எரித்து, அதன் ஸத்தை மட்டும்தானே ரத்தமாக்கி அனுப்புகிறது. இப்படியே யக்ஞ அக்னியானது ஆஹதிகளின் ஸக்ஷ்மமான ஸாரத்தை தேவர்களுக்கு அனுப்புகிறது.

யக்ஞம் வரையில் போக வேண்டும் என்பதில்லை. இந்தக் காலத்திலும் டின்னர், ஃபீஸ்ட் நடத்துகிறார்கள். வெள்ளைக்கார நாகிரிகப்படி நடத்தினால் அதில் இன்னொருத்தனின் ஸெளக்கியத்துக்காகச் சாப்பிடுவதாகச் சொல்லிக் கொண்டு ' டோஸ்ட் ப்ரபோஸ் ' பண்ணகிறார்கள். சாப்பிடுவது இவர்கள் ; அதன் பலன் இன்னொருவனுக்கு என்கிறார்கள் ! ஒருத்தன் சாப்பிட்டால் அது அவனுக்குத் தானே புஷ்டி தரும் ? இன்னொருத்தனைப் பார்த்து ' உன் புஷ்டிக்காக நான் சாப்பிடுகிறேன் ' என்று இவன் டோஸ்ட் சொன்னால், எப்படி அது அந்த இன்னொரு ஆசாமிக்குப் போய்ச் சேரும் ? இந்த மாதிரி கேட்பது தப்பு. இதெல்லாம் ஒருவகையான நல்ல மனோபாவம். மனஸார இப்படி நினைத்து நல்லதைப் பண்ணினாலே, எண்ணத்தின் சக்தியால் ( thought - power- ஆல்) மற்றவனுக்கு அது க்ஷேமம் தரும் என்று தான் இப்படிப் பண்ணுகிறார்கள்.

ஸாக்ஷத் பரமாத்மாவின் சக்தியே எண்ண அலைகளாகி, அவையே சப்த அலைகளாகி மந்திரம் என்று நமக்கு வந்திருக்கிற போது, அவை வாஸ்தவமாகவே மிகுந்த க்ஷேமசக்தி நிரம்பியதாகத்தான் இருக்கும். இப்படி மந்திர பூர்வமாகத் தரும் ஆஹதி தேவர்களின் சக்தியை விருத்தி பண்ணுகின்றன. மநுஷ்யர்களைவிட தேவர்கள் ஜாஸ்தி சக்தி பெற்றவர்களென்றாலும், அவர்களும் பூரண சக்தர்களல்ல. நிறைந்த நிறைவாக நிரம்பி விட்டவர்களல்ல. அவர்களுக்கும் ஆசைகள் உண்டு. தேவைகள் உண்டு. அவற்றை இந்த யக்ஞங்களே பூர்த்தி செய்கின்றன. லோக வாழ்க்கையை நமக்கு அவர்கள் அநுகூலமாகித் தருகிறார்கள் என்றால், நாமும் அவர்களுடைய சக்தியை விருத்தி செய்து, அவர்களுடைய இஷ்டங்களை நிறைவேற்றித் தருகிற உபகாரத்தை யக்ஞத்தின் மூலம் பண்ணவேண்டும். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தோடு நாம் யக்ஞங்களைப் பண்ணினால், தேவர்களும் அப்படியே நாம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பாவித்து நமக்கு அநுக்ரஹம் செய்வார்கள். இப்படி பகவான் கீதையில் ( III.1.1) சொல்லியிருக்கிறார்.


'' தேவான் பாவயதாநேந தே தேவா பாவயத்து வ :|

பரஸ்பரம் பாவயந்த : ச்ரேய : பரமவாப்யஸ்த ||''

இப்படி நம்முடைய மதத்தில் பல யக்ஞங்கள் செய்து தேவர்களைப் ப்ரீதி செய்வித்து ஈச்வராநுக்கிரஹத்திற்குப் பாத்திரராவதைச் சொல்லியிருக்கிறது.

--- தெய்வத்தின் குரல் .
Hara Hara Sankara.

Source:Vidya Raju

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends