தற்காலத்தில் கல்வித்திட்டம்

இக் காலத்தில் - அதிலும் 'ஸ்வதந்திரம்' என்பதாக ஒன்று வந்திருப்பதாகச் சொல்லப்படும் காலத்திற்குள்தான் - ஹ்ருதயத்தை அடியோடு புறக்கணித்து விட்டு மூளைக்கு மட்டும் சரக்கு ஏற்றுகிறதே கல்விமுறை என்றாகிவிட்டது. ஸ்வதந்திரத்திற்கு முந்தி வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்த கல்வி திட்டம் நம்முடைய வாழ்முறையைப் பாழ்படுத்தி அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே நம்மை ஆக்குகிற உத்தேசத்துடன், ஆனாலும் அப்படித் தெரியாமல் ஏதோ நம்மை ரொம்ப முன்னேற்றிவிடுகிற ஒன்றாக அவர்களால் மிகவும் தந்திரமாக வகுக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆட்சி முடிந்து ஸ்வராஜ்யம் வந்தபின் அந்த முறை மாறவேண்டும் என்று ஆசைப்பட்டோம். மாறவும் மாறிற்று. எப்படியென்றால், முன்னைவிட மோசமான கல்வி முறையாக!இதில் கல்வியும் இல்லை, முறையும் இல்லை.

ஏன் நிஜமாகவே மூளைக்காவது சரக்கு ஏற்றுகிறார்களா என்றால் அதுவும் கேள்வியாகத்தானிருக்கிறது!யோக்யதாம்சம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி ஜாதி, பணபலம், மிரட்டல் என்கிறவற்றை வைத்துக் கல்வி, பட்டம் என்றால் வேறே எப்படி இருக்கும்? லஞ்சத்தை லஞ்சம் என்று அஸல் ரூபத்திலும், டொனேஷன் என்ற பெயரிலும் கொடுத்து அட்மிஷன் பெறுவது, பாஸ் போடப் பண்ணுவது, மிரட்டி உருட்டியுங்கூடப் பாஸ் போடப் பண்ணுவது, இப்படி மாணவன் பண்ணுவதற்கு வாத்தியார்களும் மானேஜ்மெண்டும் இடம் கொடுத்து, ஸலாம் போடுவது, போதாக்குறைக்கு கவர்மென்டே வேறு பண்ணுகிற பேதம் - எந்த வரம்பில் நின்றால் முறை என்கிறதை யோஜித்துப் பார்க்காமல் வோட்டைப் பற்றியே யோஜனை பண்ணிக் கொண்டு, நாளுக்கு நாள் ஜாஸ்தியாக்கிக் கொண்டிருக்கும் ரிஸர்வேஷன்' - என்று ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இந்த தேசத்தில் தர்ம ந்யாயமான கல்வி முறை நடக்கிறதா, நடக்குமா என்பதே கேள்வியாயிருக்கிறது!'குரு', 'சிஷ்யர்' என்று ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ லக்ஷணங்கள் - யோக்யதாம்சங்கள் - கொடுத்து ஏற்பட்டிருக்கும் பெயர்களுக்கும், தற்போது பெருகி வரும் டீச்சர்கள் - ஸ்டூடன்ட்கள் இருக்கிற விதத்திற்கும் எங்கேவுக்கு எங்கேயோவாக இருக்கிறது!நெடுங்காலமாக இருந்து வந்த ஒரு உன்னதமான கலாசாரம் இப்படி ப்ராணாபத்தாக அரிபட்டுக்கொண்டே போய், தேசத்தின் வருங்கால ப்ரஜைகளை நல்லவர்களாவதற்கு எந்த ஏற்பாடுமே இல்லாதபோது, அதை சீர்ப்படுத்த வேண்டும் என்ற ப்ரக்ஞையே அரசாங்கத்திற்கு இருக்கிறதாகத் தெரியாததுதான் எல்லாவற்றையும் விட ரொம்பவும் கவலை தருவதாக இருக்கிறது.

ராஜாங்கத்திற்கு -டில்லியில் இருப்பது, ஸ்டேட்களில் இருக்கிறவை எல்லாவற்றுக்குந்தான் - திரும்பின பக்கமெல்லாம் பிரச்னையாயிருக்கிறதென்பதும் வாஸ்தவந்தான். இருந்தாலும் வருங்காலத்திற்கே விதை முதல் கல்விதானே? அதற்கு தந்து ஸரிப்பண்ண வேண்டுமோ, வேண்டாமோ? அப்படியில்லாமல், இருக்கிறதும் இன்னும் சீர் கெட்டுப்போகப் பண்ணிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ரொம்பக் கவலையாயிருக்கிறது. உங்களையும் கவலைப்படுத்துவது தவிர இந்தப் பேச்சால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா, தெரியவில்லை தற்கால சாந்தியாகவாவது நம் கவலையைப் போக்கிக்கொள்ள இதுவரை பார்த்த பூர்விகர்கள் கதைக்கேதான் போகணும்...

போகணும் என்கிறேனே தவிர, 'பழங்கதையைப் பேசினால் மட்டும் போதுமா? கண்முன் நடக்கிறதற்கு நமக்குத் தெரிந்த நல்ல வழியைச் சொல்லாமலிருக்கலாமா' என்றும் தோன்றுகிறது. அதனால் இக்கால ஆசிரியர்மார்களுக்கே அப்பீல் செய்து கொண்டு பார்க்கிறேன்.

அவர்கள்தானே தற்காலத்திலும் தங்கள் ஜீவனோபாயமாகவே கல்வியை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வேறே வேலை கிடைக்கவில்லை என்பதனால் இதற்கு வந்ததாக இல்லாமல், வருங்காலப் பிரஜைகளின் அறிவை மேம்படுத்தும் கல்வி என்ற உத்தமமான தொழில் தங்களுக்கு வாய்த்திருப்பதன் அருமையை, அருமை பெருமையை அவர்கள் உணர்ந்து ஆசிரியத் தொழிலை ஒரு ஆராதனையாக ஆற்ற வேண்டும். அதோடு, இவ்வளவு நேரம் சொன்னதுபோல் நிஜமான தரத்தைப் பெற்றதாகும்.

குருகுலவாஸம் மாதிரி இந்த ஆசிரியர்கள் ஸதா காலமும் மாணவர்களைக் கூட வைத்துக்கொண்டு வாழவில்லை. ஆனால், கூட வைத்துக்கொண்டு வாழும் போதுதான் ஒரவர் தன்னுடைய வாழ்க்கை உதாரணத்தால் மாணவர்களின் குணாபிவிருத்திக்கு வழி காட்ட முடியும் என்றும், பள்ளி நேரம், அதில் பீரியட்கள் என்றும் நடைமுறை இருந்து அப்படி 'டீச்' பண்ணும்போது, அறிவுக்கு மட்டுமேயான வெறும் பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுப்பதற்கு அதிகமாக குணாபிவிருத்தி விஷயத்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுவதற்கில்லை என்றும் தீர்மானித்து விடக் கூடாது.

குருவின் கூடவே வாழும்போது மாணவர் பெறுகிற வாழ்க்கை உதாரணம் ரொம்பவும் கூடுதலானதுதான், ஆக்ஷேபணையேயில்லை. அதனால், ஸ்கூல் நேரத்தில் மட்டும் மாணவர்கள் பழகும் பல ஆசிரியர்களின் வாழ்க்கையுதாரணம் அவர்களை 'டச்'சே பண்ணாது என்று அர்த்தமில்லை. இளம் உள்ளங்களில், தங்களுன் கொஞ்சமோ நஞ்சமோ எவ்வளவு பழகுகிறவர்காளாலும் அவர்களின் தரத்தைப் பொறுத்து நல்ல முறையிலோ, கெட்ட முறையிலோ ஒவ்வொரு அளவுக்கு 'இம்ப்ரஷன்' பதிந்து, அந்த 'இன்ஃப்ளூயென்'ஸில் பசங்களும் அதே வழியில் தாங்களும் போகத் தூண்டதல் பெறுவார்கள்.

இக்கால ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதும் மாணவர்கள் பாடத்தை மாத்திரமின்றி, பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியரையும்தான் கவனிக்கிறார்கள். பாடம் அவர்கள் மனஸில் பதிகிற மாதிரிதான், அந்த ஆசிரியரின் நடத்தையும் பதிகிறது. பாடத்தைக் கவனிக்காமலும், அது மனஸில் பதியாமலும் போகிற மந்தமான மாணவனும்கூட ஆசிரியரின் நடத்தையை கவனிப்பான், அது அவன் மனஸில் பதியும். 'அப்படி மாணவர்களுக்குப் பதிவது அவர்களை நற்குண. நல்லொழுக்கங்களில் கொண்டு விடவேண்டும். அந்த ரீதியில் நாம் உத்தமமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு ஜீவனோபாயம் தருகிற அந்த மாணவ ஜீவர்களுக்குத் தாங்கள் த்ரோஹம் செய்ததாகிவிடும்' என்கிற அளவுக்கு ஆசிரியர்மார்கள் ஆழமாகக் கருதவேண்டும்.

வாழ்க்கையுதாரணம் என்ற முக்யமான அம்சம் ஒரு பக்கம் இருக்கட்டும். பாடம் போதிப்பது என்றே வருகிற அம்சத்திலும் ஆசிரியர்கள் ஏனோதானோ

என்றில்லாமல். அந்தரங்கபூர்வமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும், பள்ளிக்கூடத்தில் ஏனோதானோ என்று 'டீச்' பண்ணி விட்டு. அதனாலேயே பசங்கள் தங்களிடம் ட்யூஷன் வைத்துக் கொள்ளும்படிச் செய்து. தங்களுடைய ஸம்பாதியத்தை விருத்தி செய்துகொள்ள ஒரு ஆசிரியர் எண்ணினாரானால் அதைப் போன்ற தர்ம விருத்தமான (தர்மத்திற்கு விரோதமான) பாபம் இன்னொன்றில்லை, புண்ய வசத்தால் கிடைத்திருக்கும் 'டீச்சிங்' வேலையை இப்படிப் பாபகரமாகப் பண்ணிக்கொள்ளலாமா? அந்த மாதிரி (ரீதியில்) நினைப்பதற்கே அவர்கள் பயப்படவேண்டும்,

மற்ற தொழில்களுக்குப் போகிறவர்கள் தாங்கள் படித்த படிப்பை உபாயமாகக் கொண்டு அந்தத் தொழிலை ஆற்றுகிறார்கள். அநேக உத்யோகங்களில் இருப்பவர்கள் செய்யும் தொழில்களில் அவர்கள் படித்த படிப்பு நிறையவோ, கொஞ்சமோ 'அப்ளை' ஆகிறது. அதோடு ஸரி. படித்த படிப்பு கொஞ்சங்கூடப் பிரயோஜனமாகாத உத்யோகங்களிலும் பலர் இருக்கிறார்கள். பி.எஸ்ஸி. கெமிஸ்டரி படித்துவிட்டு ஏ.ஜி.ஸ் ஆபிஸில் க்ளார்க் என்றால்? இப்படியெல்லாம் இல்லாமல், படித்த படிப்பு அப்புறம் செய்யும் தொழிலுக்கு உபாயமாயிருக்கிறது என்பதற்கும் மேலே, அந்தப் படிப்பே மூலதனமாக இருப்பது ஆசிரியத் தொழிலில்தான். தாங்கள் மாணவர்களாக இருந்தபோது படித்த படிப்பையே ஆசிரியத் தொழிலில் அப்புறம் அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்க டீச் பண்ணுகிறார்கள். அவர்க்ள ஒரு பக்கம் கற்றுக் கொடுப்பவர்களாக இருந்துகொண்டே மறு பக்கம் கற்போராகவும், ஏற்கெனவே படித்ததையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித் திரும்பத் திரும்ப அதே பாடங்களை அவர்கள் டீச் பண்ணுவதால், அந்தப் பாடங்களிலே அவர்கள் முழுக் கருத்தும் செலுத்தினால் அவர்களுக்கே பழைய பாடங்களிலிருந்து புதுப் புது விஷயங்கள் தெரிய ஆரம்பிக்கும். முக்யமாக, மேல் படிப்பிலே இந்த மாதிரி நடக்கும். மேலே மேலே ரெஃபரென்ஸுகள் பார்த்து, பாடங்களுக்கு மெருகேற்றிக் கொள்ள உதவும், புத்திசாலி மாணவர்கள் கேட்கிற கேள்விகளும் இப்படியே ஆசிரியர் 'ஸப்ஜெக்'டை மேலும் ஆழமாகத் துருவிப் பார்த்துத் தெரிந்து கொள்ள உபகாரம் செய்யும். டீச்சர்களை 'மாஸ்டர்' என்று சொல்கிறோமே, அது நிஜமாகவே பொருந்தும்படி அவர்கள் ஸப்ஜெக்டில் 'மாஸ்டர்' பெற்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் நன்றாக, தெளிவாக டீச் பண்ணி விஷயத்தை மாணவர்களுக்குள்ளே ஆழமாக இறக்க முடியும்.

ஒரு கதை சொல்வார்கள். பௌராணிகர் ஒருவர் ராஜாவிடம் போய் பாகவதம் சொல்வதாகச் சொன்னாராம். அதைக் கேட்ட ராஜாவுக்கு அவர் எப்போது ராஜமரியாதைக்கும், ஸம்பாவனைக்கும் ஆசைப்பட்டு வந்திருக்கிறாரோ அப்போதே அவர் பாகவதத்தை புத்தியால்தான் படித்திருக்கிறாரேயன்றி ஹ்ரூதயத்தால் படித்து பக்தி - ஞான - வைராக்கியங்களைப் பெறவில்லை என்ற புரிந்துவிட்டது. அந்த மாதிரி புஸ்தக விஷயத்தில், உட்கருத்தில் ஊறாதவர் சொல்லிக கேட்டால் கேட்கிற பேருக்குப் பூர்ணமான ப்ரயோஜனம் கிடைக்காதே என்று பார்த்தான். ஆகையினால், வந்த

ப்ராம்மணருக்கு ஏதோ ஒரு ஸம்பாவனையைப் பண்ணி விட்டு, "இன்னொரு தடவை படித்துப் பார்த்து விட்டு வந்து அப்புறம் உபந்யாஸம் பண்ணுங்கள்" என்றான். பௌராணிகருக்கு அவன் ஏன் அப்படிச் சொல்கிறானென்று புரியவில்லை. ஆனாலும் ராஜாக்ஞை என்பதாலும், அதை நிறைவேற்றினால் நிரம்ப கௌரவம், த்ரவ்யம் எல்லாம் கிடைக்குமே என்பதாலும் அவரும் ராஜா சொன்ன மாதிரி திரும்பிப் போய் இன்னொரு தடவை பாகவதத்தை நுணுக்கமாகப் படித்து விட்டு அவனிடம் வந்தார். இப்போதும் முன் மாதிரியே அவன் அவருக்கு ஒரு ஸம்பாவனையைப் பண்ணி, "இனனொரு தடவை படித்து விட்டும் வாரும்" என்று சொன்னான். அவரும் அதே மாதிரிப் பண்ணினார். ராஜா பழைய பல்லவியையே பாடினான். பௌராணிகரும் முன்போலவே அதற்கு அநுபல்லவி பாடினார். இப்படியே அந்த இரண்டு, மூன்று தடவை மட்டுமில்லை, இருபது தடவை ராஜா அவரை மறுபடி படித்து விட்டு வரும்படி அனுப்பி வைத்து அவரும் அப்படியே பண்ணினார்.

இருபத்தோராவது தடவையும் ராஜா தன் பல்லவியைப் பாடினான். ஆனால் இந்தத் தடவை அவர் அதற்கேற்க அநுபல்லவி பாடவில்லை.

ரொம்ப நாளாகியும் அவர் வராததால் ராஜா என்ன, ஏது என்று பார்த்து வருவதற்காக அவர் கிருஹத்துக்கு ஆள் அனுப்பினான்.

போன ஆள் திரும்பி வந்து, "இந்தத் தடவை அவர் பாகவதம் பாராயணம் பண்ணியுவுடன் அவருக்க பக்தி - ஞான - வைராக்யங்கள் வந்து விட்டதாம். 'ராஜாவுமாச்சு, ராஜஸதஸுமாச்சு, வீடுமாச்சு, வீட்டு மநுஷ்யளுமாச்சு! என்ற விரக்தியாகச் சொல்லிக் கொண்டு, பாகவதநுபவம் பெறவேண்டும் என்று தாபத்தோடு காட்டுக்குப் போய் விட்டாராம்" என்றான்.

ராஜாவுக்கு த்ருப்தியாயிற்று. 'இப்போது பௌராணிகர் பாகவதத்தின் 'ஸ்பிரிட்'டில் ஊறிவிட்டார். இப்போதே அவருக்க பாகவதம் சொல்லத் தக்க பக்வம் வந்திருக்கிறது. அப்படிப்பட்டவர் சொல்லிக் கேட்டால்தான் கேட்கிற பேருக்கும் ப்ரயோஜனம் கிடைக்குமாதலால் இப்போது அவரைத் தேடிக்கொண்டு தானே போய் ச்ரவணம் செய்யவேண்டும்' என்ற ராஜா தீர்மாணித்தான்.

அந்தப்படியே காட்டுக்கப் போனான். தான் தேடித் தேடிப் போன ராஜா தன்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதையும் ஒரு பொருட்டாக பௌராணிகர் நினைக்காமல் பகவத் சிந்தனையிலேயே தானிருந்தார். ராஜா அவரை நமஸ்கரித்து பாகவதம் உபதேசம் பண்ணுமாறு ப்ரார்த்தித்தான்.

தன்னை இப்படி பகவத்பரமாத் திருப்பிவிட்ட உபகாரி அவன்தானே என்பதால் அவரும் நன்றியோடும், அருளோடும் அவன் மனஸிலே நன்றாக இறங்குகிற முறையில் அவனுக்கு பாகவதம் சொன்னார்.

இப்படிக் கதை.

(சிரித்து) அந்தப் பௌராணிகர் தம்முடைய ஸப்ஜெக்டான புராணத்தைப் படித்து அதன் 'ஸ்பிரிட்' என்கிற உட்கருத்திலேயே தோய்ந்தபோது பௌராணிகத் தொழிலையே விட்டுவிட்ட மாதிரி, ஆசிரியர்களும் தங்கள் ஸப்ஜெக்டை ஆழ்ந்து படித்து 'டீச்சிங் ஜாபை'யே விட்டு விட வேண்டும் என்ற அர்த்தத்தில் இந்தக் கதையை நான் சொல்லவில்லை. (மீண்டும் நெடுநேரம் சிரிக்கிறார்)

சொல்கிறவர், சொல்லும் விஷயத்தின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு சொன்னால்தான் கேட்கிறவரின் மனஸிலும் அது நன்றாகப் புகுந்து பூர்ண ப்ரயோஜனத்தைக் கொடுக்கும் என்று ராஜா நினைத்தானே, அதை ஆசிரியர்களுக்கெல்லாம் 'அன்டர்லைன்' பண்ணிக் காட்டுவதற்காகவே சொன்னேன், பௌராணிகர் ஆழ்ந்து பாராயணம் பண்ணியது பக்தி - ஞானப் புஸ்தகமாயிருந்ததால் அவர் தொழிலை விட்டார். ஆசிரியர்கள் படிக்கிற புஸ்தகங்கள் அப்படியில்லையே! மத போதனையாக 'டீச்' பண்ணுவதாக இருந்தால்கூட அந்த அளவுக்குத் தீவிரமாக சாதாரண நிலையில் இருக்கப்பட்ட நாமெல்லாம் போய்விட மாட்டோம்! படிக்கப் படிக்க புத்தியாலேயே மேலும் மேலும் நன்றாகத் தெரிந்து கொள்வதோடு ஹ்ருதயத்தாலும் ஒரு அளவுக்கு, ஒரு கணிசமான அளவுக்கே தெரிந்து கொண்டு, அப்படித் தெரிந்து கொண்டதைக் கேட்பவருக்குள்ளேயும் நன்றாக இறக்குகிற சக்தியை ஸம்பாதித்துக் கொள்வதோடு நாமெல்லாம் நின்று விடுவோம். அதுவே போதும். அதுவே பெரிசு. அதற்கு மேல் எதிர்பார்ப்பதற்கில்லை.

மொத்தத்தில் விஷயம், பசங்கள் மட்டும்தான் பாடத்தை பக்தி - ச்ரத்தையுடன் படிக்கவேண்டும் என்றில்லை. வாத்தியார்மார்களும், பழைய பாடத்தையே எத்தனை தடவை திரும்பத் திரும்பத் படித்து, சொல்லிக் கொடுத்தாலும் அந்தக் கார்யத்தை பக்தி ச்ரத்தையுடன் செய்து, சொல்கிற விஷயத்தின் உட்கருத்தைத் தாங்களும் நன்றாகப் புரிந்து கொண்டு கேட்கிற மாணவர்களுக்கும் நன்றாகப் புரியப் பண்ணவேண்டும். இதிலே, திரும்பத் திரும்ப படிப்பதால் வாத்தியார்மார்களே புதிது புதிதாகத் தெரிந்து கொள்வதற்குக் காலேஜ் மாதிரியான மேல்படிப்புக் கட்டத்திலேயே ஜாஸ்தி 'ஸ்கோப் உண்டு.

இன்னும் ஒரு முக்யமான விஷயம்: ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற அறிவையெல்லாம் மாணவர்களுக்கம் ஊட்டத்தான் பாடுபட வேண்டும் என்றாலும் அதில் ஒரு ஜாக்ரதை வேண்டும். பசங்களுக்க விஷயங்களை எடுத்துச் சொல்லி அது அவர்களுக்க உள்ளே போகும்படிப் பண்ணுகிற கார்யத்தில் ரொம்பவும் பொறுமையும், நிதானமும் வேண்டும். பதட்டமும், அவஸரமும் கூடவே கூடாது. தெரிந்ததையெல்லாம் வதவதவென்று பசங்களின் மூளையிலே திணிக்கப் பார்த்தால் ஒன்றுமே உள்ளே இறங்காமல் எல்லாமே பிதுங்கிக்கொண்டு வெளியில் வழிந்து விடுவதாகத்தான் முடியும்.

இங்கே ஆசிரியர்களெல்லாம் உண்டியின் உதாரணத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நம் கை நிறைய, பை நிறையக் காசு இருந்தாலும் உண்டியில் அப்படியே கொட்டிவிட முடியுமா? அதிலுள்ள சின்ன த்வாரத்தின் வழியாக ஒவ்வொரு காசாகத்தானே போட வேண்டும்? முதலில் போட்டது சிக்காமல் உள்ளே போய் விட்ட அப்புறம், அதுவாகப் போகாவிட்டால் உண்டியைக் குலுக்கி அதைப் போகப் பண்ணிய அப்புறம்தானே அடுத்த காசைப் போடவேண்டும்? அப்படித்தான், ஒவ்வொரு விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொன்றாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுடைய அறிவுக்குள்ளே செலுத்தவேண்டும். சொன்ன ஒவ்வொரு அம்சமும் சிக்காமல் அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதைக் கேள்வி

கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறமே அடுத்த அம்சத்துக்குப் போக வேண்டும். ஒன்று உள்ளே போகவில்லையென்றால் நிதானம் இழக்காமல், கோபப்படாமல், மாறாக அவர்களக்கு உத்ஸாஹம் ஊட்டுகிற வகையிலே மறுபடியும் தெளிவாக எடுத்துச் சொல்லி உள்ளே போகப் பண்ணவேண்டும். அப்புறம் அடுத்த அம்சம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமந்த புத்திப் பசங்களுக்கக் கற்றுக் கொடுப்பது ச்ரமம்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் ஆசிரியர்மார்கள் தாங்கள் மேற்கொண்டிருக்கிற இந்தத் தொழில் வித்யாதானம் என்கிற புண்யமான ஸேவை; இதனால்தான் இளம் பிராயத்தினர் உரியபடி மனிதர்களாக உருவாகிறார்கள்; தேசத்தின், லோகத்தின் எதிர்கால க்ஷேமமே இதைத்தான் சார்ந்திருக்கிறது என்பதை 'ரியலைஸ்' பண்ணிவிட்டால் தொழிலில் உள்ள ச்ரமங்களை ச்ரமமாகவே நினைக்க மாட்டார்கள். பொறுமையையும், ப்ரியத்தையும் ஒருபோதும் கைவிடாமலிருப்பார்கள்.

எதிர்காலத்தை உருவாக்கப் போகிறவர்களை உருவாக்குவதில் ஒரு முக்யமான பங்கு ஆசிரியர்களுக்கே இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன். எதிர் காலம் ஒரு பக்கம் இருக்க, தற்காலத்தில் கல்வித்திட்டம் என்பது அறிவு, குணம் ஆகிய இரண்டிலும் தரமானதாக அமைவதற்கும் அவர்கள்தான் போராட வேண்டும் என்பதில் ஆரம்பித்தேன். பழங்காலத்தில் அப்படிப்பட்ட தரமான கல்வித் திட்டமே நடைமுறையிலிருந்ததைத்தான் முக்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

Source: Deivathin Kural Vol 7-sumi