மகிழ்ச்சி இருக்கும் இடம்.

ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது. ஓநாய் அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சிக்கும்போது, தன்னை விட்டு விடுமாறு அணில் கேட்டது. அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது.

அணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?''என்று கேட்கவே ஓநாயும் பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில்,

''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது.

ஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?''

அணில் சொன்னது,''நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.'' என்றது.

இந்தக் கதையில் அணில் ஓநாயிடம், "உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரவம் பண்ணாதே' என்று சொல்கிறது. இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறியிருப்பீர்கள். இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல. சங்ககாலத்திலேயே இப்படியொரு பாடல் உண்டு.

பல்சான்றீரே! பல்சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே''
புறநானூறு -195)

நரிவெரூஉத்தலையார்

மீன் முள்ளைப்போல் வெள்ளை நிற நரை முடியையும் அலை அலையாய் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களையும் உடைய சான்றோர்களே!

அதுவும் பயனுள்ள செயல் எதுவும் செய்யாமல் மூப்பெய்தியுள்ள சான்றோர்களே! கையிலே கூர்மையான மழுவாயுதத்தைக்கொண்ட எமன் உங்களைப் பாசக் கயிற்றால் பிணித்து இழுத்துச் செல்லும் போதுதான் வருந்துவீர்கள்!

உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.


நாம் எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்று விரும்புவோம். அதற்கு யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்பதுகூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்வியல் அறத்தை எடுத்துரைக்கும் இந்த சங்கப்பாடல் சங்கத்தமிழரின் செம்மையான வாழ்வுக்குத் தக்க சான்றாகும்.

எமன் இருக்கிறாரா? இல்லையா? சொர்க்கம் உண்டா? இல்லையா? என்று ஆராய்வதை விட, நாம் மகிழ்வாக வாழ்ந்தால் சொர்க்கம், துன்பத்துடன் வாழ்ந்தால் அது நரகம் என்பதைப் புரிந்துகொண்டு, எமன் என்றசிந்தனை நம்மை அச்சுறுத்து நல்வழிப்படுத்தும் முயற்சி என்பதைப் புரிந்துகொண்டு, இயன்றவரை நன்மை செய்துவாழவேண்டும் என்ற எண்ணத்தை நம்மனதில் விதைத்துச் செல்வதே இப்புலவரின் சிறந்த நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வோம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource: Aatika Ashreen