Click image for larger version. 

Name:	ulagalandha.jpg 
Views:	7 
Size:	75.5 KB 
ID:	1201ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற்ற பிரகலாதனின் மகனான விரோசனனுக்கும், தேவிக்கும் பிறந்தவன் மாபலி. தன் தந்தையார், பாட்டனாரைப் போலவே பலியும், அறிவு, அழகு, அருள், ஆற்றல், ஆண்மை, பக்தி என அனைத்தும் நிறைந்த மாவீரன். பரம்பரைத் தொடர்பால் கிடைத்த நாராயண பக்தியும், பெற்ற வரங்களும், குரு சுக்ராசாரியாரின் அருளும், வேள்விப் பயனும் ஒருங்கே நிறைந்தன. மற்ற எல்லாரையும் விட கூடுதல் பேராற்றல்கள் நிரம்பவே, அவனிடம் ஆணவமும் மேலோங்கியது.


இதனால், முதலில் தேவருலகை முற்றுகையிட்டான். இந்திரன் உள்ளிட்டோர் தேவகுரு பிரகஸ்பதியிடம் அடைக்கலம் புகுந்தனர். அவரும் ""இப்போது பலியை வெல்வது கடினம். நீங்கள் மறைந்திருந்து பொறுத்திருங்கள். ஸ்ரீமந் நாராயணன் அவனின் ஆணவத்தை அடக்கி உங்கள் உலகை மீட்டுத் தருவார்'' என்றார். பலி மூவுலகும் வென்றான். மாமன்னன் ஆக முடிசூடினான். அவனுடைய ஆணவமும் அதிகமானது.

இதே நேரம், தேவர்களின் மாதாவான அதிதி, தேவர்கள் தோற்றதால் கலக்கமடைந்தாள். காசிபர் அறிவுறுத்தியபடி நாராயணனின் திவ்யத் திருமேனியைப் பொன்னால் வடித்து வழிபட்டாள். பசும்பாலை மட்டும் பருகிப் பன்னிரண்டு நாள்கள் விரதம் காத்தாள்.

அதிதியின் வேண்டுகோளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணன் வாமன அவதாரத்தை மேற்கொண்டார். இரண்டடி உயரமுள்ள குள்ளன், குறளன், பிரமச்சாரி. தானம் கேட்பதற்குரிய கச்சிதமான வடிவத்தை எம்பெருமான் ஏற்றருளினார். மாபலி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். அங்கு வந்த வாமனன், பலியிடம் "எனக்கு மூன்றடி மண் தானமாக வேண்டும். அதையும் என் கால்களால் அளந்தெடுத்துக் கொள்வேன்' என்று யாசித்தான்.


மாபலி ஒரு வள்ளல். யாகம் நடைபெறுகிறபோது தானம் தர உடனே ஒப்புக் கொண்டான். ஆணவத்தாலே அலட்சியப் புன்னகை பூத்தான். ஆனால், சுக்கிராசாரியாரோ, "வாமனனாக வந்திருப்பவன் மாயம் புரியும் நாராயணன். தேவர்களைக் காத்து அசுரர்களைத் தண்டிக்கவே வஞ்சனையாய்த் தானம் கேட்கிறான்' என்று எச்சரித்தார். ஆனால், "வந்திருப்பவன் நாராயணன் என்றால் அவனுக்கு நான் நிச்சயம் தானம் தர வேண்டும். ஏனென்றால், அவன் செல்வத்துக்குரிய இலக்குமியின் கணவன். நான் தானம் தரும்போது இலக்குமியைத் தீண்டிய அவனது திருக்கை தாழ்ந்திருக்கும். என் கை உயர்ந்திருக்கும். இதைவிட மேலான பேறு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை' என்று மாபலி கூறி, நிலத்தைத் தாரை வார்த்துத் தர முனைந்தான். எள்ளும், நீரும் கொண்டு வருமாறு தன் மனைவி வித்யாவலிக்கு ஆணையிட்டான். தாரை நீருடன் தானம் பெறும்போதே வாமனன் விஸ்வரூபமெடுத்து காட்சி தந்தான்.


தன் முதலடியால் மேல் உலகையும், இரண்டாமடியால் நிலவுலகத்தையும் அளந்தான். மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று மாபலியை வினவினான். வாமனனாக வந்தவன் திரிவிக்கிரமனாக நின்றதைக் கண்டு மாபலி செயலற்றுத் திகைத்தான்.

சத்திய குணமும், வள்ளல் தன்மையும் மாறவே கூடாது என்பதால், மூன்றாம் அடியைத் தன் தலைமீது பொருத்தி அளக்க வேண்டினான் மாபலி. சரணடைந்து தலை தாழ்த்தினான்.

திரிவிக்கிரமன் மாபலியின் தலைமீது தன் திருவடியை வைத்து, அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி, அங்கே சக்கரவர்த்தியாக நிலைத்திருந்து அரசாளும்படி ஆணையிட்டான். அப்போது முதல் மாபலி மன்னன் மாபலிச் சக்கரவர்த்தியாக உயர்ந்து மேலும் மேன்மையடைந்தான். நாராயணனின் திருவடி தரிசனம் மூவுலகிலும் கிடைத்தது. மாபலிச் சக்கரவர்த்தி சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவனாக இப்போதும் வழ்கிறான்.

"ஆவணி மாதம், திருவோண நாளன்று, ஆண்டுக்கொரு நாள், நான் ஆண்ட நிலவுலகத்திற்கு வந்து, என் மக்களை வாழ்த்த வரம் தர வேண்டும்'' என்று நாராயணனை இறைஞ்சிய மாபலியின் வேண்டுகோளுக்கு எம்பெருமானும் இசைந்து வரம் அருளினார்.

ஆணவ குணத்தால் தேவருலகை இழந்தான். வள்ளல் குணத்தால், ஆண்டு தோறும் ஒரு நாள் நிலவுலகம் வந்து மக்களுக்கு அருளும் வரம் பெற்றான் மாபலி. அதன்படி ஆவணித் திருவோணத்தன்று மக்களுக்குத் தரிசனம் தருகிறான்.


மகாவிஷ்ணுவின் ராம, கிருஷ்ண, நரஸிம்ம, வராஹ அவதாரங்களை உணர்த்தும் கோயில்கள் அதிகம் இருந்தாலும், வாமன அவதாரத்தை நினைவூட்டும் கோயில்கள் மிகச் சிலவே உண்டு.


மாமல்லபுரம்: வராகக் குகையில் அமைந்த திரிவிக்கிரமனின் வடிவம் நேர்த்தியானது. எட்டு திருக்கைகளுடன் கம்பீரமாகக் காட்சி தரும் திரிவிக்கிரமனை பிரமனும், சிவனும், சூரியனும், சந்திரனும் வழிபடுகின்றனர்.


திருக்கோவிலூர்: முதன் முதலில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற திவ்யதேசம். மிருகண்டு முனிவர் வாமன-திரிவிக்கிரம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பினார். தம் மனைவி மித்ராவதியுடன் கடுந்தவம் புரிந்தார். முடிவில், திரிவிக்கிரமன் அவருக்குத் திருக்காட்சி தந்து மூலவராக நிலைத்தார். மூலவர் பதினெட்டடி உயரமானவர். இடக்காலை ஊன்றியவர். வலக்காலை உயர உயர்த்தியவர். வலக்காலின் அருகில் முன் வலக்கை நீண்டுள்ளது. இச்சிலை மரத்தாலானது. மூலவரின் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் இடம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோவில்: இங்கே, உலகளந்த பெருமாளின் சிலாரூபம் 35 அடி உயரம், 24 அடி அகலம் கொண்டது. சுதையாலான இது, திரிவிக்கிரமனின் சிலா ரூபங்களில் மிக மிகப் பெரியது. பேரகத்தான் என்பது இவரது திருநாமம். இடக்காலை விண்ணோக்கி உயர்த்தி, வலக்காலை மாபலியின் தலை மீது ஊன்றியுள்ளார். இடக்கையில் இரண்டு விரல்களையும், வலக்கையில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டுகிறார். அதாவது, விண்ணுலகையும், மண்ணுலகையும் ஈரடிகளால் அளந்து முடித்ததை இடக்கை இரு விரல்களால் சுட்டினார். தூக்கிய ஓரடியை எங்கே வைப்பது என்று மாபலியிடம் வினாவும் பாவனையில் வலக்கை ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறார்.


இந்தத் தலத்துக்கு தனித்துவ வரலாறும் உண்டு. தானம் தந்தபோது மாபலியால் வாமனனை முழுமையாகத் தரிசிக்க முடிந்தது. ஆனால், திரிவிக்கிரமனின் ஊன்றிய திருவடிக்கீழ் அகப்பட்ட மாபலி, முழுமையாகச் சேவிக்க முடியாமல் துன்பமுற்றான். எனவே, தவத்தை மேற்கொண்டான். எம்பெருமானும் திருவுள்ளம் நெகிழ்ந்து இங்கே உலகளந்த பெருமாளாக தரிசனம் தந்தார்.


அப்படியும் மாபலியால் பெருமாளைக் கண்ணார சேவிக்க முடியவில்லை. எனவே சந்நிதிக்கு அருகில் சிறிய திருமேனியுடன் ஐந்து தலை ஆதிசேடனாக பிரகாசிக்கிறார். இவரைப் போன்ற நாக மூர்த்தியை வேறு எங்கும் காணமுடியாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கேரளத்தில்: இங்கே ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதம். ஆவணித் திருவோணத்தின் முன்வரும் அஸ்த நட்சத்திரம் தொடங்கிய பின் வரும் மக நட்சத்திரம் வரை மொத்தம் இருபத்தைந்து நாள்கள் திருவோண விழாவைப் பெரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். அவரவர் வசதி, வளப்பங்களுக்குத் தக்க விழா நாள்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. திருவோண நாளுக்குப் பத்து நாள்கள் முந்தியது அஸ்த நட்சத்திர நாள். இந்த நாளில் திருவோணவிழா பூக்கோலங்களுடன் தொடங்குகிறது.


திருக்காட்கரை: மலை நாட்டு திவ்யதேசம். இங்கே மூலவர் வாமன மூர்த்தி. சங்கு, சக்கரம், கதை, பத்ம திருக் கைகளுடன் மாபலிக்குக் காட்சி கொடுத்த அதே கோலத்துடன் சேவை சாதிக்கிறார். ஆகவே, இது வாமனத் திருத்தலம். தாயார்- பெருஞ்செல்வ நாயகி. அப்பனிடம் ஓர் அடியார் பொன் வாழைக்குலைகளைச் சமர்ப்பித்து நேர்ந்து கொண்டு வழிபட்டதால் நேந்திர வாழை என்ற இனமே உருவானது என்பர். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் இத்திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இத்திவ்யதேசம் தோன்றிய பிறகே கேரளத்தில் திருவோண விழா மிக்க புகழ் பெற்றது என்பர்.


மாதந்தோறும் திருவோண நாளில் நாராயணனை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனநலம் சீராகும். உறவினர் கொண்ட பகை அகலும். பகைவர் நண்பராவர். பொதுவாக, துன்பங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.

http://dinamani.com/weekly_supplements/vellimani/2013/09/12/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87.../article1781219.ece