கொன்னையூர் ஸ்ரீமாரியம்மன்.


Click image for larger version. 

Name:	Muthumariamman.jpg 
Views:	6 
Size:	44.7 KB 
ID:	1229

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ளது கொன்னையூர். புதுக்கோட்டை யில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலை விலும் உள்ளது இவ்வூர். ஊரின் மையப்பகுதியில் கோயில்கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், மாடு- கன்றுகளையும், காடு- கரைகளையும் வாழ வைத்தருள்கிறாள் ஸ்ரீமாரியம்மன்.

பன்னெடுங் காலத்துக்கு முன்பு, இந்தப் பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்ததாம். யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில், ஊர்மக்களை திடீர் திடீரென விசித்திர நோய்கள் தாக்கின; சிலர் தோல் நோயால் அவதிப்பட்டனர்; சிலர், வாந்திபேதியால் சுருண்டனர். இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட... குடிப்பதற்குக்கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்னைகள். போதாக்குறைக்கு நோயால் தாக்குண்டு, வாழவே வழியில்லை எனும் நிலையில், திருமணம் செய்வதும் பிள்ளை பெற்றுக்கொள்வதும் மெள்ள மெள்ளக் குறைந்தது. 'இப்படியே போனா, நம்ம பூமியும் வம்சமும் அழிஞ்சிடுமே... என கலங்கினார்கள்.

அவர்களின் ஓலக்குரல் உலகாளும் நாயகியை உசுப்பியது. அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்து, அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்துகொண்டாள்.

பாலை எடுத்துக்கொண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலை யானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து குபுக்கென்று ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப் பார்க்க... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி!

பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்ததுதான் தாமதம்... உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்தது, கன மழை! கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.

ஓலைக்குடிசை அமைத்து, அங்கே அம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர் ஊர்மக்கள். ஆரம்பத்தில், ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள், பிறகு, காட்டையே ஊராக்கிக் குடிபுகுந்தனர். கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது. அதேபோல், ஓலைக்குடிசையாக இருந்த ஆலயமும், மிகப் பிரமாண்டமான கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டது. அன்று துவங்கி இன்றளவும் கொன்றையூர் மாரியம்மன்தான், இந்தப் பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம், கண்கண்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே! மனதில் என்ன குறை இருந்தாலும், வீட்டில் என்ன பிரச்னை ஏற்பட்டாலும், ஊருக்குள் எந்த அநீதி நடந்தாலும் விறுவிறுவென இங்கு வந்து, அம்மனின் சந்நிதியில், தங்கள் கண்ணீரைக் காணிக்கையாக்கி, மனமுருக வேண்டிச் செல்கின்றனர். நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர். இன்னும் சிலர், சந்தனம் மற்றும் பாலபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து தரிசிக்கின்றனர். நோயால் வாடும் குழந்தைகள் குணம் பெறுவதற்காக வேண்டிக் கொள்பவர்கள், இங்கு வந்து முடி காணிக்கை செலுத்தி, மாவிளக்கேற்றுகின்றனர். கோயிலின் சனி மூலையில் உள்ளது நெல்லிமரம்.

இந்த மரத்தில், தொட்டில் கட்டினால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; மஞ்சள் கயிறு அணிவித்தால், திருமண வரம் பெறலாம்; தொட்டிலும் வளையலும் கட்டிப் பிரார்த்தித்தால், சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை!

சாந்நித்தியம் கொண்ட அம்மனின் ஆலயத்தில், பங்குனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, கோலா கலமாக நடைபெறுகிறது பூச்சொரிதல் விழா. மறுநாள், அக்னிக் காவடி வழிபாடு. 2-வது ஞாயிற்றுக்கிழமையில் காப்புக் கட்டி, மறுநாளில் இருந்து நடைபெறுகிறது 15 நாள் மண்டகப்படி. இந்த 15 நாட்களும் தினமும் பாலபிஷேகம், மாவிளக்கேற்றுதல், பொன்னமராவதி, செவனூர், ஆல வயல் மற்றும் செம்பூதி என நான்கு நாட்டைச் சேர்ந்தவர்களும் திரளாக வந்து அம்மனைத் தரிசித்தல், வெள்ளி ரதத்தில் அம்மன் வீதியுலா எனக் கொன்னையூர் முழுவதும் கொண்டாட்டம்தான்; குதூகலம்தான்!

தவிர, 'எங்க குடும்பத்தை நல்ல விதமா கரைசேர்த்துடு தாயே! என வேண்டிக்கொண்டு, வெள்ளி ரதம் இழுக்கும் பக்தர்களை இங்கே தினமும் பார்க்கலாம்.Source: Nagarathar

Also read from here:http://www.eegarai.net/t54560-topic

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends