"நான் திருடர் தலைவன்'

செப்டம்பர் 19,2013,தேதியிட்ட தினமலர்.

1973ம் ஆண்டு... காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில், மகாபெரியவர் முகாமிட்டிருந்தார்.

ஒருநாள், ஒரு பணக்காரர் இரண்டு தட்டு நிறைய பழங்களுடன். பெரியவரைத் தரிசனம் செய்ய காத்திருந்தார். பழத்தட்டுகளை ஒரு ஓரமாக வைத்திருந்தார். நீண்ட நேரமாகியும் தரிசனம் கிடைக்கவில்லை. மகாபெரியவருக்கு கைங்கர்யம் (சேவை) செய்பவர்களும் அவரது அழைப்புக்காக காத்திருந்தனர்.

நேரம் அதிகமாகி விட்டது. கைங்கர்யம் செய்யும் சிலருக்கு கடுமையான பசி ஏற்படவே, பணக்காரர் கீழே வைத்திருந்த தட்டிலிருந்து, பழங்களை எடுத்துச் சென்று விட்டனர். இதையறிந்த பணக்காரருக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

""பெரியவருக்காக கொண்டு வந்திருந்த பழங்களை எடுத்துச் சென்று விட்டார்கள். இங்கும் கூட திருடர்கள் ஜாஸ்தியாகி விட்டார்கள்,'' என்று கடுமையாகப் பேசி விட்டார்.

அதன்பின்னும், நீண்டநேரம் கழித்தே பெரியவர் வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். பணக்காரரை அழைத்தார். பெரியவரின் ஆசி தனக்கு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சியுடன் சென்ற அவரிடம்,

"" என்னிடம் உள்ளவர்கள் எல்லாரும்
திருடர்கள். இங்கிருக்கும் எல்லா திருடர்களுக்கும் ஒரு தலைவன் இருக்க வேண்டுமல்லவா! அது தான் நான். ஆகையினால்
என்னையும் திட்டு. நீ கொண்டு வந்திருக்கிற பழங்களை எல்லாம், நான் ஒருவனேவா சாப்பிடப் போகிறேன்!
எல்லாருக்கும் தான் கொடுப்பேன். எல்லாருமே தான் சாப்பிடுபவார்கள். இனிமேல், என்னைப் பார்க்க வராதே! நீ கொண்டு
வந்த பழங்களை எடுத்துச் சென்று விடு,' '

என்று கடுமையாகவே பேசிவிட்டார்.

அந்த பணக்காரருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

""பெரியவா! என்னை மன்னித்து அனுக்கிரஹம் செய்ய வேண்டும். என் தவறை உணர்ந்து விட்டேன். இனிமேல், யாரிடமும்
கோபமாக பேசமாட்டேன்,'' என்று பலமுறை, கன்னத்தில் அறைந்து கொண்டு காலில் விழுந்து கண்ணீர் வடித்தார்.

உடனே பெரியவர் மனம் இரங்கினார். அந்த பக்தருக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource:Varagooran Narayanan