எண்ணெய் குளியல் ஏன்?

நவீன வாழ்க்கை மோகத்தில் நாம் காற்றில் பறக்கவிட்ட பாரம்பரியங்களில் முக்கியமானது எண்ணெய் குளியல். தவிர்ப்பதற்கான முதல் காரணம் நேரமின்மை. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும், தலைமுடி படிந்து விடும், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என ஆளுக்கொரு காரணம் இருக்கும். பிடிக்கிறதோ, இல்லையோ தீபாவளிக்கு தீபாவளி மட்டுமாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற பழக்கத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி லட்சுமி. எண்ணெய் குளியலின் அவசியத்தையும், அது தரும் பலன்களையும் பற்றிப் பேசுகிறார் அவர்.

நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது.

இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள். எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும். உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள்.

பிறகு லேசாக உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து விடுங்கள். சிறிது நேரம் ஊற விடுங்கள். அடுத்து சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளிக்கக் கூடாது. நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கும். சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.

எனவே, இயல்பிலேயே அமிலத்தன்மை கொண்ட மூலிகைக்கலவைப்பொடி கொண்டுதான் குளிக்க வேண்டும். மூலிகைப்பொடி உபயோகித்துக் குளிப்பதால், சருமத்திலும் கூந்தலிலும் உள்ள எண்ணெய் பசையானது முற்றிலும் நீங்காமல் காக்கப்படும். வெறும் மேலோட்டமான அழுக்கு மட்டும் நீங்காமல், சருமத்தின் ஆழத்தில் படிந்த அழுக்கும், இறந்த செல்களும் அகற்றப்படும். இந்த மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் என புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது முக்கியம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். வருடம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் குளியலை ஏதோ சம்பிரதாயமாக நினைத்துச் செய்யாமல், இனி வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கண் எரிச்சல் நீங்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும். நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகமாகும்!source:http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1662&cat=500