நான் பிடித்த முயலுக்குமூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன?"


ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம்.

ஒரு நாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம்.

ஆசையில் முயலின் ஒரு காலை அவன் எடுத்துச் சாப்பிட்டு விட்டானாம்.

திரும்பி வந்த குரு கேட்டாராம், "என்னப்பா மூன்று கால்தான் இருக்கின்றன, இன்னொரு கால் எங்கே?" என்று.

அதற்கு உண்மையை மறைத்து, "நீங்கள் கொண்டு வந்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருந்தன குருவே" என்றானாம் சீடன்

"என்னப்பா, உலகில் மூன்று கால்களோடு எந்த முயலுமே கிடையாதே?" என்று குரு கேட்டாராம்.

எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல்தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தானாம்.

கால் போனதைப் பற்றிக் கூடக் கவலைப்படாத குரு சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்து விட வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தாராம்.

அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம். அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம்.

"தம்பி, முயலுக்கு எத்தனை கால்கள்?" என்று.

அவனும் மறக்காமல் தெளிவாகச் சொல்வானாம், "குருவே, நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்" என்று.

நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் இந்த சீடன் ஒரு திருட்டு வேலை செய்து வந்ததை இவர் அறிந்தாராம். நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்து வந்தானாம்.

அரண்மனையில் உணவுகள் மாயமாவதைக் கண்டறிய முடியாமல் தவித்த அரசன் யாராவது இந்தத் திருடனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம்.

குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று.

அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம்.

"இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடி வையுங்கள் இன்று அவன் மாட்டுவான்" என்று.

சொன்னது போலவே மாயமாக வந்த சீடன் ஆவலாகப் பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரை அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம்.

குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில் அவனருகே சென்ற குரு, "தம்பி, இறுதியாகக் கேட்கிறேன், உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்ற முடியும். முயலுக்கு எத்தனை கால்? என்று கேட்டாராம்.

அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம், "குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்" என்று.

அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாராம்.

இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று.

அதனால் தான் இந்த சீடனைப் போல தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க த்தனை பொய் வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்து வருகிறோம்..Source:Anathanayanan Ramaswamy

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends