நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலே போதும்... எப்போதும் நம்மைச் சுற்றி நல்லதே நடக்கும்!"

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsClick image for larger version. 

Name:	King.jpg 
Views:	5 
Size:	20.4 KB 
ID:	1534

மாலைநேரம்.. அந்த மன்னன் தன் மந்திரியுடன் மாறுவேடத்தில் நகர்வலம் வந்துகொண்டிருந்தான்.

நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த இடத்தில் இருந்த குடிசையொன்றின் வாசலில் சோகமே உருவாக ஒரு மனிதன் அமர்ந்துகொண்டிருந்தான்.

அவனை எப்போதுமே, முன்பின் பார்த்திராத மன்னனுக்கு அவனைக் கண்டதும், திடீரென்று எரிச்சலும் ஆத்திரமும் வந்தது.

மன்னனுக்கே அது அதிசயமாக இருந்தது.

அவசரமாக நகர்வலத்தை முடித்துக்கொண்ட மன்னன், அரண்மனைக்கு திரும்பும்போது மந்திரியைக் கேட்டான். "அங்கு அமர்ந்திருப்பவன் யார் மந்திரி? அவனை இதுவரை நான் கண்டதேயில்லை,

ஆனால் அவனைப் பார்த்ததுமே அவன் மீது தீரா வெறுப்பு வந்தது. கொன்றுவிடலாமா என்று கூட யோசித்தேன்..

ஏன் எனக்கு இப்படி ஓர் எண்ணம் வரவேண்டும்?"

மன்னனின் கேள்விக்கு மந்திரியால் பதில்சொல்ல முடியவில்லை."எனக்கு சிலநாள் அவகாசம் கொடுங்கள் மன்னா,இதற்கான சரியான காரணத்தை அறிந்துசொல்கிறேன்." என்றார் மந்திரி.

அடுத்த நாள், "அரண்மனையின் சுவர்களெல்லாம் சிதைந்துவிட்டன, விரைவில் சீரமைக்கவேண்டும், சீரமைப்பில் சந்தன மரங்களைப் பயன்படுத்தினால் வாசனையாகவும் இருக்கும்" என்று மன்னனிடம் ஆலோசனை கேட்ட மந்திரி,

மன்னன் ஒத்துக்கொண்டதும், அரண்மனை, அந்தப்புரம் எல்லாவற்றையும் சந்தன மரங்களால் அலங்கரித்தார்.

நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. அன்றைய மாறுவேட நகர்வலம், அன்றைக்குஅதே பழைய இடத்தை அடைந்தது. அதே மனிதன் குடிசையின் முன் அமர்ந்திருந்தான். மன்னனுக்கோ ஆச்சரியம்.

"மந்திரி, ஞாபகமிருக்கிறதா? சிலநாட்களுக்கு முன், எனக்கு இவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்று கூறினேன், நீங்களும் கொஞ்ச நாட்களுக்குப் பின் காரணம் சொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால்,இதென்ன அதிசயம்...

இன்று இவனைப் பார்த்ததும் எரிச்சலே ஏற்படவில்லையே? பதிலாக அவனிடம் சென்று அன்பாக உரையாடவேண்டும், அவனை ஆரத்தழுவி நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்றல்லவா என் மனம் சொல்கிறது? இஃதென்ன விந்தை?"

மந்திரி புன்னகைத்தார்.
"அதுதான் எண்ணத்தின் வலிமை மன்னவா, இவன் ஒரு சந்தனமர வியாபாரி. அண்மைக்காலமாக, சந்தன மரம் வாங்குமளவு நம்நகரில் வணிக வசதி அவ்வளவாக இல்லாததால் இவனுக்கு வியாபாரத்தில் பெருநட்டம் ஏற்பட்டது.

வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த இவன், நாட்டின் மன்னனான தாங்கள் இறந்தால், தங்களை எரிக்க சிதை அமைக்கவாவது சந்தன மரங்கள் பயன்படும் என்று தங்கள் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அந்த அவன் எண்ணமே சில நாட்களுக்கு முன் இவனைக் கண்டபோது தங்களிடம் பெருவெறுப்பாக வெளிப்பட்டது.

இதையெல்லாம் விசாரித்து அறிந்துகொண்ட நான், அரண்மனைச் சீரமைப்புக்காக பெருந்தொகையான சந்தனமரங்களை கொள்வனவு செய்தேன்.

இப்போது பெருத்த இலாபம் கிடைத்ததால், அந்த இலாபத்திற்குக் காரணமான மன்னர் நீடூழி வாழவேண்டும் என்று மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.

அந்த நல்லமனமே உங்களை அவனுடன் பழகவும் அவனுடன் அன்புபாராட்டவும் தூண்டுகிறது.

வாழ்க்கையே கொடுக்கல் வாங்கல் தான்... மற்றவர்கள் மீது நாம் அன்பு செலுத்தினால் அதன் பிரதிபலனாக இன்னும் அன்பை நிச்சயம் பெறுவோம்.

மற்றோரை வெறுத்தால், நாமும் வெறுத்தொதுக்கப்படுவோம். இன்னொருவர்க்கு தீங்கு நினைக்கும்போது, அதுவே எதிர்மறை எண்ணமாய் மாறி அவரையும் எம்மை வெறுக்கவைக்குமே தவிர, அங்கே ஆக்கபூர்வமாக எதுவும் நடவாது.

நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலே போதும்... எப்போதும் நம்மைச் சுற்றி நல்லதே நடக்கும்!" என்று விளக்கினார் மந்திரி.

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான் மன்னன்.
Source: Ananthanarayanan Ramaswamy