பக்தர்கள்தான் மிகப்பெரியவர்கள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

விஷ்ணு பக்தன் ஒருவன் தனது பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான்.

விஷ்ணு அவனுடைய பூலோக வாழ்க்கையில் செய்த நன்மைகளைப் பாராட்டி, நீ செய்த நன்மைகளால் உனக்கு வைகுண்ட வாழ்வு கிடைத்திருக்கிறது. இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார்.

அந்த பக்தன் விஷ்ணுவிடம், இறைவனே! எனக்குப் பூலோகத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் என் மனம் சிறு குறைபாட்டுடன் இருக்கிறது. அந்தக் குறையை நீங்கள்தான் போக்கி உதவ வேண்டும் என்றான்.

"அவனுடைய மனக்குறையை விஷ்ணு அறிந்திருந்த போதிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அப்படியா? வைகுண்ட வாழ்வைப் பெற்ற உனக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாதே... உன் மனக்குறையைச் சொல். அந்தக் குறையை உடனே தீர்த்து வைக்கிறேன் என்றார்.

இறைவனே! நான் பூலோகத்தில் இருந்த பொழுது மக்களிடம் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற நிலையே அதிகமாக இருந்தது. இந்தக் கேள்வியால் அவர்களுக்கிடையே மோதல்கள் கூட தொடர்ந்து இருந்து கொண்டிருந்தன. இன்னும் அப்படித்தான் இருக்கிறது. பூலோகத்தில் கடல்,மலை என்று பெரிது பெரிதாக எத்தனையோ இருந்த போதிலும், இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று போற்றிக் கொள்கிறார்களே...! தாங்கள்தான் உண்மையைச் சொல்ல வேண்டும். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்? என்றான்.

"விஷ்ணு சிரித்தபடி, நீ சொல்வதுதான் உண்மை. கடலும், மலையும்தான் பெரியவை என்றார்.

"அந்த பக்தன், நீங்கள் சொல்வது சரியென்றாலும், குறுமுனிவரான அகத்தியர் கடலையே வாரிக் குடித்து விட்டார். கிரஞ்ச மலையையே முருகன் தகர்த்து எறிந்து விட்டார். பூலோகத்தில் நடந்த இந்த செயல்களைப் பார்க்கும் போது, அவைகளையும் பெரியவை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றான்.

அப்படியானால் நீ யார் பெரியவர் என்று நினைக்கிறாய்?

பூலோகத்தைப் பொறுத்தவரை இறைவனாகிய தாங்களே பெரியவர்

இல்லை.உன்னுடைய கருத்தில் உண்மையில்லை...

தாங்கள் வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்களுடைய சிறு பாதத்தால் ஒரே அடியில் அளந்து விட்டீர்கள்.விண்ணையும் ஒரே அடியில் அளந்து விட்டீர்கள். எனவே நீங்கள்தான் பெரியவர்

உலகில் பெரியவர்கள் என்று போற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள்தான். உலகில் யார் மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதி என்று இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் ஏற்பட்டாலும் என்னால் வந்தது என்று நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர்

உங்களை வணங்கக் கூடிய பக்தர்கள்தான் பெரியவர்கள் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

உடனே விஷ்ணு அங்கிருந்த தேவலோகக் கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார்.

அந்தக் கண்ணாடியில் உன் மார்புப்பகுதியைப் பார் என்றார் விஷ்ணு.

அந்தக் கண்ணாடிக்குள் தெரிந்த அவனது மார்புக்குள் விஷ்ணுவின் உருவம் சிறிய அளவில் தெரிந்தது.

விஷ்ணு, கண்ணாடியில் பார்த்தாயா? உலகையே ஒரு அடியில் அளந்த என்னை உன் இதயத்திற்குள் சிறியதாக அடைத்துக் கொண்டு விட்டாய். அப்புறம் எப்படி நான் பெரியவராக இருக்க முடியும்? எனவே நீதான் உலகின் மிகப்பெரியவன். உன்னைப் போன்ற பக்தர்கள்தான் மிகப்பெரியவர்கள் என்றார்.

அந்த பக்தன் மகிழ்ந்து போனான்.

நன்றி திரு கேச பாஷ்யம் கூகுள்+ பாலாஜி திருப்புல்லாணி

Reshare from Mr.Sivaraman Ramachandran