Announcement

Collapse
No announcement yet.

தர்ம ஸூக்ஷ்மம்-Dharma Sukshamam - Sri Prunkaranai Swami Blog

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்ம ஸூக்ஷ்மம்-Dharma Sukshamam - Sri Prunkaranai Swami Blog

    தர்ம ஸூக்ஷ்மம்

    தர்மத்தின் நுட்பத்தை அறிவது மிகவும் கடினமானது. ஒருவன் எவ்வளவு அதிகமாகக் கல்வி கற்றிருந்தபோதிலும், 'இதுதான் தர்மம். இது தர்மமன்று' என்று எளிதில் சொல்லிவிட முடியாது. வேதங்களைக் கற்றிருக்கலாம்; ஸ்ம்ருதிகளை ஆராய்ந்து பார்த்திருக்கலாம்; மற்றும் தர்ம சாஸ்திரம் வ்யாகரணம் மீமாம்ஸை ந்யாயம் முதலிய நூல்களையும் ஆசார்யர்களிடம் பயின்றிருக்கலாம். ஆனாலும் இவற்றைக் கொண்டே 'இதுதான் தர்மம்' என்று ஸ்தாபிக்க முடியாது. 'பொய் பேசுதல் கூடாது' என்று சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதனால் பொய் பேசுவது அதர்மம். 'எவனையும் ஹிம்ஸிக்கக்கூடாது' என்று நூல்களில் பல இடங்களில் சொல்லியிருப்பதனால் ஹிம்ஸிக்கை அதர்மம் என்று ஏற்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் பொய் பேசுவதும் ஹிம்ஸிப்பதும் தர்மமாக முடிகின்றன. ஒருவனைக் கத்தியால் அறுப்பது ஹிம்ஸை; ஆகையால் அதைச் செய்தல் கூடாது என்று சொல்லுகிறோம். ஆனாலும் டாக்டர் நோயாளியின் முதுகிலுள்ள கட்டியைக் கத்தியால் அறுத்துத் தள்ளுகிறார். சஸ்திர சிகிச்சைகள் பல நடக்கின்றன. இதனால் அந்த டாக்டர் ஹிம்ஸை செய்கிறார் என்று சொல்லுகிறோமா? இது தர்மத்தில் சேருகிறது. யாகம் செய்பவன் யாகத்தில் ஆடுகளை ஹிம்ஸிக்கிறான். ஆனாலும் அந்த ஆட்டுக்கு உயர்ந்த உலகம் கிடைக்கிறபடியால் இது அதர்மத்தில் சேராமல் தர்மத்திலேயே சேருகிறது.

    ஒரு முனிவர் வனத்தில் தவம் செய்துகொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு திருடன் ஒரு பசுவைக் கொல்லுவதற்காகத் துரத்திக்கொண்டு ஓடினான். அந்தப் பசு முனிவரின் ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து அந்தக் கொலைகாரன் முனிவரிடம் வந்து, "ஒரு பசு இந்தப் பக்கமாக வந்ததா?" என்றான். அதற்கு முனிவர் என்ன பதில் அளிக்க வேண்டும்? 'பசு இங்கு வந்தது' என்று சொன்னால் உண்மை சொல்லுவதாகிறது! ஆனால் பசுவுக்குத் தீங்கு உண்டாகிவிடும். இல்லை என்றால் பொய் சொல்லுவதாகிறது. இம்மாதிரி தர்ம ஸங்கடங்களில் என்ன சொல்லுவது என்பதை ஆராய்ந்து கூற வேண்டும்.

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொல்

    என்று திருவள்ளுவர் சொல்லுகிறபடி, பிறருக்கு யாதொரு துன்பமும் உண்டாகாதபடி பொய் பேசுவதும் உண்மையாகும். இவற்றை ஆலோசித்துத் தகுந்தபடி நடக்கவேண்டும்.

    குடும்பங்களிலேயும் சில சமயம் மனைவிக்கும் தன் தாயாருக்கும் கலகங்கள் ஏற்படலாம். தாயின் பக்கம் பேசினால் மனைவி கோபிக்கிறாள்; மனைவி பக்கம் பேசினால் தாய்க்குக் கோபம் வருகிறது. ஓர் அதிகாரியினிடத்தில் வேலை செய்பவர்களும் சில சந்தர்ப்பத்தில், 'என்ன செய்வது? என்ன சொல்வது?' என்று தெரியாமல் திணறுகிறார்கள். யஜமானன் ஏதாவது தப்பான செயலைச் செய்துவிட்டால் அதைத் தப்பு என்று சொன்னால் யஜமானன் கோபமடைந்து வேலையிலிருந்தே நீக்கிவிடுவான். இதுதான் நியாயம் என்று சொன்னால் தன் மனத்திலேயே கிலேசம் உண்டாகிப் படாதபாடு படுகிறான். இப்படிப்பட்ட ஸங்கடங்கள் நேரும் இடத்தில் மிகவும் ஆராய்ந்து தர்மத்தின் நுட்பத்தைத் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும். இதை அறிவதுதான் மிகவும் சிரமசாத்தியம். எல்லாக் கல்விகளையும் கற்று ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற விருதுபெற்ற ஸ்ரீவேதாந்ததேசிகன் என்ற ஆசார்யரே, "செய்யக்கூடாதவற்றைச் செய்யக் கூடியவை என்று நினைக்கிறேன். செய்யக்கூடியவற்றை அதர்மங்கள் என்று விட்டுவிடுகிறேன்" என்று பேசுகிறார்.

    கர்த்தவ்யமித்யநுகலம் கலயாம்யக்ருத்யம்
    ஸ்வாமிந், அக்ருத்யமிதி க்ருத்யமபி த்யஜாமி |

    என்று, எல்லாவற்றையும் அறிந்தவரே இப்படிப் பேசுகிறார் என்றால், நம்போல் உள்ளவர், 'இதுதான் தர்மம், இதுதான் அதர்மம்' என்று எப்படி நிச்சயிக்க முடியும்?

    வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றுவிட்டான். 'இது தர்மமா, அதர்மமா?' என்ற ஐயம் இன்னமும் ஜனங்களுக்கு உண்டாகிறது.

    ஸூக்ஷ்ம: பரமதுர்ஜ்ஞேய: ஸதாம் தர்ம: ப்லவங்கம |

    'தர்மத்தின் நுட்பத்தை நன்கு படித்தவர்களேகூட அறிய இயலாது என்றால், குரங்கினத்தில் பிறந்த நீ எப்படி அறிவாய்?' என்று இராமன் சொன்ன பிறகும் ஜனங்கள் இவ் விஷயத்தில் ஏதோ ஒருவிதமாகவே கருதுகிறார்கள். இவ்விஷயத்தில் பல ஆராய்ச்சிகளை எடுத்துக் காட்டி, இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது தர்மம்தான் என்பதை மற்றொரு ஸந்தர்ப்பத்தில் விளக்கிக் காட்டுகிறோம்.

    கற்புள்ள பெண்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆயினும் அகல்யை, துரௌபதி, ஸீதை, தாரை, மண்டோதரி என்ற ஐந்து பேர்களைப் பெரியோர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் ஸீதையையும் மண்டோதரியையும் விலக்கி மற்ற மூவரையும் பார்த்தால் அந்த மூவரிடத்தில் நமக்கு ஒருவிதமான எண்ணம் உண்டாகவே செய்கிறது. இந்த மூவரின் கதை யாருக்குத் தெரியாது!

    'அபாம்ஸுலாநாம் ஸ்வயம் அக்ரகண்யா' என்றபடி, அகல்யை இந்த ஐந்து பேர்களில் முதல்முதலாக எண்ணப் பெறுகிறாள். இவர்களைப் பதிவிரதைகளின் கோஷ்டியில் சேர்த்தது மாத்திரமல்லாமல், 'இவர்களின் பேரை சொல்வதனால் எல்லாப் பாவங்களும் போய்விடும்' என்கின்றனர். ஆகவே தினமும் காலையில் இவர்களை நினைக்க வேண்டும். இதற்காக ஒரு ச்லோகமும் உண்டு.

    அஹல்யா த்ரெளபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா!
    பாஞ்ச கந்யா: ஸ்மரேந் நித்யம் பஞ்சபாதகநாசிநீ!!

    என்று. ஆகையால் இவர்களைக் கற்புள்ள பெண்களின் கோஷ்டியில் எடுத்து, அநுதினமும் இவர்கள் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நூல்களிலும் பெரியோர் சொல்லியிருக்கிறபடியால், இவ் விஷயத்தில் தர்மத்தின் நுட்பத்தை நம்மால் ஆராய முடியாது. பெரியோர் எல்லாமறிந்து ஆராய்ந்து கூறியிருப்பதனால் ஆவர்கள் எதை சொல்லுகிறர்களோ அதுதான் தர்மம். அவ் விஷயத்தில் அறிவுக்கேடர்களான நாம் எதையும் ஆராயச் சக்தியற்றவர்கள்.

    இன்னமும் ஒரு விஷயம் கேண்மின்: பஞ்ச பாண்டவர்களின் விருத்தாந்தம் யாருக்குத்தான் தெரியாது? அவர்கள் பிறந்த வரலாறும் அவர்கள் நடந்துகொண்ட விஷயமும் அனைவர்க்கும் தெரியுமே. இவர்கள் வ்யாஸ மகரிஷியின் பேரர்கள் (பௌத்திரர்கள்). வ்யாஸர் பராசரர் மூலமாக மத்ஸ்யகந்நி என்னும் செம்படவப் பெண்ணுக்குப் பிறந்தவர். அதுவும் அந்த பெண் கன்னிகையாக இருந்தபோது பிறந்தவர். அந்த வ்யாஸர் தம் சகோதரனுடைய மனைவியினிடத்தில் பாண்டு என்னும் அரசனை உண்டு பண்ணினவர். பாண்டுவின் தகப்பனார் இறந்தபிறகு வ்யாஸர் மூலமாகப் பாண்டு என்ற அரசன் பிறந்தான். பாண்டுவுக்குப் புதல்வர்களாகப் பிறந்தவர்கள் பஞ்ச பாண்டவர்கள். பாண்டு என்ற அரசன் இருந்தபோதே துர்வாஸ முனிவரின் உபதேசம் பெற்று, ஐந்து மந்திரங்கள் மூலமாகக் குந்தியினிடத்திலும் மாத்ரியினிடத்திலும் யமன் வாயு இந்திரன் அச்வினி தேவதைகள் என்ற இவர்களிடமிருந்து இவர்கள் ஐந்து பேரும் பிறந்தவர்கள். தகப்பனான பாண்டு தன் தகப்பன் இறந்த பிறகு வ்யாஸரிடம் பிறந்தவன். ஆகையால் பாண்டுவை, 'கோளகன்' என்று சொல்வர். தகப்பன் இருக்கும்போதே யமன் முதலியவர்களிடமிருந்து உண்டானவர்களானபடியால் பாண்டவர்களைக் 'குண்டர்' என்பர். இப்படி இவர்களது வம்ச பரம்பரை.

    இவர்களாவது, 'நாம் உண்டான வழி செவ்வையாக இல்லையாதலால் நம் நடத்தையையாவது நன்றாக நடத்தி நாட்டார் கௌரவிக்கும் வழியில் நடக்க வேண்டுமே' என்று இருந்தார்களா என்றால் அதுவுமில்லை. ஒரு த்ரௌபதியை ஐந்து பேரும் மணந்து கொண்டார்கள். தர்மபுத்திரருக்குத் த்ரௌபதி மனைவியாக இருக்கும்போது மற்றவர்களுக்கு அவள் தாயாக இருக்கிறாள். மற்றவர்களுக்கு மனைவியாக இருக்கும்போது முற்பட்டவர்களுக்கு நாட்டுப்பெண்ணாக ஆகிறாள். இப்படியிருக்க, இவர்கள் அனைவரும் ஒரு பெண்ணான த்ரௌபதியினிடத்தில் மனைவிப் புத்தியை எப்படிச் செய்தார்கள்? இம்மாதிரி இவர்களது வம்ச பரம்பரையும் ஆசாரமும் இருந்தபோதிலும், 'இந்தப் பஞ்சபாண்டவர்களை மனத்தினால் நினைக்கும்போதே பாவங்கள் நீங்கிவிடுகின்றன; அளவற்ற ஸுகம் ஏற்படுகிறது; நன்மையைப் பெற்று மிகவும் ஆனந்தமாக வாழலாம்' என்று சாஸ்திரம் கூறுகிறது.

    ஆகையால், 'இதுதான் தர்மம், இது தர்மமன்று' என்று நம்மால் நிச்சயம் செய்ய இயலாது. 'நதிமூலம் ரிஷிமூலம்' என்று சொல்வதுண்டு. இவற்றை விசாரிக்காமல் இருப்பதுதான் நன்மையைத் தரும். எல்லாக் கல்விகளையும் கற்று மகான் என்று உலகத்தாரால் கொண்டாடப் பெறுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களிற் சிலர் தாழ்ந்த ஆசாரங்களைக் கைப்பற்றுபவர்கள் போல் நமக்குப் புலப்படும். அதைக் கொண்டு நாம் அவர்கள் விஷயத்தில் ஏளனமாக நடந்துகொள்வது சரியல்ல. அவர்களை அவமதித்தால் பகவான் வெறுப்பைத்தான் அடைவான். அவர்கள் தங்கள் குடும்ப ரக்ஷணத்துக்காகச் சில ஆசாரங்களை விட்டுச் சில ஊனமான காரியங்களைச் செய்வார்கள். பகவான் அவர்கள் மூலமாக உலகத்திலுள்ள ஜனங்களுக்கு உபதேசம் செய்விக்கவும் ஜனங்களைப் பரிசுத்தமாக்கவும் இம்மாதிரி செய்திருக்கிறான் என்று நாம் உணர வேண்டும். ஸந்தியாவந்தனம் செய்யும் காலத்தையும் உபேக்ஷித்து அந்தச் சமயத்தில் ஒரு மகான் உபதேசம் செய்கிறார் என்றால் அதைக் குற்றமாக நினைத்து அவமதிப்பது நியாயமல்ல. இம்மாதிரி எல்லா விஷயங்களிலும் கண்டு கொள்வது.

    தர்மத்தின் ஸூக்ஷ்மத்தை அறிவது எளிதன்று என்பதற்கு இன்னமும் ஓர் உதாரணம் கேண்மின் -
    ஒரு பூனை ஒரு குருவியைப் பிடித்துக்கொண்டது. அதைப் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர். "ஐயோ! அநியாயமாகப் பூனை குருவியைப் பிடித்து ஹிம்ஸிக்கிறதே" என்றனர் சிலர். மற்றும் சிலர், "அதனுடைய ஆஹாரத்தை அது பிடித்துத் தின்கிறது; அதற்கு நாம் என்ன செய்வது?" என்றனர். இந்த சமயத்தில் பூனையை விரட்டிக் குருவியைக் காப்பாற்றுவது தர்மமா? அல்லது வெறுமனே இருப்பது தர்மமா? இந்தச் சமயத்தில் ஒரு மகான் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் எல்லாரும் எழுந்திருந்து தண்டனிட்டு, "ஸ்வாமிந்! எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது அதைத் தேவரீர் விளக்கித்தர வேண்டும்" என்றனர். அவர், "அது என்னவென்று சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் சொல்லுகிறேன்" என்றார், இவர்கள் நடந்த வ்ருத்தாந்தத்தைச் சொல்லி, "பூனையிடமிருந்து குருவியைக் காப்பாற்றுவது தர்மமா? அல்லது வெறுமனே இருப்பது தர்மமா?" என்றனர். இதைக் கேட்டதும் மகான், "இதைப்பற்றி நான் ஒரு கதையைக் கூறுகிறேன்" என்று சொல்லத் தொடங்கினார்.

    ஒரு சமயம் தேவலோகத்திலிருந்து மூன்று கந்தர்வர்கள் அழகிய விமானத்தில் ஏறிப் பூலோகத்துக்கு வந்தனர். அப்பொழுது ஒரு பாம்பு ஒரு தவளையைக் கவ்விக்கொண்டது. பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை கத்த ஆரம்பித்தது. இவர்கள் அந்தச் சத்தத்தைக் கேட்டவுடனே திரும்பி நன்கு பார்த்தனர். கந்தர்வர்களில் ஒருவன், "ஐயோ! இது என்ன அநியாயம்! தவளையைப் பிடித்துப் பாம்பு ஹிம்ஸிக்கிறதே! இதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கலாமா? தவளையை எப்படியாவது விடுவிக்க வேண்டாமா?" என்றான். இதைச் சொன்னதுதான் தாமதம், அந்த விமானத்திலிருந்து கந்தர்வன் கீழே விழுந்து விட்டான். மற்றொரு கந்தர்வன், "பாம்பு தன் உணவைத் தின்னத் தவளையைப் பிடித்திருக்கிறது. பாம்பின் ஆஹாரத்துக்காக அன்றோ தவளை ஈச்வரனால் படைக்கப்பட்டுள்ளது? இதில் என்ன தவறு?" என்றான். இதைச் சொன்னதுமே அவனும் விமானத்திலிருந்து 'தொப்பென்று விழுந்துவிட்டான். இருவரும் கீழே விழுந்ததையும் அதன் காரணத்தையும் கண்ட மற்றொருவன், 'இரண்டு விதமாகச் சொன்னதும் அதர்மம்' என்று எண்னி, 'நாம் எதையும் சொல்லாமல் மௌனமாக இருப்பதுதான் உத்தமம்' என்று வெறுமனே இருந்துவிட்டான். இவன் கிரமமாக விமானத்திலேயே இருந்து, தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு தேவலோகம் சென்றுவிட்டான். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். மற்றவற்றை நீங்களே யோசித்துப் பாருங்கள் என்று சொல்லி, மகான் போய்விட்டார்.

    ஆகையால் தர்ம ஸங்கடங்கள் நேரும் இடத்தில், ஆராய்ந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பது ச்ரமம்தான். பெரியவர்களை அணுகித் தெரிந்துகொள்வதுதான் நல்லது.

    யக்ஷப்ரச்னத்தில் தர்மபுத்ரர் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தர்மஸ்ய ஸூக்ஷ்மம் நிஹிதம் குஹாயாம் 'மஹாஜனோ யேந ததர் ஸபந் தா: என்பது. சில சமயம் தர்மம் அதர்மமாகலாம். அதாமாக்த தோன்றுமது தர்மமாகலாம். ஸத்யம் அஸத்யம் ஆவது உண்டு. அஸத்யம் ஸத்யம் ஆவதும் உண்டு அதை இங்கும் நினைக்கவும்.

    மேலும் இங்கு ஒரு கதையை பெரியோர் கூறுவர். ஒரு குடும்பம் அதில் தகப்பன் மனைவி புதல்வன் வேலைக்காரன். வேலைக்காரனுக்கும் இந்த மனைவிக்கும் வெகுநாளாக தொடர்பு உண்டு. அதன் மூலம் இந்த பிள்ளை பிறந்தவன். இவனுக்கு இருபது இருபத்தைந்து வயது விவாஹம் செய்யவில்லையே என்று ஊரார் பேச்சு. அதை ஒட்டி விவாஹம் நடந்தது. நாட்டுப் பெண் சாது. மஹா பதிவ்ருதை. இவள் வீட்டில் இருந்தால் வேலைக்காரனுடன் தொடர்பு கொண்ட நமக்கு உபத்ரவம் என்று எண்ணினாள் மாமியார். அதனால் நாட்டுப் பெண் மீது விபசாரப்பட்டத்தை சாத்தி புத்ரனிடம் சொல்லி அவளை ஒதுக்கி வைத்துவிட்டாள். பெண்ணோ ஒன்றும் அறியாதவள். வ்யவஹாரஸ்தலம் மூலமாக தனது பதிவ்ருத்யத்தை சொன்னாள். அதற்கு அவர்கள் குடம் பாம்பில் கைவிட்டு பரிக்ஷை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இவளும் தன் பதிவ்ரத்யம் நன்கு அறிந்தவளானபடியால் ஒப்புக்கொண்டு செய்தாள். அப்பொழுது தன் கனவனைக் காட்டி இந்த ப்ராமனனைத் தவிற நான் யாரையுமே நேசரித்தது இல்லை என்று சொல்லி குடத்தில் கைவிட்டாள். ஆனால் அந்த பாம்பு கடித்துவிட்டது. மாமியாருக்கு சந்தோஷம். ஒரு தடவை இரண்டு முறை நடந்தது. அப்பொழுதும் அப்படிதான் நாட்டுப் பெண் யோசித்தாள். சாஸ்த்ரம் ஏன் எப்படி பொய்யாயிற்று என்று. அந்த ஊரில் உள்ள ப்ரபல ஜோஸியரை அனுகி கேட்டாள். அவர் ஜாதகத்தை பார்த்து நன்கு புரிந்து கொண்டார். பெண்ணே நீ இனி ஒரு தடவை குடப்பாம்பில் கை விடு. ஆனால் இந்த தாலி கட்டின ப்ராஹ்மனரல்லாதவரைத் தவிர நான் யாரையும் நேசிக்கவில்லை என்று சொல். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று சொன்னார். பெண்ணும் பலாத்காரமாக இந்த ஒரு முறை குடத்தில் கை விடுகிறேன் என்று சொல்லி நிர்பந்தித்து கைவிட்டாள். அப்பொழுது பாம்பு ஒன்றும் செய்யவில்லை. அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். இங்குதான் உள்ளது தரம் ஸூக்ஷமம். ஏன்? ப்ராமணன் அல்லாத வேலைக்காரனுடன் தோடர்பு கொண்டவள் அந்த ப்ராமண ஸ்த்ரி. அதின் பிறந்த புதல்வன் ப்ராமணன் அல்ல. இது உண்மையானபடியால் பாம்பு கடிக்கவில்லை. மாமியார் முகம் வாடிவிட்டது. அவள் குற்றம் வெளி வந்தது. புதல்வனும் புரிந்து கொண்டு மனைவியுடன் வாழ்க்கையை நடத்தி தாயை தூரமாக விலக்கிவிட்டான்.

    இதனால் தர்ம ஸூக்ஷமம் வெளி வந்தது. இதை அறிவதுதான் மிக கஷ்டம். ஆக தர்மாதர்மங்களை பெரியவர்களிடமிருந்து கேட்டு அதன்படி நடக்க வேண்டும். இதை நினைத்துத்தான் ஸ்ரீராமபிரான் வாலியினிடம் சொன்னார் "ஸூஷ்ம: பரம துர்ஞ்யே: சதாம் தர்ம: ப்லவங்க" என்று. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் நேராக பஞச ஸம்ஸ்காரம் செய்வதும் ப்ராஹ்மணப் பெண்ணை ப்ராஹ்மணன் அல்லாதவனுக்கு திருமணம் செய்வதும் மஹா பாபம். புகழ் வருவதற்காக இப்படிப்பட்ட வேலையை செய்கிறார்கள். இது எம்பெருமானுக்கு நிக்ரஹத்தைக் கொடுக்கும். இதன் முடிவு, கலியுகமானபடியால் பிற்காலத்தில்தான் விளங்கும். இங்கு ஸங்கேதம் ப்ரயோஜனமில்லை. ஆத்மா க்ஷேமமடைய வழி வகுத்துக் கொள்ள வேணும். இதெல்லாம் முன்கால் வ்யவஸ்தை. இப்பொழுது எல்லோரும் ஸமமாகிவிட்டோம்.

    From: http://perukaranai.tripod.com/id57.html
    *****


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X