கவீந்திராசார்யர்


information

Information

பேரரசர் ஷாஜகான் காலத்தில் அவரது பட்டத்து இளவரசராக (அவுரங்க சீப்புக்கு சகோதரன்) இருந்த தாரா ஷிகோஹ் இந்திய இந்து கலாசார பண்பாட்டு அம்சங்களில் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டவர். இஸ்லாத்திற்கும் இந்து மதத்திற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைந்தவர். அந்த இளவரசரது பெருமுயற்சியால் பல ஹிந்து, சம்ஸ்க்ருத பண்டிதர்கள், சந்நியாசிகள், மகான்கள் கவுரவிக்கப் பட்டனர். பண்டித ராஜ ஜகன்னாதர், சக்ரபாணி பண்டிதர் போன்ற சம்ஸ்க்ருத பண்டிதர்கள், தமிழ்நாட்டில் பிறந்து மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் இயற்றிய குமரகுருபரர் உட்பட பல ஞானிகள் இவரது அரவணைப்பில் காசி, தில்லி போன்ற நகரங்களில் வாழ்ந்து வந்தனர். குமரகுருபரர் வழி வந்த தம்பிரான்கள் இன்றும் காசிவாசி பட்டம் ஏற்றுக் கொள்வது வழக்கமாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.
warning

Warning

இது போன்ற நல்லிணக்க முயற்சிகள் தாரா ஷிகோஹ்க்கு பதில் ஆட்சிக்கு வந்த அவுரங்க சீப் காலத்தில் மறைந்தன. தாரா ஷிகோஹ் காலத்துக்கு முன்பும், பின்னர் அவுரங்கசீப்பின் ஆட்சியிலும் இந்துக்கள் பல கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகினர். உதாரணமாக ஒருவர் இந்துவாக இருப்பதற்கே ஜிசியா வரி செலுத்த வேண்டும். வரி கொடுத்து இந்துவாக இருக்க வேண்டும் அல்லது முஸ்லிமாக மாறவேண்டும். வரி கொடுக்க முடியாவிட்டால் சிறை, கசையடி கிடைக்கும். மேலும் காசி, பிரயாகை போன்ற இந்து புனித தளங்களுக்குள் நுழையவே தனியாக புனித யாத்திரை வரி செலுத்த வேண்டும். அக்காலத்தில் காசி, பிரயாகை மட்டும் அல்லாமல் பல தீர்த்த யாத்திரை தளங்களுக்கும் செல்ல யாத்திரை வரி விதிக்கப் பட்டதாக தெரிகிறது. இந்துக்களுக்கு காசியும் ராமேசுவரமும் மிகவும் முக்கியம். வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் புனித நீராடி வேண்டும் என்பது குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு காசிக்குள் நுழையவே புனித யாத்திரை வரி விதிக்கப் பட்டதால் பலரும் துன்பத்துக்கு ஆளாகினர்.

notice

Notice

தாரா ஷிகோஹ் காலத்தில் காசிக்குள் நுழைய வசூலிக்கப் பட்ட வரி விலக்கப் பட்டது. அதற்கு காரணம் கவீந்திராசார்ய சரஸ்வதி என்று அறியப் பட்ட ஒரு மகான். கவீந்திராசாரியார், சர்வவித்யாநிதானர், தில்லிபதி பூஜ்யபாதர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட இந்த பண்டிதர், சந்நியாசி பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். தாரா ஷிகோஹ் இளவரசருக்கு குருவாக ஒரு ஹிந்து சாது இருந்தார் என்று கூறப்படுவதால் அது இவராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
கவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய்ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வெளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.


இந்த நிகழ்ச்சி குறித்து இந்தியாவின் பல முனைகளில் இருந்தும் பெருமகிழ்ச்சியும் கொண்டாட்டமும் எழுந்தது. கவீந்திராசாரியாரை அவரது புலமையை, கருணை மனதை புகழ்ந்து பாரதத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் ஹிந்துக்கள் வாழ்த்துப்பா இயற்றி அனுப்பினர். இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வங்காளத்தைச் சேர்ந்த மகாமகோபாத்யாய விஸ்வநாத நியாயபஞ்சாநனர் இயற்றிய வாழ்த்துப்பா-வும் ஒன்று.
கவிந்திராசார்ய சரஸ்வதி அவர்கள் தம் சொந்த படைப்புகளாக இயற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் மட்டும் அல்லாது கல்வி பொக்கிஷமாக ஒரு நூலகம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார். இந்த நூலகம் காசிக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது. ஆனால் துறவியான அவர் மறைந்தபின் அந்த நூலகத்தைப் பாதுகாக்க அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வாரிசுகள் யாரும் இல்லாமல் போனதால் அந்த நூலகம் பாதுகாப்பாரின்றி களையிழந்தது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்த பலரும் ஓலைச்சுவடி, நூல்களை எல்லாம் எடுத்துச் சென்று விட்டனர். கவீந்திராசாரியார் என்னென்ன நூல்கள் இருந்தன என்று ஒரு அட்டவணை கொண்ட ஓலைச்சுவடி கிடைத்திருக்கிறது (பார்க்க இணைப்பில்). கவீந்திராசாரியார் வேதத்துக்கு உரை, தர்க்க தத்துவ, சங்கீத நூல்கள், இலக்கணம், ஆயுர்வேதம் ஆகியவையும் அடக்கம். சிவராமாயணம் என்று கூட ஒரு நூல் எழுதி இருக்கிறார். பின்னர் இதிலிருந்து ஸ்லோகங்கள் வால்மீகி ராமாயணத்தில் இடைச்செருகலாக சேர்ந்து போயிருக்கலாம் என்று கூறப் படுகிறது.


அந்நியர் ஆட்சியில் மக்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் பல இது போன்ற அரிய ஞான பொக்கிஷங்கள், மகான்களின் வாழ்க்கை, அதிலிருந்து பெற வேண்டிய பாடம் ஆகியவற்றை இழந்து விட்டோம். இன்றைய தகவல் யுகத்திலாவது நமது பாரம்பரிய வேர்களைக் கண்டடைய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.


கவிந்திராசார்யர் பற்றிய குறிப்பு ஆர்கைவ் தளத்தில்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends