Announcement

Collapse
No announcement yet.

'சிப்'பெனப் பிடித்தேன் சிவபெருமானே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'சிப்'பெனப் பிடித்தேன் சிவபெருமானே

    அமெரிக்காவில் இருந்து பரதேசங்களுக்கு சப்ளையான சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலா ஒரு ரகசிய 'சிப்' சொருகி அனுப்பியிருக்கும் சங்கதி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இணையத் தொடர்பே இல்லாதிருக்கும் கம்ப்யூட்டர்களையும் இந்த திருட்டு வசதியின்மூலம் ஹேக் செய்ய இயலும். உள்ளே இருக்கிற சங்கதிகளை எடுத்துப் படித்துக் கள்ளத்தனம் செய்யலாம்...
    மேற்படி ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் இடங்களைப் பாருங்கள். பிரதானமாக சீன ராணுவம். அடுத்தபடியாக ரஷ்ய ராணுவம். மூன்றாவதாக ஐரோப்பியயூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள். கட்டக்கடைசியாக சயூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற தேசங்களைச் சேர்ந்த உளவுத்துறை அலுவலகங்கள். இதில் இந்தியாவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
    நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர்களுக்கு முன்னதாகவே தாலி கட்டி அனுப்பிவைக்கிற சங்கதி. எந்தெந்தக் களவாணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இதில் உடந்தை என்று இனிமேல்தான் தெரியவரும்.
    இது இவ்வாறிருக்க, இந்தத் திருப்பணியை அமெரிக்காவுக்கு முன்பாகவே சீனா ஆரம்பித்துவிட்டது என்றும், அமெரிக்காவுக்கே அவர்கள் பலமுறை இவ்வித இனிய அல்வா கொடுத்ததன் விளைவாகவே அமெரிக்கா இந்த ரகசிய சிப் சொருகல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது என்றும் சொல்கிறார்கள்.
    எப்படியானாலும் இந்த அருவருக்கத்தக்க, அபாயகரமான அத்துமீரல் நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருப்பதை மறுக்க முடியாது. டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடங்கி கம்ப்யூட்டர் ஹேக்கிங் வரை சகலமான சாத்தியங்களிலும் அமெரிக்கா தனது அழுகிய உளவுக் கரங்களை உலகெங்கும் நீட்டுவது தாங்க இயலாத அபாய எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
    எதைக் கேட்டாலும், என்ன கேட்டாலும் தேசிய பாதுகாப்பு என்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஒரே பாட்டை ஒரே சுருதியில் பாடிவிடுவார்கள். இல்லாவிட்டால் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று ஆத்ம சுத்தியுடன் பொய் சொல்லவும் ரெட்டை ரெடியாக நிற்பார்கள்.
    இந்த விவகாரத்திலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதைத்தான் செய்திருக்கிறது. விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த மறுகணமே, அதெல்லாம் இல்லை; சுத்தப் பொய் என்று மறுத்துவிட்டார்கள். காசா பணமா? ஒரு மறுப்பு. தீர்ந்தது விஷயம்.
    ஆனால், அமெரிக்க அச்சு மீடியாவே இந்தா இந்தா என்று ஆதாரங்களை எடுத்து வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் NSA வின் மறுப்பு அர்த்தமற்றதாகவே உள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் அமெரிக்காவின் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்கு எதிராக உடனடியாகத் திரண்டு எழாத பட்சத்தில், நாளைக்குக் கூடி உட்கார்ந்து ஒப்பாரி வைக்க நேர்ந்தால் அதுதான் கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும்.
    -- GLOBE ஜாமூன். பா.ராகவன். சர்வதேசம்.
    -- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி,, ஜனவரி 17, 2014.
Working...
X