Announcement

Collapse
No announcement yet.

அழிவற்ற புத்தகம் – அமரகோசம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அழிவற்ற புத்தகம் – அமரகோசம்

    இந்நாட்களில் நமது கல்வி முறையில் பெரும்பாலும் புத்தகங்கள், கணினி ஆகியவற்றைச் சார்ந்தே அறிவை சேமித்து வைக்கிறோம். ஆனால் நமது பழைய கல்விமுறையில் முற்றிலும் மனித மூளையின் ஞாபக சக்தியைக் கொண்டே கற்றுக் கொடுத்தல் நிகழ்ந்துள்ளது.
    இப்பொது நடைமுறையில் உள்ள ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன், மாணவர்கள் பாடத்தை முற்றிலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். சிறு வயதில் மிக அதிக கிரகிப்பு சக்தி இருக்கும் போதே, பாடங்களை மனப்பாடம் செய்து வைத்து, பின்னாளில் புரிந்து கொள்வதே நமது முறை. உதாரணமாக ஆயுர்வேத சூத்திரங்கள் ஆகட்டும், யோகசாத்திர நூல்கள் ஆகியவை எல்லாம் ஒரு மாணவனால் சிறு வயதில் மனப்பாடம் செய்யப் பட்டு, பின்னால் வளர்ந்து உலக அனுபவமும் பக்குவமும் அந்த மாணவன் பெறும் போது இளம் வயதில் கற்றவற்றின் உண்மைப் பொருள் விளங்கும். கற்கும் போது எதுவும் புரிகிறதோ இல்லையோ, பின்னால் வளர்ந்தபின் படித்தவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தி ஞானமாக மலரும். இது ஒரு அற்புதமான கல்வி முறை.
    இக்கல்வி முறையில் மிக முக்கியமான ஒரு புத்தகம் தான் அமரகோசம். கோசம் என்றால் புத்தகம் என்று புரிந்து கொள்ளலாம். அமர-கோசம் என்பது அழிவில்லாத புத்தகம். இதற்கு நாமலிங்கானுசாசனம் என்ற பெயரும் உண்டு. இது அமரசிம்ஹன் என்கிற பௌத்த மன்னனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அகராதிகள் என்று பார்த்தால் மிகப் பழமையானதும் இந்தியாவில் தோன்றிய மதங்களைச் சேர்ந்த எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் இந்த அமரகோசம் தான்.
    நமது கலாசாரத்தின் முக்கியமான இந்த புத்தகத்தின் அமைப்பைப் பற்றி சிறிது பார்ப்போம்.
    அமரகோசம் மூன்று பிரிவுகளை (காண்டங்கள்) கொண்டுள்ளது. இது வடமொழியில் அனுஷ்டுப் சந்தத்தில் இயற்றப் பட்டுள்ளது. மூன்று காண்டங்களிலும் பல பிரிவுகளாக (வர்க்கங்கள்) பிரித்துத் தொகுக்கப் பட்டுள்ளது. அவை:
    ஸ்வர்க³ வர்க்கம் (ஸ்வர்கத்தில் இருப்பவற்றின் பெயர்கள்)
    வ்யோம வர்க்கம் (ஆகாயம்)
    தி³க்³ வர்க்கம் (திசைகள்)
    காலவர்க்கம் (காலம்)
    தீ வர்க்கம் (அறிவு/ஞானம்)
    சப்த வர்க்கம் (ஓசை, இசை)
    நாட்ய வர்க்கம் (நாடகம்)
    பாதாளபோகி வர்க்கம் (பாதாள உலகம்)
    நரக வர்க்கம் (நரகம்)
    வாரி வர்க்கம் (நீர்)
    பூமி வர்க்கம் (பூமி)
    புரவர்க்கம் (நகரங்கள், ஊர்கள்)
    சைல வர்க்கம் (மலைகள்)
    வநௌஷதி வர்க்கம் (காடு, மூலிகைகள்)
    சிம்ஹ வர்க்கம் (மிருகங்கள்)
    மனுஷ்ய வர்க்கம் (மனிதர்கள்)
    பிரம்ம வர்க்கம் (மனிதர்கள்)
    க்ஷத்ரிய வர்க்கம் (மனிதர்கள்)
    வைஸ்ய வர்க்கம் (மனிதர்கள்)
    சூத்ர வர்க்கம் (மனிதர்கள்)
    விசேஷ்யநிக்ன வர்க்கம்
    சம்கீர்ணவர்க்கம் (மற்றவை)
    நாநார்த்த வர்க்கம் (ஒரே சொல்லுக்கு ஈடான பல சொற்கள்)
    அவ்யய வர்க்கம்
    லிங்காதி சங்கிரக வர்க்கம் (ஆண்பால்/பெண்பால்)
    அமரகோசத்தில் மொத்தமாக 11580 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் திரும்ப திரும்ப இடம்பெற்ற சொற்களை தவிர்த்து பார்த்தாலும் 9031 சொற்கள் உள்ளன.
    பிரதம காண்டம் – 2465
    துவிதிய காண்டம் – 5827
    திருதிய காண்டம் – 3288
    மொத்தமாக இவை அனுஷ்டுப் சந்தத்தில் 1608 ஸ்லோக வரிகளாக தொகுக்கப் பட்டுள்ளது. இதை படித்து மனப்பாடம் செய்து முடிக்க குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். இந்த புத்தகத்தின் இன்னொரு சிறப்பு ஒரு சொல்லை எடுத்தால் அதற்கு ஈடான வேறு பல சொற்களையும் (synonyms – பர்யாய சப்தம்) கொடுக்கிறது, அதே நேரத்தில் ஒரே சொல்லின் பல்வேறு பொருளையும் (நாநார்த்த சப்தம்) கூட தருகிறது.
    பொருள் செறிவு நெரிந்த இது போன்ற நூல்களுக்கு பெரும்பாலும் பல்வேறு அறிஞர்களால் விளக்க உரைகள் எழுதப் படுவது வழக்கம். அமரகோசத்திற்கு கிட்டத்தட்ட அறுபது உரைகள் எழுதப் பட்டுள்ளன. இது தவிர இன்றைய நாட்களிலும் நவீனமாக சீனம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டு உரைகள் எழுதப் பட்டுள்ளன.
    கி.பி. 1700 ஆண்டு காலத்தில் ஈஸ்வர பாரதி என்பவரால் அமரகோசம் தமிழில்பல்பொருட் சூடாமணிஎன்னும் பெயரில் தமிழ் விருத்தப் பாக்களாக மொழி பெயர்க்கப் பட்டு இருப்பது தமிழறிஞர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின்நிகண்டு சொற்பொருட்கோவைஎன்னும் நூலின் மூலம் தெரியவருகிறது. இது தவிர லிங்கய்ய சூரியின் லிங்க பட்டீயம் என்கிற அமரகோச உரையைத் தழுவி திருவேங்கடாசாரி கி.பி. 1915 வாக்கில் கிரந்த எழுத்தில் சமஸ்க்ருதமும் தமிழும் கலந்து ஒரு நூலும் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அண்மையில் கடந்த 2006 ஆண்டு தஞ்சை சரஸ்வதி மகால் அமரகோசத்தை எளிய தமிழில் பொருளுடன் பதிப்பித்து உள்ளது.
    அமரகோசத்திலிருந்து சில ஸ்லோகங்கள்:
    அட்டமாசித்தி என்று எட்டு சக்திகள், யோக சாத்திரத்தில் கூறுவர். சித்தர்கள் என்று சொல்லப் படுவோர் இவற்றில் ஒன்றோ, பலவோ சக்திகளை பெற்றவர்கள் என்று நம்பப் படுகிறது. அது குறித்து ஒரு ஸ்லோகம் உண்டு:
    (1. 1. 86) அணிமா மஹிமா சைவ க³ரிமா லகிமா ததா²
    (1. 1. 87) ப்ராப்தி: ப்ராகாம்யமீஸி²த்வம் வஸி²த்வம் சாஷ்ட ஸித்³ய:
    அணிமா எளிய சிறிய உருவம் எடுத்தல்
    மஹிமா மிகப் பெரியதான உருவேடுத்தல்
    ³ரிமா மிக அதிக எடையுடன் இருத்தல்
    லகிமா எடையற்று இருத்தல்
    ப்ராப்தி எங்கும் இருத்தல்
    ப்ராகாம்யம் நினைத்ததை அடைதல்
    ஈசத்வம் கடவுளின் தன்மை
    வசித்வம் எல்லோரையும் அடக்கி ஆளும் தன்மை
    மிக எளிய தொகுப்பாக அத்தனை சக்திகளைப் பற்றியும் கொடுத்து விடுகிறது. இதே போல இன்னொரு உதாரணம். மங்கலம் என்ற சொல்லுக்கு ஈடான ஒரே பொருள் கொண்ட மற்ற சொற்களின் தொகுப்பு:
    (1. 4. 303) ஸ்²வ: ஸ்²ரேயஸம் ஸி²வம் பத்³ரம் கல்யாணம் மங்க³லம் ஸு²ம்
    (1. 4. 304) வுகம் பவிகம் பவ்யம் குஸ²லம் க்ஷேமமஸ்த்ரியாம்
    இதில் ஸ்²வ:, ஸ்²ரேயஸ், ஸி²வம், த்³ரம், கல்யாணம், மங்க³லம், ஸு²ம், குஸ²லம் க்ஷேமம் எல்லாமே ஒரே பொருளுள்ள வார்த்தைகள் என்று ஒரு அழகிய தொகுப்பை இந்நூல் தருகிறது.
    நம் முன்னோர்கள் ஒரு குழந்தை எழுத்துக்களை கற்ற உடன் அடுத்தது அமரகோசத்தையே கற்றுக் கொடுத்தனர். மேலோட்டமாக பார்த்தால் அமரகோசம் என்பது பல பெயர்களை கோர்த்த வாக்கியங்களைக் கொண்ட ஒரு நூலாகவே படும். படிக்கும் குழந்தை ஒன்றுக்கொன்று இந்த பெயர்களை தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ளா விட்டாலும், அது மேலும் வேதம், சாத்திரம், இதிகாசம், புராணம், கணிதம், ஆயுர்வேதம் என்று மேற்கொண்டு கற்கும்போது இந்த அமரகோசத்தில் படித்த பெயர்களின் தொடர்பு புரியும். அமரகோசம் பல்வேறு ஞானத்துறைகளையும் ஒரு வலையில் பின்னியது போல இழுத்து தொடர்பு படுத்துகிறது. வடமொழி கற்க விரும்புகிறவர்கள், நமது பாரம்பரிய நூல்களை நேரடியாக படித்து தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் இன்றியமையாதது எனலாம்.
    அமரகோசத்தை எப்படி படிக்க வேண்டும்?
    இக்காலத்தில் வெளிவரும் அகராதிகள் பெரும்பாலும் அகர வரிசை (alphabetical order) படி வரிசைப் படுத்தப் படுகின்றன. ஆனால் பழங்கால நிகண்டுகளில் (அகராதிகளில்) பொருள் வரிசைப் படி தொகுக்கப் பட்டன. ஏனெனில் இப்போது இருப்பது போல புத்தகங்கள் அக்காலத்தில் இல்லை. ஆகவே ஒரு முழு அகராதியையும் மனப்பாடம் செய்து வைத்தனர் அக்கால மக்கள். ஆகவே மனப்பாடம் செய்ய எளிதாகவும், திரும்ப ஞாபகப் படுத்திக் கொள்ள வசதியாகவும் ஒரே பொருள் உள்ள சொற்களாக தொகுக்கப் பட்டன. அதிலும் அமர கோசம் மற்ற நிகண்டுகளில் இருந்து வேறு படுகிறது. எப்படியெனில் ஏனைய சமஸ்க்ருத நிகண்டுகள் சொற்களைத் தொகுத்தனவே தவிர ஒரு சொல் ஆண்பாலா, பெண்பாலா என்கிற லிங்கத்தை குறித்து (ஆண்பால் புல்லிங்கம், பெண்பால் ஸ்திரி லிங்கம், அஃறிணை நபும்சக லிங்கம்) எதுவும் குறிப்பிட வில்லை. சமஸ்க்ருதத்தில் சொல்லுக்குத்தான் பாலே தவிர, அதற்கும் நிஜ உலகுக்கும் சம்பந்தம் இல்லை இலக்கண பூர்வமானது மட்டுமே. அதாவது ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களில் ஒரு சொல் ஆண்பாலாகவும், இன்னொரு சொல் பெண் பாலாகவும் இருக்கக் கூடும். ஆகவே ஒரு சொல்லின் பாலை/லிங்கத்தை அறிந்து உபயோகிக்க வசதியாக அமர கோசம் தொகுக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பு.
    அமர கோசத்தில் ஒரே பொருள் உள்ள சொற்களில் லிங்கம் ஒன்றாக இருக்கிற சொற்களை கூட்டுச் சொல்லாக – “சமாசமாகத் தொகுத்துச் சொல்லியும், வெவ்வேறு லிங்கத்தில் ஒரே பொருள் உள்ள சொற்களை பிரித்து தனித்தனியாகவும் தொகுக்கப் பட்டுள்ளது.
    ஸ்தவ: ஸ்தோத்ரம் ஸ்துதிர்நுதி: [स्तव: स्तोत्रम् स्तुतिर्नुति:]
    இதில் ஸ்தவ: என்பது ஆண்பால், ஸ்தோத்ரம் என்பவை நபும்சக லிங்கம். ஸ்துதி நுதி என்பவை பெண்பால் இவ்வாறு பாலினப் படி சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. இன்னொரு உதாரணம்:
    ஜநுர்ஜநந ஜந்மாநி ஜநிருத்பத்திருத்³வ: [जनुर्जनन जन्मानि जनिरुत्पत्तिरुद्भव:]
    இதில் ஜனு ஜனனம் ஜன்மம் ஆகியவை நபும்சக லிங்கம் என்பதால் ஒன்றாக வந்துள்ளன. ஜனி உத்பத்தி ஆகியவை பெண்பாற் சொற்கள். உத்பவ: என்பது ஆண்பால்.
    சில பெயரிடைச் சொற்கள் (adjective) மூன்று லிங்கங்களிலும் வரும் அப்போது த்ரிஷு” (त्रिषु) என்று அமரகோசம் குறிக்கிறது. த்வயோ: (द्वयो என்று கொடுத்திருந்தால் அது புல்லிங்கத்திலும், நபும்சக லிங்கத்திலும் மட்டும் உபயோகிக்கப் படும் சொல் என்று புரிந்து கொள்ளலாம். நபும்ஸி (नपुंसि) என்று இருந்தால் அது புல்லிங்கம் தவிர மற்ற லிங்கங்களில் கொடுக்கப் பட்டுள்ள சொற்கள் வரலாம். ந ஸ்திரியாம்என்று இருந்தால் அது ஸ்திரிலிங்கம் தவிர மற்ற லிங்கங்களில் வரக்கூடிய சொல்லைக் குறிக்கும். க்லீபே” (न क्लीबे) என்று இருந்தால் அது நபும்சக லிங்கம் தவிர மற்ற லிங்கங்களில் வரும் சொற்களைக் குறிக்கும்
Working...
X