Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல்-8

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல்-8

    நாம் சாந்தர்களாக இருக்க வேண்டும், ஸத்வ குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதால்தான் ஆஹார விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடம்பை மட்டுமல்லாது உள்ளத்தையும் வளர்ப்பதாக உணவை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே சாஸ்திரத்தில் போஜன விதிகளை ஏற்படுத்தியுள்ளனர். பரம சாத்விக உணவானாலுங்கூட அளவு முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு சாப்பாடு, ஒரு பலகாரம் என்றிருப்பது நல்லது. இல்லாவிடில் இரண்டு சாப்பாடு, ஒரு டிபன் என்று இப்போது பலர் வைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தாலும், ஒவ்வொரு வேளையும் மிதமாகச் சாப்பிட வேண்டும். வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாராமும் அரை வயிற்ற்குக்குத்தான் சாப்பிடணும். கால் வயிற்றுக்கு ஜலம் குடிக்கணும், மற்ற கால் வயிறு காலியாக வாயுவுக்கு விட்டுவிடணும்.

    சனிக்கிழமை, குருவாரம், ஸோமவாரம், மாதா-பிதா இல்லாதவர்களானால் அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற நாட்களில் ஒரு வேளை சாப்பாடு, ஒருவேளை பலகாரம் என்று வைத்துக் கொள்ளுதல் நலம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை லங்கணம் , அதாவது முழுப் பட்டினி போட வேண்டும். அது தான் ஏகாதசி சுத்த உபவாசம். சுத்த உபவாசம் என்றால் முழுப்பட்டினி என்று தெரியும். உபவாசம் என்றால் 'கூட வசிப்பது என்று பொருள். பகவானுக்கு பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பதுதான் உபவாஸம். ப்ருஹதாரண்ய உபநிஷத்திலேயே பட்டினி போட்டு வ்ரதம் இருப்பதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி விரதம் சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்குப் பிறகு ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்று இருக்கிறது. ஏகாதசியன்று பூர்ண உபவாசமே சொல்லப்பட்டிருக்கிறது. சிவபரமான விரதங்களை வைஷ்ணவர்கள் அனுஷ்டிக்க மாட்டார்கள். அதே போல, வைஷ்ணவ பரமான விரதங்களை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் ஏகாதசி மட்டும் அத்தனை பேருக்கும்
    பொதுவாக தர்ம-சாஸ்திரத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

    ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம், ஆனால் ரொம்ப கஷ்டமும் கூட. அடுத்தபடியாக ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது. அதற்கடுத்தது, நிஜப் பலஹாரமாக பழத்தோடு பால் சாப்பிடுவது. வியாதியஸ்தர்கள் ஒருவேளை பக்வமான இட்லி-தோசை போன்றவையும் பழமும் சாப்பிடுவது என்று இருக்கிறது. ஆனால் இவற்றில் முக்கியமாக ஒரு வேளை கூட அன்னம் உண்ணாது இருத்தல் முக்கியம்.

    நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3 - பக்கம் 616-619, 657-658 & 675
Working...
X