பரமேச்வரனையேதான் ஸங்கீதத்துக்கு மூலமாகச் சொல்லியிருக்கிறது. மெளன தக்ஷிணாமூர்த்தி மாதிரியே, வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்றும் ஒரு ரூபம் இருப்பதைப் பார்க்கிறோம். 'நாததநும் அநிசம் சங்கரம்' என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேச்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். தநு என்றாம் சரீரம். இதில் ஈச்வரனின் ஸத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே ஸப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன (ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வரஸப்தஸ்வர) என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார். ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரங்கள் எப்படியென்று புரியாமல் இருந்தது. வாஸுதேவாச்சார், ஸாம்பசிவய்யர், மஹாராஜபுரம், செம்மங்குடி போன்ற எல்லோரிடமும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல் இருந்தது, பிறகு ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமமும், பஞ்சமமும் (ஸ, ப) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈச்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும் விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்தும் பரமேச்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும்படியான பிரமாணங்கள் அகப்பட்டன.

விக்ருதிகளான ரி, க, ம, த, நி என்னும் ஸ்வரங்களில் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது. ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பதின் முதல் எழுத்துக்களே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. எழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். 'ஸ'வுக்கு அடுத்து வரும் 'ரி'யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. 'க' ஆடு போடும் சத்தம். 'ம' க்ரெளஞ்ச பக்ஷியின் கூவல். 'ப' குயிலின் ஒலி. 'த' குதிரைக் கனைப்பு. 'நி' யானையின் பிளிறல்.
சீக்ஷா சாஸ்திரத்தில் மூச்சு எந்தெந்த அவயவங்களில் பட்டு வேத அக்ஷரங்கள் உண்டாகவேண்டுமென்று சொல்ல்யிருக்கிறதோ, அதேபோல ஸங்கீத சாஸ்திரத்தின் ஒவ்வொரு ஸ்வரமும் அடி வயிற்றிலிருந்து, உச்சந்தலைவரை எப்படியெப்படி ச்வாஸ சலனத்தால் உண்டாக வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையே தியாகராஜ ஸ்வாமிகள் 'சோபில்லு ஸப்தஸ்வர' என்னும் க்ருதியில் சொல்கிறார்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 820-821

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends