Announcement

Collapse
No announcement yet.

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரல&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரல&

    Submitted by Right Mantra Sundar on May 2, 2014 –




    பிரபல சின்னத்திரை மற்றும் நாடகக் கலைஞர் பாம்பே ஞானம் அவர்கள் தலைமையிலான மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக் குழுவின் ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நாடகம் வேளச்சேரி சச்சிதானதா ஹாலில் நடைபெற்றது.


    கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று நாடகத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நமக்கு நாடகத்தை பார்க்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, வேளச்சேரி கிளம்பிவிட்டோம். நாம் வேளச்சேரி போகும்போது மணி 7. எப்போதும் சரியான நேரத்தில் துவங்கும் நாடகம் நல்லவேளை அன்று சற்று தாமதமாகத் தான் துவங்கியது நம் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்.



    என்ன சொல்ல, எப்படி சொல்ல, எதைச் சொல்ல? எதற்குமே வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு பரவசம். நெகிழ்ச்சி.

    ராம நாம மகிமையை விளக்க போதேந்திராள் அவர்களின் வாழ்க்கையை விட சிறந்த வேறு உதாரணம் இருக்க முடியாது. அந்தளவு ராம நாமத்தின் மகிமையை கலியுகத்தில் அனைவரும் உணரவேண்டும் என்றே அவதாரம் செய்தவர் போதேந்திராள்.

    நாடகம் என்றால் ஏதோ காமெடி நடிகர்கள் போடும் நாடகம் போல இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். இந்த நாடகமே வேறு. நாடகத்தின் நேர்த்தி என்ன, தத்ரூபமான செட்டிங்குகள் என்ன, நடித்த கலைஞர்களின் நடிப்பு என்ன (அனைவரும் பெண்கள்), பாடல்கள் என்ன, இசை என்ன… ஆத்மானுபவம். ஆத்மானுபவம். மிகையில்லை. அத்தனையும் சத்தியம்.




    ராம நாமத்தின் மகிமையையும் போதேந்திராளின் வாழ்க்கை வரலாற்றையும் நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் இது ஒரு புது அனுபவம். பல புதிய சம்பவங்களை நாடகத்தின் மூலம் தெரிந்துகொண்டபோது உடலும் உள்ளமும் சிலிர்த்தது.

    ஏதோ கோவிந்தபுரத்திற்கே போய் வந்தது போன்ற உணர்வு ஆட்கொண்டது. நாடகம் முடிந்து பல மணிநேரங்கள் கழித்தும் ராம நாமம் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.




    நிகழ்ச்சி நடைபெற்ற சச்சிதானந்தா ஹால் வேளச்சேரி வாழ் மக்களால் ஃபுல்லாகி நிரம்பி வழிந்தது. தவிர தொலை தூரத்தில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.

    கோடி கொடுத்தாலும் போதாது என்னுமளவிற்கு அத்தனை அருமையாக இருந்த இந்த நாடகத்திற்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து வாணிமஹாலில் மே 9 முதல் 4 நாட்கள் நடக்கவிருக்கிறது. ராம நாம மகிமையை பறைசாற்றும் குருவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பை நழுவவிட்டுவிதாதீர்கள்.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர் கோவிந்தபுரம். இந்த ஊரை நினைத்த மாத்திரத்தில், மகான்கள் மூவரின் பெயர்கள் நெஞ்சில் அலைமோதும். ஸ்ரீபகவன்நாம போதேந்திராள், ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் ஆகிய அம்மூவரும் ராம நாமத்தின் மகிமையை உலகறியச் செய்த உத்தம புருஷர்கள்.



    ஸ்ரீபகவன்நாம போதேந்திராள், காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர்; திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், போதேந் திராளுக்கு சம காலத்தவர். மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், மேலே குறிப்பிட்ட இருவருக்குப் பின், நூறு ஆண்டுகள் கழித்து அவதரித்தவர். கோவிந்தபுரத்தில், போதேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தைக் கண்டறிந்து, அதிஷ்டானம் அமைத்தவர் இவர்.

    பெண்களால், பெண்களுக்காக இயங்கி வரும் தலைசிறந்த நாடகக் குழு, பாம்பே ஞானம் அவர்களின் மகாலட்சுமி நாடகக் குழு. 25 வருட சேவையில், 200 பெண் கலைஞர்களை உருவாக்கியவர்; திரையிலும், திரைக்கு பின்னும் என மேடைக்கான அனைத்து திறன்களை கலைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து, மேடை நிர்வாகத்தை திறம்பட செய்து கலைமாமணி, நாடக சூடாமணி, நாடக பத்மம், நாடக ரத்னம், வாணிகலா சுதாகரா என்று பல சிறப்பு பட்டங்களை பெற்றவர் ஞானம்.



    பெண் கலைஞர்களை ஆண் வேடத்தில் இவர் நாடகத்தில் பார்ப்பது சர்வ சகஜம். பெண்கள் பிரச்னை, சமுதாய பிரச்னை என்று பல கோணங்களில் பல நல்ல கருத்துள்ள நாடகங்களை நமக்கு தந்தவர். வெள்ளி விழாவிற்காக, இவர் தேர்ந்தெடுத்தது முற்றிலும் மாறுபட்ட கதை. இறைவனின் புகழை நாம ஸ்மரணத்தால் பாடிய மஹானுபாவர்களில் தலைசிறந்தவரான பகவன் நாம போதேந்திரரின் சரித்திரத்தை நாடக வடிவாக்கம் செய்து, சென்னை ரசிகர்களை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார். சென்னையில் பல இடங்களில் நடைபெற்ற இவரது நாடகம் சமீபத்தில் வேளச்சேரி சச்சிதானந்தா ஹாலில் நடைபெற்றது.

    போதேந்திராளின் பூர்வாசிரம கதைக்கும், சந்நியாசி ஆசிரம வரலாறுக்கும் நாடக வடிவம் கொடுத்து மேடையேற்றி அசத்தியிருக்கிறார் பாம்பே ஞானம். வெள்ளி விழா காணும் இவருடைய ‘மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு’வின் நடிகைகள், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உயிரூட்டியிருக்கிறார்கள்.

    தொடர்ந்து ஆறு நாட்கள், வேளச்சேரி சச்சிதானந்தா ஹாலில் கூட்டம் அலை மோத… காட்சிக்குக் காட்சி கைத்தட்டல்களால் அரங்கம் அதிர… இப்படி ஒரு நாடகத்தை நாம் பார்த்ததேயில்லை. இனியும் பார்க்கமுடியுமா என்று தெரியாது.










    மேடையில் ஆண் வாசமே கிடையாது. குழந்தை வேடம் முதல் முதியவர் வரை அத்தனை பாத்திரங்களையும் பெண்களே ஏற்று பிரமிக்க வைக்கிறார்கள். மொத்தம் 36 பேர்!



    ஆரம்பத்திலும், நடுநடுவே கொஞ்சமும் பாம்பே ஞானமும், இன்னொருவரும் மேடைக்கு வந்து கதையை விவரிப்பது, நாடகத்தை வேகமாக வளர்த்திச்செல்ல உதவுகிறது. இவர்களின் குரல் வளம் தான் என்னே… நம்மை பெற்ற தாய் நமக்கு அருகில் நின்று .கதை சொல்வது போன்றதொரு உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.

    பச்சிளம் புருஷோத்தமனை மடத்துக்கு அனுப்பி வைக்க முடிவானதும், புருஷோத்தமன் அம்மாவின் இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டு விம்முவது உருக்கம். அந்த நேரத்தில் தாய் தனது மனதை தேற்றிக்கொண்டு குழந்தைக்கு, பிரம்மோபதேசம் பெற்ற பின்னர் ஒருவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் (உபனயனத்துக்கு பின்னர்) என்று விவரிக்கும் காட்சி அபாரம். பின்பற்றாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.

    நாடகம் நெடுகிலும் ஒலிக்கும் வேத கோஷங்களும், பஜனைப் பாடல்களும் சூழலின் புனிதம் கூட்டுவதற்கு உதவுகின்றன. இசை அமைத்திருக்கும் ஆர்.கிரிதரன் நிறையவே மெனக்கிட்டிருக்கிறார்.

    பல மாத ஆராய்ச்சிக்குப் பின் உருவாகியிருக்கும் இந்த நாடகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம்- மொத்த வசனங்களையும் முன்கூட்டியே பதிவுசெய்து வைத்துக்கொண்டு ஒலிக்கச் செய்திருப்பது. டப்பிங் கலைஞர்கள் இருபது பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள். நடித்திருக்கும் அத்தனை பேரும் இம்மி பிசகாமல் ஆடியோவில் ஒலிக்கும் வசனத்துக்கு ஏற்ப, அதே மாடுலேஷனில் உதட்டை அசைத்து நடித்திருப்பது சூப்பர்!

    க்ளைமாக்ஸ் காட்சியில், ராம நாமத்தை ஜபித்துக்கொண்டே பெண்கள் கோலாட்ட நடனம் ஆடும்போது, மெதுவாக திரை விலக, போதேந்திராளின் அதிஷ்டானத்துக்கு மங்கள ஆர்த்தி காட்டுவது நல்ல காட்சி. காணக்கிடைக்காத காட்சி. எழுந்து நின்று மொத்த அரங்கமும் கைதட்டுகிறது.




    சென்னையில் நாடகத்தை மேடை ஏற்றும் முன் தற்போதைய டா பீடாதிபதி ஜெயேந்திரரின் ஆசியைப் பெற காஞ்சிபுரம் சென்றாராம் பாம்பே ஞானம்.

    ”பேஷா நடத்துங்கோ! காஞ்சியிலும் இந்த நாடகம் நடத்த ஏற்பாடு பண்றோம்…” என்று வாழ்த்திய ஜெயேந்திரர், ஞானத்திடம் சொன்ன இன்னொரு விஷயம்… ”மகா பெரியவா முதன்முதலா என்னை மடத்துக்கு வந்துவிடும்படி அழைத்தது, கோவிந்தபுரத்தில் போதேந்திராளின் அதிஷ்டானத்தில்தான்!” என்றாராம்.

    மேலும் ஆதிசங்கரர் பகவத் பாதாள் பற்றியும் இதே போன்று ஒரு நாடகத்தை தயாரித்து அரங்கேற்றும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

    ஆதி சங்கரர்… நினைத்துப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.

    நாடகத்தின் பல காட்சிகள் நம்மை கூடவே அந்த காலத்துக்கும் அழைத்துச் சென்று நெகிழ வைக்கின்றன.

    உதாரணத்துக்கு சில காட்சிகள்….

    குழந்தையை மடத்துக்கு அற்பணிக்கும் காட்சி

    அது 17-ம் நூற்றாண்டு. காஞ்சிபுரத்தில், மந்டனமிஸ்ர அக்ரஹாரத்தில் ஓலைகள் படர்ந்த சிறு குடிலில் வசித்து, மடத்துக்கு ஊழியம் பார்த்துக் கொண்டிருந்த பாண்டுரங்கன்- சுகுணா தம்பதிக்கு, மணமாகி வருடங்கள் பல கடந்தும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அக்கம்பக்கத்து பெண்மணிகளின் ஏளன வார்த்தைகள் சுடுகின்றன. மறுமனை, பிரார்த்தனை, பரிகாரம் என்றெல்லாம் யோசனை கள் சொல்லப்படுகின்றன.



    கணவரிடம் தன் மனக்குறையைப் பகிர்ந்து கொள்கிறாள் சுகுணா. ”மடத்தில் நம்ம குருவிடம் தெரியப்படுத்துவோம். குழந்தை பாக்கியம் வேணும்னு வெளிப்படையாக் கேட்கவேண்டாம். மனசுல வேண்டிண்டு நமஸ்கரிப்போம். ஞான திருஷ்டில அதைத் தெரிஞ்சுண்டு அனுக்கிரகம் பண்ணிடுவார்…” என்கிறாள்.



    காஞ்சி மடம் சென்று, 58-வது பீடாதிபதியாக அருள்மழை பொழிந்துகொண்டிருக்கும் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மனம் உருகப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள், பாண்டுரங்கனும் சுகுணாவும்.

    1692-ம் வருடம், புரட்டாசி மாதம், பவுர்ணமி நாளன்று கோடி சூரியன் உதித்த மாதிரி ஆண் குழந்தை பிறக்கிறது சுகுணாவுக்கு. புருஷோத்தமன் என்று நாமகரணம் செய்துவைக்கிறார்கள். அவதார புருஷனுக்கு இருக்கவேண்டிய அத்தனை லட்சணங்களும் புருஷோத்தமனிடம் இருப்பதாக ஊர் மெச்சுகிறது.

    நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, பிரம்மோபதேசத்துக்குத் தயாராகிறான் புருஷோத்தமன். மகனின் பூணூல் கல்யாணத்துக்கு, பெரியவாளிடம் ஆசி வாங்கி வரவேண்டும் என்று செல்கிறார்கள் அவன் பெற்றோர்.




    மடத்தில் வேறொரு பெரியவரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன்.

    ”என் பேர் பரசுராமன். இவன் தாய் தந்தையை இழந்த குழந்தை. அஞ்சு வயசு. ஸ்ரீ மடத்துப் பாடசாலையிலே…” என்று தயக்கத்துடன் இழுக்கிறார் பெரியவர்.

    ”பிரேமை இருந்தா லோகமே நமக்குச் சொந்தம்தானே? என்ன பேர் வெச்சிருக்கே?” என்று வினவுகிறார் சுவாமிகள்.

    ”இன்னும் நாமகரணம் பண்ணலே…”

    குழந்தையை உற்றுநோக்கும் சுவாமிகள், ‘தீர்க்கமான கண்கள், விசாலமான நெற்றி, இவன் ஞானத்தின் சாகரம்… இளம் பிராயத்திலே சமாதி அடையறது எல்லோர் மனசுக்கும் கிலேசமாகத்தான் இருக்கும்’

    ”குழந்தைக்கு ஞானசாகரம்கற நாமகரணத் தோட உள்ளே அழைச்சுண்டு போய் விட்டுடலாம்…” என்று உத்தரவாகிறது.

    அடுத்து, பாண்டுரங்கன் கைகட்டி, வாய் பொத்தி சுவாமிகள் முன் நிற்க, பக்கத்தில் புருஷோத்தமன்.




    ”யார் இந்தக் குழந்தை?” என்று சுவாமிகள் கேட்க, ”பெரியவா அனுக்கிரகத்துல பிறந்த குழந்தை…” என்கிறார் பாண்டுரங்கன்.

    சுவாமிகள் இதழோரத்தில் மெல்லிய புன்னகை.

    ”என் குழந்தைன்னு இவனை என்கிட்டேயே குடுத்துடுவியா?”

    சுவாமிகளின் அருள் அறிந்து புருஷோத்த மனுக்கு பிரம்மோபதேசம் செய்து, அவனை மடத்துக்கு அனுப்பிவைக்கத் தீர்மானிக்கிறார்கள் பெற்றோர். அம்மாவைப் பிரிய மனம் இல்லா தவனாக, அவளை இறுகக் கட்டிக்கொள்கிறான் புருஷோத்தமன்.




    ”நீ அங்கே போய் சமர்த்தா இருக்கணும்… பெரியவா சொல்படி நடக்கணும்…” என்கிறாள் சுகுணா.

    ”நீ என்னோட இருக்கமாட்டியா அம்மா…” என்று பிள்ளை ஏங்குகிறது.

    ”இல்லேடா… உன்னோடு சேர்ந்து வேதம் படிக்க, விளையாட, மடத்துல ஞானசாகரன் இருக்கான். அவன் உனக்குத் துணையா இருப்பான். அவனுக்கு நீ துணையா இருக்கணும்” – சமாதானம் சொல்கிறார் தந்தை.

    ”கடைசிவரைக்கும் ஞானசாகரனும், நீயும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம ஒத்துமையா இருக்கணும்…” என்ற சுகுணா, மகனின் பிஞ்சுக் கரம் பிடித்து கணவனிடம் கொடுக்க, மடம் நோக்கி நடக்கிறார்கள் தந்தையும், தனயனும்.

    ‘தவம் இருந்து உங்களுக்கு சத்புத்ரனா இவன் பிறந்தது, இப்படி ஒரு பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கத்தான்…’ – அசரீரி ஒலிக்கிறது.




    புருஷோத்தமன் சந்நியாச தீட்சை பெறுதல்

    ”புருஷோத்தமா! நீ பூர்ணத்துவம் அடைந்து விட்டாய். இன்று முதல் நீ போதேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவாய். காஞ்சி காமகோடி பீடத்தில் அமரும் முன்பு, நீ பூரி சென்று பகவான் ஜகந்நாதரைத் தரிசிக்க வேண்டும். அந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மிகாந்தகவி என்பவரிடம் ‘நாம கௌமதி’ என்ற நூல் உள்ளது. அதைப் படித்து, ராம நாமத்தின் மகிமையை நீ உலகுக்குப் பரப்ப வேண்டும்” என்று ஆசி வழங்கினார்.




    போதேந்திராள் பூரி சென்றடைந்தபோது, அங்கே லக்ஷ்மிகாந்தகவி உயிருடன் இல்லை. அன்னாரின் மகன் ஜகன்னாதன் வசமிருந்த ‘நாம கௌமதி’ நூலைப் பெற்று, அகல் விளக்கு வெளிச்சத்தில் ஒரே இரவில் அதைப் படித்துத் தெளிகிறார் போதேந்திராள்.

    ஷேத்ராடனம் செய்யும் ஒரு இளம் தம்பதியினர், ஒரு ஊரில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அப்போதெல்லாம், ஊருக்குள் திடீர் திடீரென படையெடுக்கும் முகம்மதியர்கள் பெண்களை கடத்திக்கொண்டு போய் தாசிகளாக வைத்துக்கொள்வது வழக்கம்.



    கணவனுடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது அந்த பக்கம் வந்த வீரர்கள் அந்த பெண்ணின் அழகில் மயங்கிவிட எவரும் அறியாவண்ணம் அவளது வாயை பொத்தி கடத்திக்கொண்டு போய் நாசம் செய்துவிடுகின்றனர். காலை எழுந்தவுடன் மனைவியை காணாது தவிக்கும் கணவன் ஊர் முழுக்க தேடுகிறான்.




    இந்நிலையில், கயவர்களிடமிருந்து தப்பித்து கணவனை தேடி ஓடிவருகிறாள் அந்த பெண். தன் முழு உடலையும் மறைக்கும் பர்தாவுடன் கூடிய ஆடையைஅணிந்திருக்கிறாள். தனது கணவனை தேடி வந்து அவன் காலில் விழுந்து நடந்த அனைத்தையும் கூறி, தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படியும் தான் ஒரு பாவமும் அறியாதவள் என்றும் கதறும் காட்சியில் உண்மையில் நாம் கண்கலங்கிவிட்டோம். சக பார்வையாளர்களும் கண் கலங்குவதை காண முடிந்தது.


    என்ன செய்வதென்று தெரியாது கலங்கும் இருவரும், போதேந்திராள் அந்த ஊருக்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரிடம் ஓடிவருகின்றனர்.

    நடந்த அனைத்தையும் கண்ணீர் மல்க விவரிக்கின்றனர்.

    ”நீ உத்தமின்னு உனக்குத் தெரியும். ஆனா, உலகம் நம்பணுமே? சீதாதேவிக்கே அக்னிப் பரீட்சை தேவைப்பட்டது. அது மாதிரி, நீ உத்தமிதான் என்பதை ஊரார் ஒப்புக்கவும், ராம நாம மகிமையை உலகுக்கு உணர்த்தவும் உனக்கு ஒரு ஜலப் பரீட்சை நடத்தப்போகிறேன்!” என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தார் போதேந்திராள்.

    ”ராம நாமத்தை ஜபித்தபடியே ஜகன்னாத தீர்த்தத்தில் மூழ்கி ஸ்நானம் செய்! வெளியே வரும்போது, மிலேச்ச ஆடை மறைந்து, மஞ்சள் குங்குமத்துடன் இந்து சுமங்கலியாக வந்தால், நீ உத்தமி என்பதும், ராம நாமம் சத்யம் என்பதும் உலகுக்கு ஊர்ஜிதமாகிவிடும்!” என்றார்.




    மறுநாள் ஊரார் முன்னிலையில் அந்த பெண் அதே போன்று ராம நாமம் ஜெபித்தபடி ஜகன்னாத தீர்த்தத்தில் இறங்க, வெளியே வரும்போது சுமங்கலியாக பூவோடும் பொட்டோடும் ‘ராம், ராம் ராம்’ என்று கூறியபடி அப்பழுக்கில்லாமல் வெளியே வருகிறாள்.

    அரங்கமே இந்த காட்சியில் அதிர்கிறது. ராம நாமத்தின் மகிமையை இதைவிட அற்புதமாக விளக்க முடியுமா என்ன?




    அடுத்து மற்றொரு காட்சி….

    வாய் பேச முடியாத சிறுவன் பேசுதல்

    பெரம்பூரில், அந்தணர் ஒருவரின் வீட்டில் மடாதிபதிக்கு பிக்ஷை. இலையில் அன்னம் பரிமாறப்படுகிறது. மனையில் உட்காரும் போதேந்திராள் கண்மூடி ராம நாமம் ஜபிக்கிறார். மற்றவர்களையும் ஜபிக்கச் சொல்கிறார்.

    அந்த வீட்டுத் தம்பதியின் குழந்தை, பிறவியிலேயே பேசும் திறன் அற்றவன். அவனால் ராம நாமம் ஜபிக்க இயலவில்லை. போதேந்திராளுக்கு அதிர்ச்சி! ”ராமா! உன் நாமத்தை இக் குழந்தையின் வாயால் நான் எப்படிச் சொல்லவைப்பேன்? குழந்தையின் நாவில் உன் நாமா வராதபோது எனக்கு பிக்ஷை அவசியம்தானா?” என்றபடியே இலையைவிட்டு எழுந்துவிடுகிறார்.




    அபவாதத்துக்கு ஆளாகிவிட்ட குற்ற உணர்ச்சியில், குழந்தையின் பெற்றோர் பெரியவாளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர் பிக்ஷை செய்துகொண்டிருந்த இலையிலிருந்த பலகாரங்களை குழந்தை எடுத்துச் சாப்பிட்டுவிட, பெற்றோர்கள் அதை அடிக்கிறார்கள்.

    ”ஆமா… ஆமா…” என்று குழந்தை அழ, அதுவே ‘ராமா… ராமா…’ என்று வெளிப்பட, குழந்தை ராம நாமம் முழங்கிய திருப்தியில் போதேந்திராள் பிக்ஷையை ஏற்க… ‘குழந்தை பேசிட்டான்’ என்று பரம சந்தோஷம் பெற்றவர்களுக்கு!




    போதேந்திராளின் பயணம் தொடர்கிறது.

    இப்படி அவர் ஜீவா சமாதி அடையும் வரை பல்வேறு சம்பவங்களை காட்சிகளாக காண்பிக்கின்றனர்.

    கோலாட்டம் என்ற வர்ணஜாலம் !

    இறுதியில் இடம்பெறும் ராம நாம கோலாட்டம் தான் ஹை லைட்டே. வர்ணஜாலம் தோற்றுவிடும் போங்கள்.



    ராம நாமத்தை உச்சரித்தபடி பெண்கள் ஆடும் அந்த கோலாட்டம்… அப்பப்பா… காண்போர் அனைவரையும் பரவசப்படுத்துகிறது. கருத்தரித்திருக்கும் பெண்கள் வீட்டில் அமங்கலமான சொற்களை அள்ளித்தெளிக்கும் டி.வி. சீரியல்களை பார்ப்பதற்கு பதில் அவசியம் இந்த நாடகத்தை பார்க்கவேண்டும். நாடகமெங்கும் ஒலிக்கும் வேத மந்திரங்கள், இசை, பாடல்கள், ராம நாம மகிமை அனைத்தும் அந்த குழந்தையை காக்கும் ரட்சையாக அமையும்.

    ஒன்றுக்கும் உதவாத மனதை கெடுக்கக்கூடிய தற்காலத்து திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பதில் பெற்றோர்கள் அவசியம் தங்கள் குழந்தைகளை இது போன்ற நாடகங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். ராம நாம மகிமை அவர்கள் வாழ்வில் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

    தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட நாடகத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரையும், மேடைக்கு அழைத்து என்னென்ன பாத்திரங்களை யார் யார் ஏற்றார்கள் என்பதை விவரிப்பது டச்சிங். தனது குழுவினருக்கும் பாராட்டுக்கள் போய் சேரவேண்டும் என்பதில் எந்தளவு ஞானம் உறுதியாக இருக்கிறார் என்பது புரிந்தது. உண்மையில் மிகப் பெரிய மனது.



    இந்த முறை நாம் மட்டுமே சென்றோம். அடுத்த முறை, பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் செல்லவிருக்கிறோம். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கோடி கொடுத்தாலும் போதாத நாடகத்திற்கு அனுமதி இலவசம். இதைக் கூட பயன்படுத்திக்கொண்டு நம்மால் புண்ணியம் தேடிக்கொள்ள முடியாதா என்ன?

    ராமரை விட ராம நாமம் உயர்ந்தது என்பது ராமருக்கே தெரியாது. அதன் மகிமையை உள்ளார்ந்து உணர்ந்த மகான்கள் பலர். அவர்களின் சரித்திரத்தின் மூலம் நாம் அடையும் இன்பம் அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. பாம்பே ஞானத்தின் இந்த அரிய நாடக படைப்பு, இப்பூமியின் கடைசி சுவாசம் வரை பேசப்படும்.
    - See more at: http://rightmantra.com/?p=11165#sthash.30LYHHiF.dpuf
Working...
X