ஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)
(எழுதியவர்: பிரம்மஸ்ரீ. நீர்வை. தி. மயூரகிரி சர்மா)
முருகப்பெருமானைப் பற்றிய புராண, வரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை.
எனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் மாம்பழக்கதை என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான குமாரசம்பவம், ஸ்காந்தபுராணம் ஆகியவற்றில் காணப்படவில்லை. (இதனால் தமிழில் கச்சியப்பசிவாச்சார்யார் செய்த கந்தபுராணத்திலும் இல்லை)


எனினும், பழநித்தலபுராணமாக விளங்குவது இக்கதையே.. தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற திருத்தலமான முருகனின் ஆறுபடைவீடுகளில் மூன்றாவது படைவீடான இந்தப்பழநித்தலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியமைக்கான முக்கியகதையாக இக்கதையே சொல்லப்பட்டு வருகின்றது.
அத்துடன் தமிழ்த்திரைப்படங்களிலும் இக்கதை சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக திருவிளையாடல் திரைப்படத்தில் இக்கதையும், அதோடு இணைந்ததான ஓளவையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய பழம் நீ அப்பா.. என்ற பாடலும் முருகபக்தர்களின் உள்ளதை வெகுவாக கவர்ந்தவையாகும்.
இத்தகு மாம்பழத்திருக்கதை சொல்லுகிற தத்துவார்த்த விஷயங்களை வெளிப்படுத்திய வரலாறோ, கதைகளோ இது வரை, சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாக எம்மால் அறியமுடியவில்லை..
அவ்வகையில் தமிழோடு கலந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன், உரையிடையிட்ட பாட்டுடைக் காவியமாக புதுமுயற்சியாக இந்த மாம்பழக்கதை சூதபல- ரஸாலமஹாபல வைபவம் அல்லது ஸ்ரீ தண்டபாணி ஸ்வாமி வைபவம் அல்லது ஜ்ஞாநபல உத்ஸவ பத்ததி தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த முயற்சிக்கு முன்னோடியாக விளங்கியவர் அமரத்துவம் எய்திய யாழ்ப்பாணம். வியாகரணசிரோமணி பிரஹ்மஸ்ரீ. சீதாராமசாஸ்திரிகள் ஆவார் என்பதும் இங்கே நன்றியோடு குறிப்பிட வேண்டியுள்ளது.


சாஸ்திரிகளின் முப்பதாண்டுகளுக்கு முன்னைய பழைய கையெழுத்துப் பிரதி யுத்தகாலத்தில் தொடர்ந்த இடப்பெயர்வுகளால், கைவிடப்பட்டு, மழையில் நனைந்து, சிதைந்து, பல பாகங்களைக் காண இயலாத நிலையிலும், சில பாகங்கள் எழுதப்படாத நிலையிலும் கிடைத்தன.
வேறு கைப்பிரதியும் எவரிடமும் இல்லை.. எனவே, பலவற்றை மாற்றியும், சிலவற்றிற்கு புதிய சொற்களை அமைத்தும், ஓரிரு ஸ்லோகங்களை முற்றிலும், புதிதாக எழுதி இணைத்தும் இக்கதையை பூரணப்படுத்தியுள்ளேன். இந்த பத்ததியை சாஸ்திரிகள் எழுதியதன் முக்கிய நோக்கமாக, அதற்கு முன்னரே யாழ்ப்பாணத்து கோவில்கள் சிலவற்றில் நடைபெற்று வரும் மாங்கனி உத்ஸவத்தை நெறிப்படுத்துவதே இருந்திருக்கிறது. ஆனாலும் பத்ததி பரவலடையாமையால் அல்லது பத்ததி அச்சேறாமையால், பின் சிதைந்து போனதால், மாங்கனி உத்ஸவங்களில் இதனை பாவிக்கும் நடைமுறை இப்போதில்லை..


ரஸால மஹாபல வைபவம்
எல்லா உயிர்களுள்ளும் நிறைந்திருப்பவரும், தனக்குவமை இல்லாத தயாபரருமாகிய சிவபெருமான் திருக்கைலாயமாமலையில் எழுந்தருளி அருள்கிறார். அவரது வாமபாகத்திலே என்றும் அகலாத அன்னையான பார்வதி காட்சி தருகிறாள். சக்தி அம்சமான முருகன் அதனை வெளிப்படையாக ஏற்று அன்னை அருகில் அமர்ந்திருக்கிறான். பிரணவஸ்வரூபனான கணேசன் சிவனாரின் வலது பாகத்தில் தம் தந்தையோடு இணைந்து இருக்கிறான்.
சிவகண நாயகரான நந்தியம்பகவான் தேவர்,முனிவர்,அடியவர் யாவரும் முன்னின்று சேவிக்க வேண்டிய முறைகளை வகுத்தருள்கிறார். தூப, தீப ஆராதனைகளாலும், வேத மந்திரங்களாலும், சர்வ உபசாரங்களாலும் அடியவர்கள் பார்வதி பரமேஸ்வரரை வழிபடுகின்றனர்.
அவ்வமயம் மூவுலகிலும் உலவி வருபவரும் சிவ- விஷ்ணு ஐக்கியத்தை உலகிற்கு வெளிப்படுத்தும்; அற்புதருமாகிய தேவமுனிவர்; கலகப்ரிய நாரதமாமுனிவர் கையிலே ஒரு அபூர்வமான கிடைத்தற்கரிய ஒரு மாங்கனியை ஏந்தியவராக திருக்கைலாயம் வந்து சேருகிறார்.
அந்த மாமலையை அணுகியதும், ஹர ஹர மஹாதேவ.. ஸம்போ மஹாதேவ..என்ற கோஷமிட்டவாறு.. உள்ளம் உருக, ஆனந்தக்கண்ணீர் பொழிய இறைவன் திருமுன்றலை
அடைகிறார்.
உமயா ஸஹிதம் சம்பும்
கைலாஸாத்ரி நிவாஸிநம்//
ஸேவார்த்தி மாகதஸ்தத்ர
நாரதஸ்த்வா ம்ருகஸ்தக//
தான் கொண்டு வந்திருந்த மாம்பழத்தை இறைவனிடம் காணிக்கையாக சமர்ப்பித்து, ஆதிதம்பதிகளை பக்தியோடு போற்றி நிற்கிறார்.
பலம் சோவாய நீக்ருத்ய
ப்ராணநாமாதி தம்பதீ//
அப்போது, அங்கே எழுந்தருளி விளையாடும் இளவல்களான ஆனைமுகத்து அண்ணனும்,
ஆறுமுகத்துத் தம்பியும் அந்த மாம்பழத்தை வேண்டி நிற்கிறார்கள்.
சிவபெருமானோ, திருப்புன்முறுவல் செய்தவாறு, இவ்விரு குழந்தைகளையும் நோக்கி இருவரில் யார் இந்த அண்டசராசரத்தை முதலில் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்கே இந்த மாம்பழம் உரியதுஎன்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.

உடனே அழகின் வடிவமான குமரன் தனது மயிலில் ஏறி மிக வேகமாக புறப்படுகிறான்.
மந்தஸ்மிதாநநோபூத்வா
கஜாநந ஷடாநநௌ
த்ருஷ்ட்வா ப்ரோச சநௌ புத்ரௌ
சுசயோ ருபயோ ரவி
ப்ரதமம் யோபுவம் க்ருஸ்தம்
பரிப்ராம்ய நிவர்த்ததே
ச்ருத்யமாம்ரபலம் ச்வாது
ச ஏவ ப்ராப்து மர்ஹதி
தக்ஷணம் ப்ரஸ்தித: ஸ்கந்தோ
மயூரமதி ருக்யச:
இவ்வாறு மயிலேறி மாயனான முருகன் பறக்க, பிள்ளை யார்? ஆகிய கணேசனோ, மெதுவாக எழுந்து கூப்பிய கைகளோடு, அடி மேல அடி வைத்து, தமது தாய் தந்தையராகிய பார்வதி பரமேஸ்வரரை மும்முறை வலம் வந்து, தாய் தந்தையரின் திருவடிகளை வணங்கி இவ்வாறு சொல்லுவாராயினார்..
தாவர சங்கமப் பொருளான இவ்வண்ட சராசரம் எல்லாம் உம்மில் மறைந்து நிற்பதாக வேதம் சொல்கிறது. ஆகவே, மும்முறை தங்களை வலம் வந்ததால் நானே இவை எல்லாவற்றையும் சுற்றியவனாவேன். எனவே, எனக்கே உரியது இந்த மாங்கனி.. என்றார்.
பேரம்பலத்தே ஆடுகிற பித்தரும், இதற்கும் புன்முறுவல் காட்டி கணேசனிடம் மாங்கனியை அளித்தார்.
வாங்கிக் கொண்ட குறும்புக்காரப் பிள்ளையாரும் தம்பியின் வரவை எதிர்நோக்கி கைகளில் மாங்கனியை வைத்துக் கொண்டு தந்தை மடியில், அமர்ந்திருந்தார்.
சுநை ருக்தாய விக்நேச
சிஸ்யந்யஸ்த கராம்ஜலா
பிதரௌதி: பரப்ரம்ய
நநாமபத பங்கஜம்
சராசரமிதம் க்ருஸ்தம்
புவநம் அதிலீயதே
தஸ்மாந்மயா யுதா க்ருஸ்நம்
பரிப்ராந்த இதம் ஜகத்
தேயம் பலம் இதம் அர்க்யம்
ப்ரதமம் ஹி மயாக்ருதம்
க்ருத்வா மந்தஸ்மிதம் சம்பும்
கணேசாய பலம் ததௌ
இளைய பெருமானாகிய மரகதமயூரவாஹனன் நொடிப்பொழுதில் அண்டமெல்லாம் சுற்றி கைலையை அடைகிற போது, அவனது கண்;களிலே கணேசன் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, கைகளில் எந்தியிருக்கிற மாம்பழம் தெளிவாகத் தெரிகிறது. கோபம் வருகிறது.
வெகுண்ட முருகன் ஆடைகளை, ஆபரணங்களை எல்லாம் உதறி விட்டு ஆண்டி வேடம் பூண்டான். ஞான தபோவனர்களைப் போல, தனிமையான ஓரிடத்தை நாடினான். (தமிழகத்தின் பழனி மலையில் பழநி ஆண்டி(டவராக)யாக, நின்றான்)
பரிப்ராம்ய புவம் க்ருகஸ்நம்
யாவதா கத்ய பச்யதி
தாவத் கணேச ஹஸ்தஸ்தம்
பலம் த்ருஷ்ட்வா சுகோபச
பூஷணாதி பரித்யஜ்ய
பிக்ஷ_ வேஷதர: குஹ:
அத்யதிஷ்டத் (பழநி)கிரிபரம்
ஞான ரூபிர ஹோகத:


இதனைக் கண்ட கருணைக்கடலான தந்தை தாய் இருவரும் தனயனின் கோபத்தைத் தணிக்கப் புறப்பட்டனர். அண்ணனான விநாயகனும் தம்பியின் கோபத்தைத் தணிக்க கூடவே புறப்பட்டார். மூவருடன் முப்பத்து முக்கோடி தேவர்களும்புறப்பட்டனர். (பழநியை அடைந்தனர்)
சிவபிரானார் தன் மைந்தனை நோக்கி மங்களமானவனே! ஆறுவது சினம்.. நீ அறிவுப்பழம்.. அறிவுக்கனியை உண்பதற்காக தேவர்களும், ஞானிகளும், தவம் செய்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஞானப்பழத்தைக் கொடுப்பாய்.. என்று திருவாய் மலர்ந்தருளினார். அதனைக் கேட்ட முருகனும், சினம் நீங்கி ஆண்டியாய் நின்று அறிவுக் கனியை (ஞானப்பழத்தை) பகிர்ந்து கொள்கின்றார்.
குமாரஞ்ச சமாயாதும்
கிரிஜா குருண சஹ
கத்வா கிரி பரம் ஸ்கந்தம்
அஜூகாவஸ ஸாதரம்
பலம் த்வமேவ ஸாகஸ்ய
ஜ்ஞாநரூப பலம் கலு
இத்யேவம் சஸமாயக்தே
வ்யேமபாத்ரமுபாலகம்
க்ரோதம் விகாய வைஸ்கந்தம்
ப்ரசந்நோ வதநோ வபௌ
தத ஆபரப்யதேவாநாம்
மூநீநாம் யோகிநாம் ததா
ஸர்வேஷாம் பக்தர் ஸாஸானாம்
ஜ்ஞாந சாரம் ப்ரஸீததி
ஸ்துதி
நாரத தத்த ரஸால மஹாபல
லாப விநிஸ்சித ஸ்பர்த்த தயா
ஜடிதி சராசர ஸங்க்ரம நிர்க்கத
மயூர வாஹன விளம்ப தயா
தாத பிரகத்ஷண லப்தபலாக்ரஜ தர்ஸந
த்யாக ஸமஸ்த தண்ட தர
பூர்ண பலப்ரத பழநாபுரி நாயக
ஞான ஸ்கந்த நமோ நமஸ்தே


நாரத முனிவரால் (கைலைநாயகரிடம்) சமர்ப்பிக்கப்பெற்ற மாங்கனியை பெறுவதற்காக ஏற்பட்ட போட்டியின் பொருட்டு- சடுதியாக மயிலேறி சராசரம் எல்லாம் சுற்றி வந்து- பெற்றோரை மட்;டும் சுற்றி விட்டு தமது மூத்த சகோதரர்(கணேசக்கடவுள்) மாம்பழத்தைப் பெற்றிருப்பார்த்து- கோபித்து எல்லாவற்றையும் துறந்து விட்டு கௌபீனதாரியாக- துறவிகளுக்கே உரிய தண்டத்தை ஏந்திக் கொண்டு- பழநிமலையில் எழுந்தருளியவரே- அடியவர்கள் விரும்பிய பலன்களை முழுமையாக கொடுக்;கும் வள்ளல் பெருமானே- ஞானப்பழமாக முருகனாக காட்சி தருபவரே- போற்றி வணங்குகின்றோம்.
எழுதியவர்:
பிரம்மஸ்ரீ. மயூரகிரி சர்மா
நீர்வேலி
யாழ்ப்பாணம்.

Source:Sangatham.com

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends