கர்ம மார்க்கத்தால் இருவித பலன்கள், ஒன்று கர்மாவினால் நேரடியாக ஏற்படும் பூலோக-ஸ்வர்க்க லோக சந்தோஷ பலன், இன்னொன்று கர்மாவின் மூலமான எந்தப் பலனும் வேண்டாம் என்று ஈஸ்வரார்ப்பணம் பண்ணிவிட்டு, அவனுடைய ஆஜ்ஞை என்பதாக மட்டும் பண்ணிக் கொண்டுபோனால், நாளடைவில் உண்டாகும் சித்த சுத்தி என்கிற பலன். சித்த சுத்தி அத்தோடு முடிவதில்லை, அதுவே நிவ்ருத்தி மார்க்கம் என்னும் ஞானயோகத்தில் ப்ரவேசிப்பதற்கான யோக்யதையையும் உண்டாக்கிவிடுகிறது. இரண்டு விதமான பலன் என்று நான் சொன்னாலும், வாஸ்தவத்தில் கர்ம பலன் என்றால் அது நேரடியாக பூலோக-ஸ்வர்க்க லோகங்களில் தரும் தற்காலிக சந்தோஷங்கள்தான். இந்தப் பலன் வேண்டாமென்று நினைத்தாலும், கர்மா செய்யாதிருக்க முடியாதே என்பதாலும், விதிப்படி ஸ்வதர்மங்களைச் செய்வதால் நமக்கு ஒரு டிஸிப்ளின் உண்டாகிறது என்பதாலும்,சமூகத்திற்கும், ஒழுங்கான வாழ்க்கைக்கும் உதவ முடிகிறது என்பதால் கர்மா முக்கியம். கர்மாக்களின் நேரடியான பலனாக சித்த சுத்தி ஏற்படுவதில்லை. இஹாமுத்ர பலன் வேண்டாம் என்று நினைத்து பண்ணும் கர்மாக்களுக்குப் பலனாக ஈஸ்வரப் ப்ரசாதமாக வருவதே சித்த-சுத்தி. நேர்ப் பலன் வேண்டாமென்றிருந்தாலும், நம்முடைய ஆஜ்ஞை என்பதாலும், ஸமூகத்திற்கு கர்மாவின் பலன்கள் தேவையாக இருக்கிறது என்பதை உத்தேசித்து நம்முடைய ப்ரீதிக்காக இவன் இவ்வளவு நன்றாகக் கர்மாநுஷ்டானம் செய்கிறானே?, இந்த மனோபாவத்திற்க்காக இவனுடைய சித்தத்தின் அசுத்தங்களைப் போக்குவோம் என்று ஈஸ்வரனே அனுக்ரஹிப்பதுதான் சித்த-சுத்தி.

ஞான மார்க்கத்தில் போகவும் யோக்யதை இல்லை, கர்மாவினால் ஏற்படும் ஸந்தோஷங்களிலும் நிறைந்த நிறைவில்லை என்றிருக்கிறவர்களிடம் பகவான், "உன்னால் கார்யங்களை விடமுடியாததால், பண்ணிக்கொண்டே போ. ஆனால் பலனில் ஆசை வைக்காதே, பலத்தாயகம் பண்ணி, என் ப்ரீதிக்காகஎன்று கர்மங்களை அநுஷ்டி. அதனால் க்ரமத்தில் சித்த சுத்தி உண்டாகும். பின்னர் ஞான மார்க்கத்தில் பிரவேசிக்கலாம் என்கிறார். கர்ம மார்க்கம் என்பது இங்கே கர்ம யோகம் என்றே உயர்வு பெற்று விடுகிறது. யோகம் என்றால் சேர்ந்திருப்பது. பரம ஸத்யத்தில் ஒரு ஜீவனைச் சேர்ப்பதற்கு உதவும் வழிகளைஅத்யாத்ம சாஸ்திரங்களில் யோகம், யோகம் என்று சொல்லியிருக்கும். நேராக இவற்றில் ஒவ்வொன்றுமே முடிவான ஸத்ய லக்ஷ்யத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதில்லை. மெயின் ரோட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கிற சந்து மாதிரி இருந்தால் கூடப் போதும், அதுவும் யோகம் தான். லக்ஷ்யத்தில் நேரே சேர்ப்பது ஞான யோகம், அந்த மெயின் ரோடுக்குக் கொண்டுபோய் விடுவது கர்ம யோகம். மெயின் ரோட்டுக்குப் போக பல ஜென்மங்கள் பிடிக்கலாம். ஆனாலும் ஒருநாள் கொண்டு விட்டுவிடும்.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 5; பக்கம் 299-300

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends