எனக்குள் காதல்
தூவிய உன்
க-விதைகள்
தீர்ந்து போனால் என்ன?
எனக்குள் விழுந்த
காதல் விதைகள்
முளைத்துக்கொண்டே
தான் இருக்கும்!

நீ
முத்தமிட்ட
பாகம் மட்டும்
கர்வத்தில் இருக்க
மற்ற பாகங்கள்
வேலை நிறுத்தம் செய்கின்றன
பொறாமையில்...
நீ வந்து மீண்டும்
முத்த பேச்சு
வார்த்தை நடத்து!

உன்
ஆலயத்தில்
உன்னை போற்றும்
தீபங்கள்
எத்தனை இருந்தாலும்
உனக்காக
ஆரத்தி காட்டப்படும்
கற்பூரம்
நானாக இருக்க வேண்டும்!


நீ முத்தமிடாத
பாகங்கள் எல்லாம்
துக்கம் அனுஷ்டிக்கின்றன!
கறுப்பு நிறத்தில்
மச்சங்களாய்!


நான்
உன்னை எரிக்கும்
கனல் அல்ல...
நீ
அணைப்பதற்காகவே
தன்னை
எரித்துக்கொள்ளும்
கற்பூரம்!