ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.
ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நஸ்கரிக்கிறேன். ஸுமார் 2000 வருடங்களுக்கும் முன்பாக (சுமாராக கி.மு 509) கேரளத்தில் காலடி என்னும் ஊரில், சிவகுரு-ஆர்யாம்பா தம்பதிக்கு நந்தன வருஷம் வைகாச சுக்ல பஞ்சமியில், புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ சங்கரர். 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமாரி வரையில் அத்வைத சித்தாந்தத்தை பரப்பினார். அத்வைத தத்வத்தை தமிழகத்து அந்தணர்கள் ஒப்புக் கொள்ள மறுத்த சமயத்தில் திருவிடைமருதூர் மகா லிங்கமே அசரீரியாக 'ஸத்யம் அத்வைதம்' என்றதாக தெரிகிறது. இவரது ப்ரம்ம சூத்திர பாஷ்யத்தை வியாசரே நேரில் வந்து அனுக்ரஹித்ததாக சொல்லப்படுகிறது.
_____________________________________________________________
கி.பி 1017ம் ஆண்டு வைகாச சுக்ல பக்ஷ பஞ்சமியில் குருவாரம், திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கேசவ ஸோமயாஜிக்கும்-காந்திமதி
அம்மாளுக்கும் புத்திரராக அவதரித்தவர் ராமானுஜர். இவர் 120 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. பல முயற்சிகளுக்குப் பின்னர் தனக்கு கிடைத்த திருமந்திர உபதேசத்த மற்றவர்களுக்கு தெரிவித்தால் நரகம் என்றல்லாம் மிரட்டிய போதும் தான் நரகம் சென்றாலும் கேட்ட அனைவரும் நன்மை அடையட்டுமென்று திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது ஏறி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உபதேசித்தவர். இவரே பின்னாளில் மணவாள மாமுனிகளாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
_____________________________________________________________
முதலில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம்.
இருவரும் வைகாச சுக்ல பஞ்சமியில் பிறந்தவர்கள். அடுத்தடுத்த நக்ஷ்த்திரங்கள், ராமானுஜர் - திருவாதிரை, சங்கரர் - புனர்வசு.
இருவரும் ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் பண்ணினவர்கள். இருவரும் மூல-குருவாக வியாசரையே வைத்துக் கொண்டுள்ளனர், இன்றைய மடாதிபதிகள், சிம்மாசனாதிபதிகள் உள்பட.
ராமனுஜரும் முதலில் படித்தது அத்வைதமே. யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் பயின்றாராம். பிற்காலத்தில் அவரே பின்னர் ராமானுஜருக்கு சிஷ்யரானதாக சொல்வர். (இந்த யாதவப் பிரகாசரை பற்றி அத்வைத ஆச்சார்ய பரம்பரையில் எங்கும் ஏதும் குறிப்பு கிடையாது)
சங்கரர் வைதிக மதத்தை நிலை நாட்டினார் என்று சொல்லப்படுவது போல, இராமானுஜரும் தனது பாஷ்யங்களில் இவற்றைப் விஸ்தாரமாக சொல்லி வைத்து, மக்களுக்கு உபதேசிக்கும் பொழுது சற்று இளக்கித் தந்ததாக சொல்லத் தெரிகிறது.
ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆதிசேஷனின் அவதாரம் என்கிறார்கள். ஆதி சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதர் பதஞ்சலியின் அவதாரம். பதஞ்சலியோ ஆதி சேஷனின் அவதாரம். (நாராயணன் பைநாகப்பாயில் படுத்துக் கொண்டு நடராஜ ரூபத்தில் லயித்த சமயத்தில் ஆதிசேஷணுக்கு கனம் அதிகமானதாம். பெருமாளிடம் காரணம் கேட்க, அவரும் நடராஜ ரூபத்தைச் சொன்னதால், ஆசைப்பட்டு ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது புராணம்). ஆகக் கூடி பார்த்தால் ஒருவரே ஆதிசங்கரருக்கு குருவாகி, பின்னர் சுமார் 1000 வருடங்கள் கழித்து ராமானுஜராக அவதரித்தார் போல.
_____________________________________________________________
அங்க-இங்க, தேடிப் பிடித்து 5 ஒற்றுமை வந்திடுச்சு....இப்போ 5 வித்தியாசங்களை பார்க்கலாமா!
சங்கரர் அவதாரத்திற்கு பின் ஏறக்குறைய சுமார் 1000 வருடங்களுக்கு பின்னர் அவதரித்தவர் ராமானுஜர், இவருக்கும் பின் வந்தவர் மத்வர்.
சங்கரர் 72 மதங்களை இணைத்து ப்ராதான்யமாக 6 மதங்களை ஸ்தாபித்து, பஞ்சாயதன முறையும் ஏற்படுத்தினார். இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவத்தை மட்டுமே வைத்து வசிஷ்டாத்வைதத்தை நிறுவிச் சென்றார்.
சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார், ஆனால் ராமானுஜர் எந்த மடங்களையும் ஸ்தாபிக்கவில்லை. 72 ஸிம்மாசனாதிபதிகள் என்பது சங்கரர் ஸ்தாபித்தது போல ஸந்நியாஸிகளின் தலைமையில் மட ஸ்தாபனம் பண்ணியது அல்ல. இந்த ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்த பரம்பரைகளின் வழியே வருபவர்கள். க்ருஹஸ்த மார்க்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்கச் செய்த ஏற்பாடு. ஆனால் சங்கர மடத்தை அலங்கரிப்பவர்கள் ப்ரம்மச்சார்யத்திலிருந்து நேரடியாக ஸந்நியாசத்திற்கு வருபவர்கள்.
சங்கராச்சார்ய பரம்பரையில் ஸந்நியாஸிகள் 'தசநாமிகள்' என்னும் 10 விதமான வகைகளில் ஒன்றைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஏன் மாத்வாச்சார்யார் கூட இந்த 10 வகையில் ஒன்றான 'தீர்த்தர்'' என்ற பிரிவில் துரீயாச்சரமத்திற்கு வந்தார். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள 72 ஸிம்மாசனாதிபதிகளாகட்டும், அல்லது 12 ஆச்சார்யர்களாகட்டும் இந்த தசநாமிகளிலிருந்து துரீய நாமத்தை கொள்வதில்லை.
ஆதிசங்கரர் துரீயஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கு பூணூல், சிகை கிடையாது என்று வைத்துள்ளார். ஆனால் 72 ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்தத்திலிருந்து வந்ததால் அவர்களுக்கு இந்த இரண்டும் உண்டு. அத்வைத ஆச்சார்யர்களுக்கு ஏகதண்டம், ஸ்ரீ வைஷ்ணவத்தில் த்ரிதண்டம்.
இவ்வாறாக பலவிதமான வேறுபட்ட வழிகளிலும் முயன்று நம்மைக் கடைத்தேறச் செய்யும் இந்த இரு ஆச்சார்யார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
_____________________________________________________________
அதெப்படி? இவ்வளவு வித்தியாசங்களை வைத்திருக்கும் இந்த இரு ஆச்சார்யார்களை ஒருங்கே வணங்குவது?.
ஸர்வ-வேதாந்த ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம் கோவிந்தம்
பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்மயஹம்
ஸத்குரும் கோவிந்தம் அஹம் ப்ரணதோஸ்மி - ஸ்த்குருவான கோவிந்தனை நான் நமஸ்காரம் செய்கிறேன். அதாவது ஸ்ரீவைஷ்ணவத்தின் முதாலாவது ஆச்சார்யாரான கோவிந்தன்/மஹா-விஷ்ணுவை நமஸ்காரம் செய்கிறேன் என்றும் சொல்லலாம், அதே போல சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை வணங்குகிறேன் என்றும் சொல்லலாம்.

பிகு: சில செய்திகளுக்கு மூலம் தெய்வத்தின் குரல்!!!Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends