Announcement

Collapse
No announcement yet.

முத்தைத்தரு பத்தித் திருநகை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முத்தைத்தரு பத்தித் திருநகை

    மிகவும் புகழ்பெற்ற திருப்புகழ் பாடலான "முத்தைத்தரு பத்தித் திருநகை'' என்ற பாடலில் "பட்டப்பகல் வட்டத் திகிரியிலிரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப் புயல்'' என வரும் அடிகளில் ஒரு மகாபாரத நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார் அருணகிரி நாதர்.

    மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடந்த 18 நாள் போரில் பதிமூன்றாம் நாள் போர். துரோணர் அன்று போருக்கு பத்ம வியூகம் (தாமரை வடிவம்) வகுத்திருந்தார். அர்ச்சுனனின் புதல்வனான அபிமன்யு மகா வீரன். அவனுக்குப் பத்ம வியூகத்தைப் பிளந்து உள்ளே சென்று பகைவரை வீழ்த்தத் தெரியும். ஆனால், அந்த வியூகத்திலிருந்து வெற்றிகரமாக வெளியே வரும் பயிற்சியைப் பெற்றவனில்லை. இதனை உணர்ந்திருந்த ஜயத்ரதன் அபிமன்யுவை பத்ம வியூகத்தினுள் புகவிட்டு அவன் வீராவேசமாய்ப் போர் புரிந்து கொண்டிருக்கையில் போர் முறைகளுக்குப் புறம்பான வழிகளைப் பின்பற்றி அபிமன்யுவை அவன் பின்புறமிருந்து தாக்கிக் கொன்று விடுகிறான். போர் முனையின் மறுமுனையில் இருந்த அர்ச்சுனனுக்கு இந்தச் செய்தி போகிறது. தன் புத்ரன் நயவஞ்சகமாகக் கொல்லப்படுவதற்குக் காரணமே ஜயத்ரதன்தான் என்று தெரிந்துகொண்டு கடும் புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டு மறுநாள் போரில் சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் அந்த ஜயத்ரதனை வெட்டிச் சாய்ப்பேன் என்று போர்க்களத்தில் சபதம் செய்கிறான் அர்ச்சுனன்.

    ஜயத்ரதன் கௌரவப் படையில் சமரதச் சேனாதிபதி. முன்பு ஒருமுறை பாஞ்சாலியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிக்கொண்டு ஓட முயற்சித்தபோது பாண்டவர்களிடம் சிக்கிப் பலமாய் அடிபட்டு ஓடினவன். அந்த அவமானம் அவனை இப்படியெல்லாம் தர்ம விரோதமான முறையில் போர் புரிந்து பழி வாங்கத் துடித்தது.

    பதினான்காம் போரில் அர்ச்சுனன் கையில் ஜயத்ரதன் மாட்டிக்கொள்ளாத வகையில் துரோணர் மிகச் சாமர்த்தியமாக கௌரவ சேனையின் வியூகத்தை வகுத்தார் என்றும் அர்ச்சுனன் மிக விரைவாக அந்த வியூகத்தை உடைத்து ஸ்ருதாயுதன், பூரிசிரவன் முதலிய அநேகரை வென்று வீழ்த்துவதற்குள் நேரம் மிகக் கடந்துவிட்டது. அஸ்தமன வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரம் கண்ணபிரான் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். தன் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து இருளை உண்டாக்கி அஸ்தமனம் ஆகிவிட்டது போன்ற பிரமையை உண்டு பண்ணினார். உடனே ஜயத்ரதன் தன் தேரிலிருந்து எழுந்து தலையை நீட்டி சூரியன் அஸ்தமித்து விட்டானா என்று உறுதி செய்துகொள்ள அண்ணாந்து பார்த்தான். உடனே கண்ணபிரான், "அர்ச்சுனா! இதுதான் சரியான வேளை. ஜயத்ரதன் தலையை நீட்டி அண்ணாந்து பார்க்கிறான். விடு பாணத்தை..!'' என்கிறார். அர்ச்சுனன், தான் சிவபெருமானிடம் வரமாகப் பெற்ற வில்லை எடுத்து ஓர் அம்பை ஜயத்ரதன் பால் செலுத்தினான். அது அவன் தலையை அப்படியே கொய்தது.

    கண்ணபிரான், "ஜயத்ரதனது துண்டித்த தலை பூமியில் விழாதவாறு தொடர்ந்து அம்புகளைச் செலுத்தி அதைப் பந்தாடுவதுபோல் கொண்டு செல். அது பூமியில் விழுந்தால் அந்தத் தலையை வெட்டியவன் தலை சுக்கு நூறாக உடைந்து போகும்படி அவன் தந்தை விருத்தவித்ரன் வரம் வாங்கியிருக்கிறான். அதனால் அது தரையில் விழுந்தால் உன் தலை சுக்கு நூறாகிவிடும்.

    அவன் தந்தை இப்போது சூரியன் அஸ்தமித்து விட்டதாக நினைத்து சந்தியாவந்தனத்துக்கு நீரைக் கையால் அள்ளி விட்டுக்கொண்டு இருக்கிறான். அவன் கையில் ஜயத்ரதன் தலை விழுமாறு சாமர்த்தியமாய் தொடர்ந்து அம்புகளைச் செலுத்து!'' என்கிறான்! அர்ச்சுனனும் அப்படியே செய்ய ஜயத்ரதன் தலை அவன் தந்தை கைகளில் விழுகிறது. அவன் தந்தையும் இது தன் மகனின் தலை என்று தெரியாமல் கீழே எறிய விருத்தவித்ரனின் தலை சுக்கு நூறாய் பொடியாகியது! அர்ச்சுனனும் தனது சபதத்தை நிறைவேற்ற பகலை இரவாகச்செய்து கண்ணபிரான் அர்ச்சுனனைக் காப்பாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியையே அருணகிரி நாதர் அந்த அடிகளில் குறிப்பிடுகிறார்!

    SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM


    Read more: http://www.periva.proboards.com/thread/7520?page=1&scrollTo=12930#ixzz355nvOCvy
Working...
X