Announcement

Collapse
No announcement yet.

‘கத்தி இருப்பது அவன் கையில்! பிறகெதற்கு கī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ‘கத்தி இருப்பது அவன் கையில்! பிறகெதற்கு கī

    தென் தமிழ்நாட்டில் ராமதீர்த்தர் என்ற ஒரு குரு இருந்தார். வேத, சாஸ்திரங்களை முறைப்படி கற்று தேர்ந்த அவர், தான் கற்ற வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் தன்னோடு மட்டுமே போய்விடக்கூடாது என்று கருதி, ஏழை மாணவர்களை தனது ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கெல்லாம் இலவசமாக வேதம் சொல்லிக்கொடுத்து வந்தார்.
    தன்னலம் இல்லாது வேதம் சொல்லிக் கொடுத்து வந்ததாலோ என்னவோ அவருக்கு சித்திகள் கைகூடி வந்தன. இருப்பினும் வீண் பரபரப்புக்காகவோ அல்லது பெருமைக்காகவோ அதை அவர் பயன்படுத்துவதில்லை.

    தனது சிஷ்யர்களில் நந்து என்கிற முதன்மையான ஒருவனை அழைத்துக்கொண்டு ஒரு நாள் அடுத்த ஊர் சென்றுகொண்டிருந்தார் ராமதீர்த்தர். காடு வழியே நடந்து சென்றபோது சீடனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் களைப்பு ஏற்பட்டது. அந்த சீடனுக்கு அன்று நேரம் சரியில்லை. அன்று அவன் பாம்பு கடித்து இறப்பான் என்கிற விதி இருந்தது. இது ராம தீர்த்தருக்கு தெரியும். (இந்தியாவில் இன்றும் ஆண்டுக்கு, 23 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை பாம்பு கடிக்கு ஆளாவதாகவும், இதில், 11 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது!!)
    களைப்பு மிகுதியால் சீடன் தடுமாறுவதை பார்த்த குரு. “வேண்டுமானால் இங்கு ஒரு சில மணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு பிறகு பயணத்தை தொடர்வோம்” என்றார்.

    ஒருவர் உறங்கும்போது, மற்றவர் விழித்திருந்து காவல் காப்பது என்று முடிவானது. சீடன் ஏற்கனவே காய்ச்சல் வந்து மிகவும் களைப்படைந்து இருந்ததால் அவன் முதலில் உறங்கினான். ராமதீர்த்தர் காவல் இருந்தார்.
    சிறிது நேரத்தில் அந்த பக்கம் ஒரு மிகப் பெரிய நல்ல பாம்பு ஊர்ந்து வருவதை பார்க்கிறார் ராமதீர்த்தர். அவர் பார்த்துகொண்டிருக்கும்போதே நந்துவை அது கொத்தப்போக, ராமதீர்த்தர் உடனே “ஏ… நாகமே நில்!” என்றார்.
    வேதம் படித்தவரின் ஆணை என்பதால் நாகம் அப்படியே நின்றது.
    “நீ அவனை இன்று கடிக்க முடியாது. உடனே இங்கிருந்து போ!” என்றார்.
    “ராமதீர்த்தரே, விதியின் கட்டளைப்படி நான் செயல்படுகிறேன். இன்று இவனை நான் கொத்தவேண்டும், இவன் இரத்தம் பூமியில் சிந்தவேண்டும் என்பது எனக்கிடப்பட்டுள்ள கட்டளை. காலதேவனின் செயலில் அனைத்தும் அறிந்த நீங்களே குறுக்கிடலாமா?”
    “நாகமே, உனக்கு தேவை இவன் ரத்தம். அவ்வளவு தானே. அதை நானே தருகிறேன். எந்த பாகத்தில் இருந்து உனக்கு ரத்தம் வேண்டும்?”
    “வலது கால்!” என்றது நாகம்.
    உடனே ராமதீர்த்தர், கையில் ஒரு கத்தியை எடுத்து, சீடனின் கால்களில் ஒரு வெட்டு வெட்டினார். இரத்தம் பீறிட்டு கிளம்பி, நாகத்தின் மீது தெறித்தது.
    திடீர் வலியை உணர்ந்த சீடன் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தான். எதிரே கத்தியுடன் தனது குரு அமர்ந்திருப்பதை பார்க்கிறான். எதுவும் நடக்காதது போல மீண்டும் கண்களை மூடி உறங்கத் துவங்கினான்.
    தனக்கு தேவையான இரத்தத்தை பெற்றுகொண்டதும் நாகம் அங்கிருந்து வெளியேறியது.
    நந்து கண் விழித்ததும் குரு கேட்டார்… “ஏன் கண்களைத் திறந்தாய்? பின்னர் ஏன் மூடிக்கொண்டாய்?”
    “என் காலை யாரோ வெட்டியது போல இருந்தது. யாரோ என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கருதி கண்ணைத் திறந்தேன். ஆனால் கத்தியைப் பிடித்திருப்பது நீங்கள் தான் என்பதை பார்த்தேன். எனக்கு நீங்கள் எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன்!” என்றான்.
    ஒரு குரு எப்படி இருக்கவேண்டும், அவர் சீடன் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது அல்லவா?
    குரு என்பதற்குப் பதிலாக அந்த இடத்தில் கடவுளை வைத்துப் பாருங்கள். சில உண்மைகள் உங்களுக்குப் புரியவரும். அந்த சீடன் போல கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்தால் போதும். நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் ஏற்படலாம். அந்தப் பாம்பு போல் உயிருக்குக் கூட ஆபத்து நேரிடலாம். ஆனால் நாம், ‘கடவுள் நம் அருகில் இருக்கிறார்’ என்பதை உணர வேண்டும். ‘அவர் பார்த்துக் கொள்வார்’ என்று முழுமையாக நம்பவேண்டும். நமக்கு ஏற்படும் சிறு சிறு சோகங்களைக்கூட, கடவுள்தான் அந்த குருவைப் போல, பாம்புக் கடியிலிருந்து தப்பிக்க கொஞ்சம் ரத்தம் மட்டும் தந்ததைப் போல, பெரிய பிரச்னையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விதியையே மாற்றி, அதன் அடையாளமாக சின்னதாய் வலி தந்திருக்கிறார் என்று உணரவேண்டும்.
    - See more at: http://rightmantra.com/?p=11986#sthash.sxi32bwP.dpuf
Working...
X