Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் வாக்கு அல்லவா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் வாக்கு அல்லவா?

    இதை படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் பீறிட்டது . என்னுடைய மஹா மஹா குருவுக்கு சதகோடி நமஸ்காரங்கள்

    கண்பார்வை இல்லாத சீனிவாச ஐயர் மற்றும் அவரது மனைவி கிரிஜா, மகன்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து தன் கிளினிக்கை நோக்கி நடந்தார் டாக்டர் பாலசுப்ரமணியன். பெரியவாளின் அருட் கடாட்சப் பார்வை டாக்டர் மீது பட்ட பின் அவரது நடவடிக்கையிலேயே ஒரு மாற்றம் தெரிந்தது போல் பலர் உணர்ந்தார்கள். இருக்காதா பின்னே…. சென்னையின் பிரபல கண் மருத்துவமனைகள் ‘இவருக்குப் பார்வை வர வாய்ப்பே இல்லை’ என்று ஒதுக்கி விட்ட சீனிவாச ஐயருக்கு அல்லவா ஆபரேஷன் செய்யப் போகிறார். அதுவும் பெரியவாளின் அருளோடு! இது நிகழ்ந்தது 1969-ஆம் வருடம் நவம்பர் மாதம்.


    சாலையில் இறங்கி டாக்டர் நடக்கும்போது அவரிடம் ஒரு புது வேகமும் தெம்பும் காணப்பட்டது. நோயாளிகள் என்றால், டாக்டரைத் தேடி மருத்துவமனைக்கு வருவார்கள்! ஆனால், இந்த டாக்டர் என்னடாவென்றால், நோயாளியைக் கைப்பிடித்துத் தன் மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு போகிறார்.

    மஹா பெரியவா உத்தரவாயிற்றே! யாரால் மீற முடியும்? அதுவும் இந்த டாக்டர் பாலசுப்ரமணியன் உள்ளூர்க்காரர் வேறு. காஞ்சி மஹானின் அருட் கடாட்சத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவர். அப்படி இருக்கும்போது அவரது கட்டளையை எப்படி உதாசீனப்படுத்த முடியும்? தெய்வத்தின் வாக்கு அல்லவா?

    இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி இருந்த தன் கிளினிக்கை அடைந்தார் டாக்டர். வெகு சாதாரணமாகத் தோற்றம் அளித்தது அந்த கிளினிக். கீழே தரைத் தளத்தில் கன்ஸல்டேஷன் மற்றும் ஒரு சில படுக்கைகள். மாடியில் சுமாரான வசதியுடன் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு ஆபரேஷன் தியேட்டர்.

    தனது கிளினிக்குக்குள் நுழைந்த டாக்டர் பாலசுப்ரமணியன் கன்ஸல்டேஷன் அறைக்குள் சீனிவாச ஐயரை அமர வைத்தார். அவருடைய மனைவி மற்றும் மகன்களை வெளியே காத்திருக்கச் சொன்னார். ஒரு சில பரிசோதனைகளைச் செய்து முடித்துவிட்டுத் தன் பணியாளர் ஒருவரை அழைத்தார். தரைத் தளத்தில் உள்ள ஓர் அறைக்குள் சீனிவாச ஐயரை அனுமதிக்குமாறு சொன்னார். கிரிஜாவும் மகன்களுடன் உதவிக்கு வந்து, சீனிவாச ஐயரை அழைத்துச் சென்றனர்
    .
    “நாளையே சீனிவாச ஐயரின் வலக் கண்ணில் ஆபரேஷன் செய்து விடலாம்” என்று சொல்லிவிட்டுப் போனார் டாக்டர்.

    வீட்டை அப்படியே போட்டு விட்டுக் குடும்பப் பெண்களால் இன்னொரு இடத்தில் இருக்க முடியுமா? எனவே, மனைவி கிரிஜாவும் அவருக்குத் துணையாக மகன் ஜெயராஜும் சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்தனர். கோபியை மட்டும் துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு, இரவு உணவுக்கு என்ன வேண்டுமோ, அதை வாங்கிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டனர்.
    டாக்டர் பாலசுப்ரமணியன் சொல்லி இருந்தபடி வலக் கண்ணுக்கு முதலில் ஆபரேஷன் நடந்தது. சுமார் மூன்று மணி நேரம் இது நடந்தது. துணைக்கு இருந்த கோபி ”நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து அப்பாவுக்குக் கண்பார்வை திரும்ப வேண்டும்” என்று மஹாபெரியவாளை மானசீகமாக வேண்டிக் கொண்டார்.

    ஆபரேஷன் முடிந்ததும் வெளியே வந்த டாக்டர், இருவரையும் பார்த்து, “கவலை வேண்டாம். பெரியவா ஆசியுடன் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. மூன்று நாட்கள் அவரோட கண் கட்டைப் பிரிக்கக் கூடாது. அதற்கப்புறம் பிரிச்சா, அவர் இந்த உலகத்தை ரசிக்க முடியும். இன்னும் மூன்று நாட்களும் அவரை ஜாக்கிரதையாகப் பாத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று சொல்லி விட்டுப் போனார்.

    தகவல் கேள்விப்பட்ட சீனிவாச ஐயரின் உறவினர்கள் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். ‘சென்னையிலே முடியாத ஒரு டிரீட்மெண்ட் காஞ்சிபுரத்தில் எப்படி சாத்தியமாகும்?” என்று சிகிச்சையின் மேல் நம்பிக்கை இல்லாமல் ஒரு சிலர் சீனிவாச ஐயரையும் பரிதாபமாகப் பார்த்து விட்டுப் போனார்கள். ஆனாலும், சீனிவாச ஐயர் குடும்பம் மஹா பெரியவாளின் அருட் கருணை மேல் அபரிமிதமான நம்பிக்கைக் கொண்டிருந்தது.

    சீனிவாச ஐயரின் கண் கட்டைப் பிரிக்க வேண்டிய மூன்றாவது நாள் வந்தது. பகல் வேளையில் டாக்டர் பாலசுப்ரமணியனே வந்து கட்டைப் பிரிப்பதாகச் சொல்லியிருந்தார். டாக்டர் கட்டைப் பிரிக்கப் போகிற நேரம் பார்த்துத் திடீரென வாத்திய சத்தமும், ‘ஜய ஜய சங்கர’ கோஷமும் தெருவில் கேட்டது. ‘என்னது… இந்த வேளையில் பெரியவா இங்கே வந்து கொண்டிருக்கிறாரா? அவர் வருகிற வேளையில்தானே இப்படி இருக்கும்?” என்று ஆர்வமுடன் கோபி வெளியே வந்து பார்த்தார்.

    ஆம்! உலகமே கொண்டாடும் அந்த தெய்வம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. கலவைக்குச் சென்றிருந்த பெரியவா, அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அப்படியே வேக வேகமாகத் தன் தந்தையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்து அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார் கோபி.

    சீனிவாச ஐயருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ‘கோபி… டாக்டர் வந்துட்டாரா?’ என்று கேட்டார் படபடப்பாக. ‘வந்துட்டார்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கட்டைப் பிரிச்சுடுவார்’ என்று சொன்னார் கோபி. ”டேய் கோபி… ஒண்ணு பண்ணுடா… எப்படியும் கட்டை இன்னிக்குத்தான் பிரிக்கப் போறா.. என் கட்டைப் பிரிச்ச உடனே நான் முதல்ல என் தெய்வத்தைப் பாக்கணும்னு பிரியப்படறேன். டாக்டர்கிட்ட இதைச் சொல்லி அனுமதி வாங்கறியா? போ, உடனே” என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உத்தரவு போட்டார்.

    வாஸ்தவம்தானே! இன்னும் சிறிது நேரத்தில் சீனிவாச ஐயருக்கு மஹா பெரியவாளின் பரிபூரண அருளால் ஒரு கண் பார்வை வரப் போகிறது. எத்தனை வருடங்களாகப் பார்வை இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்! இந்த நிலையில் திடீரென்று பல வருடங்கள் கழித்து ஒரு கண்ணுக்குப் புத்துயிர் கிடைக்கிறதென்றால், அதுவும் இந்த மஹானின் ஆசியுடன் கிடைக்கிறதென்றால் அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்தக் கட்டைப் பிரித்ததும், முதன்முதலாக மஹா பெரியவாளையே தரிசிப்பது என்பது எத்தனை சுகம்! எனவேதான், மனதளவில் இதை நினைத்ததுமே சீனிவாச ஐயர் குதூகலமானார்.

    மகன் கோபி, தந்தையின் ஆசையைக் கேட்டு நெகிழ்ந்து போனார். ‘சரிப்பா… இதோ, டாக்டர்கிட்டயே கேட்டுட்டு வர்றேன்’ என்று புறப்பட்டு, டாக்டர் பாலசுப்ரமணியனின் அறைக்குள் நுழையப் போனதுதான் தாமதம்!

    பெரியவா யாத்திரை கிளினிக்கின் அருகே நெருங்கி விட்டதை, வாத்திய கோஷங்கள் உணர்த்தின. வேத கோஷம் கணீரென்று கேட்டது. ‘சங்கர’ கோஷம் தெருவையே அதிர வைத்தது. தன் வேகமான நடையால் விறுவிறுவென்று நடந்த பெரியவா, அந்த கிளினிக்கைக் கடக்கப் போகும் முன் ஒரு கணம் பொசுக்கென்று நின்றார். கிளினிக்கைத் திரும்பிப் பார்த்தார்.

    ஒரு சிஷ்யனை அழைத்தார். ‘ஏண்டா, திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயருக்கு இங்கே கண் ஆபரேஷன் நடந்தது. எப்படி இருக்கான் அவன்?” என்று கேட்டுக்கொண்டிருந்த போதே, கிளினிக்கில் இருந்து டாக்டர் பாலசுப்ரமணியன் மஹா பெரியவாளை நோக்கி வேகமாக நடந்து வந்தார். அவரை நெருங்கியதும், சாலை என்றும் பாராமல், அந்த ஜகத்குருவுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார்.

    இதற்குள் கோபியும், கிளினிக் ஊழியர் ஒருவருமாகச் சேர்ந்து சீனிவாச ஐயரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தனர். பெரியவாளின் அருகே வந்ததும் அவர்கள் அப்படியே நின்றனர். ”என்ன, திருவள்ளூர் ராமசந்திர ஐயர் ஆத்து மாப்பிள்ளை… எப்படி இருக்கேள்?” என்று மஹா பெரியவா கணீரென்று திருவாய் மலர்ந்து கேட்டதும் தான் தாமதம்… தன் இரு கைகளையும் உயரே குவித்து, அந்த மஹானை ஆத்மார்த்தமாக வணங்கினார் சீனிவாச ஐயர்.

    ‘என்ன டாக்டர்வாள்… எப்படி இருக்கார்? பார்வை வந்துடுத்தோ?’ என்று பெரியவா அவரைப் பார்த்துக் கேட்க, ‘அதான் பெரியவா… உங்களுக்கு முன்னாடிதான் கண் கட்டை அவிழ்க்கணும்னு பிடிவாதமா இருக்கார். அவரோட கண்கட்டை அவிழ்த்த உடனே உங்களைத்தான் முதல்ல பார்க்கணுமாம்’ என்று டாக்டர் சொல்ல… சீனிவாச ஐயர் அதைத் தலையாட்டி ஆமோதித்தார். பெரியவாளும் புன்னகையுடன் தலை அசைக்க… அவரது கட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் டாக்டர்.

    தன் கண் கட்டில் டாக்டர் கை வைத்ததும், சீனிவாச ஐயருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வேத கோஷம் அவரது செவிகளை நிறைத்த வண்ணம் இருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அந்தத் தெய்வத்தைத் தன் ஒரு கண்ணால் தரிசிக்கப் போகிறார். சீனிவாச ஐயரின் இந்த பக்தியை நினைத்து வியந்த அந்த பக்தர்கள் கூட்டமும் அவர் கண்கட்டு பிரிக்கப்படுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது. வலக் கண்ணில் கட்டப்பட்டிருந்த கட்டு முழுதும் பிரிக்கப்பட்ட பிறகு சீனிவாச ஐயரைப் பார்த்து டாக்டர், “கண்ணை ரொம்பவும் ஸ்ட்ரெயின் பண்ணாம நேரா பாருங்க..

    எந்த தரிசனம் வேணும்னு தவிச்சீங்களோ, அந்த தரிசனம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கு” என்று சன்னமாகச் சொன்னார்.

    கண்ணுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், மிகவும் இயல்பாக வலக் கண்ணால் சீனிவாச ஐயர் நேர் பார்வை பார்க்கவும் அங்கே புன்னகையோடு அந்தப் பரப்ரம்மம் நின்று கொண்டிருந்தது. சீனிவாச ஐயரின் கட்டு பிரிக்கப்பட்டவுடன் அவருக்கு முதல் தரிசனம் தர வேண்டும் என்பதற்காகவோ என்னவோ… கலவையில் இருந்து இன்று புறப்பட்டு வந்திருக்கிறது போலும்!

    தன்னைத் தேடி வந்து இத்தகைய தரிசனம் தரும் மஹா பெரியவாளைக் கண்ணாரக் கண்ட மாத்திரத்தில் நெக்குருகிப் போனார் சீனிவாச ஐயர். ‘குருதேவா.. குருதேவா..’ என்று குரல் தழுதழுத்தார். இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிக் கதறுகிறார். கைகள் நடுங்குகின்றன. புன்னகைக்கிறார் பெரியவா. பிறகு, டாக்டர் பாலசுப்ரமணியனைப் பார்த்து, “ அடுத்த கண்ணுக்கு உடனே ஆபரேஷனை ஆரம்பிச்சுடு” என்று சொல்லி விட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தார் பெரியவா. கோஷத்துடன் அந்த கிளினிக்கையும் தெருவையும் கடந்து ஸ்ரீமடத்தை நோக்கிப் போனது பக்தர்கள் கூட்டம்.


    அதன்படி அடுத்து வந்த ஒரு சில வாரங்களில் சீனிவாச ஐயரது இடக் கண்ணுக்கும் ஆபரேஷன் செய்யப்பட்டது. சுமார் ஆறு மாதங்கள் சீனிவாச ஐயர் காஞ்சியிலேயே இருந்து இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டார். இவருக்கு உதவியாக இவரது மகன்கள் தவிர சீனிவாச ஐயங்கார் என்கிற பால்ய காலத்து நண்பரும் உடன் இருந்து சீனிவாச ஐயரைக் கவனித்துக் கொண்டார்.

    இங்கு டாக்டர் பாலசுப்ரமணியன் பற்றி, சீனிவாச ஐயரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் என்ன நினைத்தார்கள் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
    துவக்கத்தில், ‘இந்த டாக்டரால் ஆபரேஷன் செய்ய முடியுமா?’ என்று சந்தேகப்பட்டனர். ஆனால், மஹா பெரியவாளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் அந்த டாக்டர் செய்தது மகா சாதனை. சீனிவாச ஐயரது இரு கண்களிலும் ஆபரேஷன் ஆன பின், தங்கள் கண்ணீரால் அந்த டாக்டருக்கு நன்றி சொன்னார்கள். இந்த ஆபரேஷனுக்கும் சிகிச்சைக்கும் ஒரு நயா பைசாகூட சீனிவாச ஐயரது குடும்பத்தினரிடம் இருந்து டாக்டர் வாங்கவில்லை என்பதையும் இங்கே பெருமிதத்துடன் சொல்ல வேண்டும். மஹா ஸ்வாமிகள் அனுப்பி வைத்த பேஷண்ட் ஆயிற்றே!

    காஞ்சியில் இவர்கள் தங்கி இருந்த நாட்களில் தினமும் ஸ்ரீமடத்துச் சாப்பாடுதான். சீனிவாச ஐயரையும் சீனிவாச ஐயங்காரையும் சேர்த்துப் பார்க்கும்போது, “ஹரியும் சிவனும் சேர்ந்து வந்துட்டாப்ல இருக்கே” என்று நகைச்சுவையாகப் பேசுவாராம் பெரியவா.

    இரண்டாவது கண் ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்தது. ஒரு நாள் பெரியவா ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருக்கும் பழைய வீடு ஒன்றில் தங்கி இருந்தார். அப்போது அங்கே மின்சார வசதி எல்லாம் கிடையாது. மாலை வேளை கடந்ததும் ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் பிரகாசமாக இருக்கும். அன்றைய தினம் பெரியவா தரிசனத்துக்காக சீனிவாச ஐயர் வந்திருந்தார். அவரை அருகே அழைத்து, ஒரு சின்ன புத்தகத்தைக் கையில் கொடுத்தார் பெரியவா. ‘எதுக்கு விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தை என்கிட்டே கொடுத்திருக்கேள் பெரியவா?’ என்று அந்தப் புத்தகத்தின் முகப்பைப் பார்த்துவிட்டு பவ்யமாகக் கேட்டார் சீனிவாச ஐயர்.


    ‘இந்த சந்நிதில இதைப் படியேன். நான் கேக்கறேன்’ என்றார் பெரியவா. சீனிவாச ஐயருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்றதே பாக்கியம். அதுவும் பெரியவா கேட்டு நான் சொல்லணும்னா அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்’ என்று புளகாங்கிதம் அடைந்தவர், அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்துப் படித்தார். ஏற்ற இறக்கத்துடன் அழகாக சீனிவாச ஐயர் சொல்வதை – பெரியவா உட்பட ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமே கேட்டு பரவசம் அடைந்தது.

    சீனிவாச ஐயரின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் வெகு சிரத்தையாக முடிந்ததும், தன்னை நமஸ்கரித்த அவருக்குப் பிரசாதம் தந்து ஆசீர்வதித்தார். பிறகு, ஸ்ரீமடத்தின் பிரதான சிப்பந்தி ஒருவரைக் கூப்பிட்டு, ‘இப்ப எதுக்கு அவனை விஷ்ணு சஹஸ்ரநாமம் இங்கே படிக்கச் சொன்னேன்னு ஒனக்குத் தெரியுமோ?’ என்று கேட்டார் பெரியவா. அந்த சிப்பந்தி தன் விரல்களால் வாயைப் பொத்திக் கொண்டு, ‘பெரியவா விஷ்யம்லாம் எனக்கு அவ்வளவா புரியாது’ என்றார் மெதுவாக.

    ”சீனிவாச ஐயரோட ரெண்டு கண்ணும் பூரணமா குணமாயிட்டதானு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான் பொடிசா எழுத்து இருக்கிற விஷ்ணு சஹஸ்ரநாம பொஸ்தகத்தை அவன் கையில கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டேன். ஜமாய்ச்சுட்டான்” என்று சொல்லி, இடி இடியெனச் சிரித்தாராம் மஹா பெரியவா.

    சீனிவாச ஐயருக்கு ஆபரேஷன் நடந்தது 1969 – ஆம் வருடம். அதன் பின் பூரண நலத்துடன் இருந்து, கடந்த 2007-இல் காலமானார்.
    திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பமே பெரியவாளுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறது. எப்படி அது போன்ற ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பகவானின் சங்கல்பம்.



    Source: Mathangi
Working...
X