அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

நமஸ்காரம்

தற்போது பல்துறை நிபுணர்கள், கவலை தெரிவிக்கின்ற அம்சமாக இருப்பது நல்ல படிப்பறிவும், நுண்ணறிவும் உடைய மாணவ, மாணவிகள் ஆரம்பகட்டத்திலேயே நிறைய சம்பளம் கொடுக்கக்கூடிய IT துறையிலேயே பணியாற்ற மிகப்பெரும் எண்ணிக்கையில் செல்வதால் இந்த தகுதியுள்ள மாணவ மாணவிகளின் பங்களிப்பு IAS, IPS போன்ற துறைகளில் மிகவும் குறைந்து கொண்டே வருவது பற்றித் தான். IAS, IPS, IFS, IRS போன்று 54 துறைகள் உள்ளன. அதே போன்று அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சியில் (Basic Science Research) ஈடுபடும் தகுதியுள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது, இதற்கு கணிதமும் விலக்கல்ல. 26.12.2011 அன்று சென்னையில் கணித மேதை ஸ்ரீநிவாச ராமாநுஜனின் 125-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் நாம் நம்முடைய இளைய தலைமுறையினரிடம் கலந்துரையாட வேண்டும். நல்ல கருத்துக்ளை எடுத்துச் சொல்லிட வேண்டும். நமது இளைய தலைமுறையினர் IT துறைக்கு மட்டும் செல்லுகின்ற கண்மூடித்தனமான அணுகுமுறையை கைவிட வேண்டும். அதே போன்று வெளிநாடுகளுக்கு செல்லுகின்ற, செல்ல விரும்புகின்ற நமது பெண்களின், பிள்ளைகளின் மோகமும் குறைக்கப்பட வேண்டும்.

பெற்றோர்களின் அணுகுமுறைகளிலும் ஓர் மாபெரும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் சில யதார்த்த சமூக, சமுதாயக் கடமைகளை மறந்து விடக்கூடாது. பிராமண சமூகத்தினரை பாதிக்கின்ற இன்னொரு பெரிய விஷயம் நமது பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கல்யாணம் செய்து வைக்கின்ற விஷயமாகும். திருமண விஷயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எண்ணிக்கையில் இருக்கின்ற ஏற்றம் இறக்கம் நமது பிள்ளைகளின் திருமணத்திற்கு பெரும் தடையாக உருவாகி வருகின்றது. நமது பாரம்பரியத்தின்படி கல்யாணம் என்பது ஆண்-பெண் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டுமின்றி இரு குடும்பங்களும் இணைவதும் அதில் முக்கிய பங்கு பெற்றிட வேண்டும். இன்றைய தினம் தமிழகத்தில் 32 வயதுக்கு மேல் 45 வயதிற்குள் இருக்கக்கூடிய மிக அதிக எண்ணிக்கையிலான பிராமண இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் தக்க வாழ்க்கைத் துணை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தாம்ப்ராஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகின்ற தகவல் அடிப்படையில் நோக்குவோமேயானால் திருமணத்திற்கு பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் பல பெற்றோர்கள் பொறுப்பற்று திருமண விஷயங்களை கையாளுவதாகும். திருமணம் புரிய உள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்களை அணுகினால் சிலர் மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும் தெரியவந்துள்ளது. மிகவும் சில பெண்களின் பெற்றோர்கள் பெண்களின் மாதாந்திர வருமானத்தை குடும்பத்திற்கு பயன்படுத்தும் நோக்கத்தோடு பெண்களின் திருமணத்தை தள்ளிப்போடுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. Marriage as a system is facing a major crisis.

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய மாணவ மாணவிகளுக்கும், இளைஞர் இளைஞிகளுக்கும் ஓர் தவறான மனப்பான்மையினை நமது சினிமா கதைகளும், தொலைக்காட்சி தொடர்கதைகளும் மற்றும் ஏனைய ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன. ஒவ்வொரு இளைஞனும், ஒவ்வொரு இளைஞியும் அவசியம் Normal லான இளைஞர் / இளைஞி இல்லை என்கின்ற மனப்பான்மை செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இது நமது பாரம்பர்யத்தை வேரறுக்கும் தன்மை கொண்ட ஒன்றாகும். தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு திருமணமாவது பிரச்சனைக்குரிய திருமணமாக, புயலடித்து தாக்குகின்ற தன்மையினை உருவாக்கி நிறைய குடும்பங்களின் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கும், கௌரவக் குறைவிற்கும், அவமானத்திற்கும் ஆட்படுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் நம் சமூகத்தினரின் இந்த முக்கியமான வாழ்வு பிரச்சனையில் சரியான அணுகுமுறையினை கையாண்டு சமூகத்திற்கு ஆறுதலையும், தேறுதலையும், ஆதரவினையும் நல்கி, பக்கபலமாகவும், தக்க துணையாகவும் பல சேவைகளை செய்து வருகின்றது. இரு குடும்பங்ள் இணையும் நல்ல நிகழ்வாக, சுபமாக, சோபனமாக, மங்களகரமாக, லக்ஷ்மீகரமாக "திருமணங்கள்" அமைந்திட பெற்றோர்கள் தாம்ப்ராஸ் இயக்கத்தை எந்த நேரத்திலும் அணுகலாம். தாம்ப்ராஸின் சேவைகளை நமது சமூகத்தினர் இன்னமும் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் எனது சங்கராந்தி / பொங்கல் நல் வாழ்த்துகள்

உங்கள் அன்பு சகோதரன்,

N. நாராயணன், மாநிலத் தலைவர்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் (THAMBRAAS)
Email : ungalnarayanan@gmail.com