Announcement

Collapse
No announcement yet.

அர்த்தமுள்ள வாழ்க்கை & உண்மையான பக்தி!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அர்த்தமுள்ள வாழ்க்கை & உண்மையான பக்தி!

    புராதன பெருமை மிக்க அந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மிகப் பழமையான கோவில் என்பதால் எங்கெங்கிருந்தோ பக்தர்கள் அன்னாபிஷேகத்தை காண அவ்வூருக்கு வந்து குவிந்தனர். உள்ளூர் மக்களும் ஒருவர் கூட வீட்டில் முடங்கியிராது கோவிலில் குழுமிவிட்டனர். இறைவனை தரிசிப்பதில் அனைவருக்கும் அவ்வளவு ஆர்வம்.
    எங்கெங்கு பார்த்தாலும்
    “ஓம் நமச் சிவாய”
    “தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”
    “திருசிற்றம்பலம்”
    “சிவ சிவ”
    என்கிற கோஷங்கள் தான்.
    இந்த அன்னாபிஷேகத்தை காண்பதற்கு ஒரு துறவி தனது சீடனுடன் வந்திருந்தார்.

    ஊரே இப்படி கோவிலில் கூடியிருப்பதை பார்த்து சீடனுக்கு ஒரே வியப்பு. தனது குருவுடன் சேர்ந்து அவன் பல அன்னாபிஷேகங்களை கண்டிருந்தாலும் இது போல எங்கும் பார்த்ததில்லை.
    “குருவே, இப்படி தெய்வ பக்தி மிக்க மக்களை நான் எங்குமே பார்த்ததில்லை!!!!” என்றான்.
    குரு பதிலேதும் கூறாமல் மெலிதாக ஒரு புன்முறுவல் மட்டும் புரிந்தார்.
    அந்நேரம் பார்த்து அரக்க பரக்க ஒருவர் ஓடி வந்தார். நேரே கோவில் கோபுரத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு, “சிவ சிவ” என்று ஏதோ கூறி கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழியே நடையை கட்டினார்.
    இருவருக்கும் அந்த செய்கை ஆச்சரியமாய் இருந்தது.
    ஊரே இந்த அன்னாபிஷேகத்தை காணவும் சுவாமி தரிசனம் செய்யவும் இங்கே குவிந்திருக்கிறது என்று இப்போது தானே ஆச்சரியப்பட்டோம்…? இவர் என்னடாவென்றால் கோபுரத்தை பார்த்து கும்பிட்டுவிட்டு திரும்ப போய்விட்டாரே..!
    குரு அவரிடம் வேகமாக சென்று, “ஐயா…. நீங்கள் இறைவனை தரிசனம் செய்யவில்லையா? அன்னாபிஷேகத்தை பார்க்கவில்லையா?”
    “சுவாமி… இப்போது தான் இரவு ஷிப்ட் வேலை முடித்துவிட்டு வருகிறேன். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவரை பக்கத்து ஊரில் உள்ள மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும். அதற்கு முன் என் பிள்ளைகளை அவர்கள் பள்ளியில் கொண்டு போய் விடவேண்டும். மதியம் என் மனைவியின் அம்மா ஊரிலிருந்து வருகிறார். அவரை ரயில் நிலையம் சென்று அழைத்து வரவேண்டும். இதற்கிடையே எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு உடல் ஊனமுற்ற பிச்சைக்காரருக்கு உணவு வாங்கி தரவேண்டும். அவர் எனக்காக காத்திருப்பார். அன்னாபிஷேகத்தை பார்க்க எனக்கு நேரம் இல்லை. மந்திரம் சொல்லவும் தெரியாது. பூஜை புனஸ்காரங்களையும் நான் அறியேன். தினமும் காலையில் இந்த கோபுரத்தை பார்த்து, ‘அப்பனே ஈசா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகணும். நீ தான் கூட இருந்து காப்பாத்தணும்’ என்று வேண்டிக்கொள்வேன். எனக்கு தெரிந்த பக்தி இது தான் ஐயா. நான் வருகிறேன்!” என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.

    குரு சீடனைப் பார்த்து, “இப்போது புரிகிறதா யார் மிகப் பெரிய பக்திமான் என்று… அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமையை அனைவரும் சரியாக செய்யவேண்டும். அதையும் காலத்தே செய்யவேண்டும். உலக வாழ்க்கையில் ஒருவர் செய்யவேண்டிய அனைத்தும் இவரது அன்றாட பணிகளில் உள்ளது. அதை சலிக்காமல், வெறுக்காமல், மிக நேர்த்தியாக செய்கிறார். இதுவே உண்மையான வழிபாடு. உள்ளன்போடு இவர் கோவில் கோபுரத்தை பார்த்து சொல்லும் “சிவ சிவ” என்னும் சொல், பன்னிரு திருமுறைகளுக்கு ஈடானது! கடமையை புறக்கணித்துவிட்டு கோவிலிலேயே விழுந்து கிடப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை!” என்றார்.
    (இப்படி சொல்வதால் தங்கள் குடும்பமே கதி என்று சுயநலத்தோடு வாழ்ந்தால் அது தான் கடமை, உன்னத பக்தி என்று எவரேனும் அனர்த்தம் செய்து கொண்டால் அது அவர்கள் அறியாமை! ஒவ்வொருவரும் தத்தங்கள் குடும்பத்திற்கு ஆற்றவேண்டிய கடமையை ஆற்றவேண்டும். இடையே தொண்டுக்கும் சிறிது நேரம் ஒதுக்கவேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை. உண்மையான பக்தி!)
    - See more at: http://rightmantra.com/?p=12225#sthash.4Sn6WKMD.dpuf
Working...
X