Announcement

Collapse
No announcement yet.

அனுஸுயா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனுஸுயா

    புண்ணிய நதியாம் கங்கையில் நீராடினால் நம் பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த கங்காதேவியே... அன்றாடம் தன்னிடம் சேரும் பாவங்கள் நீங்கி, தான் எப்போதும் பவித்திரத்துடன் திகழ, பெண்ணொருத்தியின் புண்ணியத்தை தானமாக கேட்டுப் பெற்ற கதை இது. பாரதத்தின் தென் திசையில் அமைந்திருந்தது காமதம் எனும் வனம். அங்கே, பிரம்மபுத்திரரான அத்ரி முனிவரும் அனுஸுயா தேவியும் தவ வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்கள். அமைதிக்கும் தவத்துக்கும் ஏற்ற அந்த வனத்தில் மேலும் பல ரிஷிகளும் முனிபுங்கவர்களும் வாழ்ந்தனர். இப்படி இருக்கையில், ஒருமுறை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மழையின்றிப் போனது. தவ பூமி வறண்டது. மரங்களும் செடிகளும் இலைகள் உதிர்ந்து, மொட்டையாக நின்றன. ஆவினங்கள் நீரின்றி வாடி, மடிய ஆரம்பித்தன. உணவின்றிக்கூட உயிர் வாழ்ந்துவிடலாம். நீரின்றி உயிர் வாழ முடியுமா? முனிபுங்கவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஒவ்வொருவராக காமத வனத்தை விட்டு வெளியேறினர்.
    ஆனால், அத்திரி முனிவரோ நடந்தது எதுவும் அறியாமல், கடும் நிஷ்டையில் இருந்தார். அவரது மனைவி அனுஸுயாதேவியின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. முனிவரை விட்டுப் பிரியாமல், துயரங்களை எல்லாம் சகித்துக்கொண்டு, அன்ன ஆகாரமும் நீரும்கூட இல்லாமல் தன் கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டு இருந்தாள். பூமித்தாய் வளமாக இருந்தபோது, அவளை விரும்பி, அவள் தந்த செல்வத்தை அனுபவித்தோம். அதே பூமித்தாய் நீரின்றித் தவிக்கும்போது, அவளை விட்டுச் செல்வதா? அது, நன்றி மறந்த செயல் அல்லவா? வறண்ட காலத்திலும்கூட பூமித்தாயுடன் இருந்து, அவளின் துயரத்தை நாமும் பகிர்ந்துகொள்வதுதான் தர்மம் என்று நினைத்தாள் அனுஸுயா. அதனால், எந்த நிலம் நீரின்றித் தவித்ததோ, அதே நிலத்தில் மீண்டும் நீர் பெறச் செய்யக் கடும் தவத்தைத் தொடங்கினாள். அத்திரி முனிவர் தவமிருந்த இடத்தின் அருகில், வறண்ட மண்ணைச் சேர்த்துச் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கினாள். அதை மிகுந்த சிரத்தையோடும் பக்தியோடும் பூஜை செய்தாள். தினமும் அந்த லிங்கத்தையும் தன் கணவரையும் வலம் வந்தாள். தன்னை மறந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அத்திரி முனிவரைச் சுற்றி புற்று வளர்ந்திருந்தது. அவரை விடவும் கடும் தவம் செய்து கொண்டிருந்தாள் அனுஸுயா.
    இவர்கள் இருவரின் தவத்தைக் கண்டு தேவர்கள் எல்லாம் வியந்தனர். திடீரென ஒருநாள் அத்திரி முனிவர் தவம் கலைந்து, கண் விழித்தார். அருகில் தன்னை மறந்து சிவ பூஜையில் அனுஸுயா ஈடுபட்டிருப்பதைக் கண்டார். சுற்றிலும் இருந்த வறண்ட சூழ்நிலையையும் வெப்பத்தையும் பார்த்தார். கடும் பஞ்சத்தாலும் பசிப் பிணியாலும் தன்னைத் தவிர மற்ற எல்லோரும் காமத வனத்தை விட்டு நீங்கிவிட்டதை உணர்ந்தார். வறண்ட அந்த பூமியை வளமாக்க, தன் பத்தினி அனுஸுயாதேவி செய்யும் சிவ பூஜைதான் பலன் தரவேண்டும் என்று அறிந்தவர், அனுஸுயா.. என்று அழைத்தார். அவள் எழுந்து வந்தாள். அவளிடம் கமண்டலத்தைக் கொடுத்து, கங்கை ஜலம் கொண்டு வா என்றார். சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத வறண்ட கானகத்தில், கங்கைக்கு எங்கே போவது என்று சிந்திக்கவில்லை அனுஸுயா. கமண்டலத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
    அவள் செய்த சிவபூஜை காரணமாகக் கட்டுண்டு, அருகிலேயே நின்ற சிவபெருமானின் அனுக்கிரகத்தால், கங்காதேவியே அனுஸுயா முன் தோன்றினாள். எல்லோரும் போய்விட்ட பிறகு இந்த வனத்தில் தங்கியுள்ள இந்தப் பெண் யார்? என்று அனுஸுயா அதிசயத்தாள். அப்போது, அவள் அம்மா அனுஸுயா ! நான்தான் கங்காதேவி. உன் சிவ பூஜையாலும், பதி சேவையாலும் மகிழ்ச்சியடைந்த இறைவன் சிவபெருமானே என்னை இங்கே அனுப்பி வைத்தார். நீ வேண்டும் வரம் கேள்! என்றாள். தாயே கங்காமாதா... வறண்ட இந்தப் பூமித்தாயை வளமாக்கு. இதோ... இந்தக் கமண்டலத்தில் நீர் நிறைத்து, அட்சய பாத்திரம் போல வற்றாமல், என் கணவரின் நித்திய கருமங்களைச் செய்ய வழி செய் என்று வரம் கேட்டாள் அனுஸுயா. கமண்டலத்தை நிறைத்தபின், அனுஸுயை பூஜை செய்த மண் சிவலிங்கத்தின் அருகில், வற்றாத ஊற்றாய்ப் பெருக ஆரம்பித்தாள் கங்காதேவி. அத்திரி முனிவர் தன் மனைவி செய்த சிவபூஜையின் பலனை அறிந்து மகிழ்ந்தார். அப்போது கங்காதேவியைப் பார்த்த அனுஸுயா, தாயே, உன்னிடம் நான் மற்றொரு வரம் கேட்கலாமா? என்றாள்.
    தாராளமாகக் கேள், தருகிறேன்! ஆனால், அதற்குப் பதிலாக எனக்கு நீ ஒரு வரம் தரவேண்டும் என்றாள் கங்காதேவி. தன்னால் இயன்ற எதுவானாலும் தருவதாகக் கூறினாள் அனுஸுயா. பிறகு, தான் வேண்டிய வரத்தை முதலில் கேட்டாள். பெற்ற தாய் முதுமையும் நோயும் உற்ற காலத்தில் அவளை விட்டுச் செல்லும் மக்களைப் போல, வறண்ட காலத்தில் நிலமகளை விட்டு மக்கள் பிரிந்து விடுகின்றனர். வறண்ட நிலையிலும் பூமியை சிவனாக வழிபட்டவர்களுக்கு வளம் குன்றாமல் வரம் தருபவள் நீ என்று எல்லோரும் உணர வேண்டும் என்று வரம் கேட்டாள். அப்படியே செய்கிறேன். நீ பிரதிஷ்டை செய்த இந்தச் சிவபெருமான் சிரசில் நானே தங்கி, இந்த பூமியை செழிக்கச் செய்கிறேன். ஆனால், இப்போது நான் கேட்கும் வரத்தை நீ தா! என்றாள் கங்கை. கட்டளையிடுங்கள் தாயே, நிறைவேற்றக் காத்திருக்கிறேன் என்றாள் அனுஸுயா. இதுநாள் வரையில் நீ செய்த பதி சேவையாலும், சிவ பூஜையாலும் கிடைத்த புண்ணியத்தில் பாதியை எனக்குத் தானமாகக் கொடு. அன்றாடம் எல்லோரிடத்திலும் நான் ஏற்றுக்கொள்ளும் பாவங்கள் அனைத்தும் நீங்கி, நான் பவித்திரமாகவே இருக்க, அந்தப் பூஜையின் பலன் பயன்படும் என்றாள் கங்காதேவி. அவள் கேட்டபடியே தான் செய்த புண்ணியத்தின் பலனைத் தயங்காமல் தானம் செய்தாள் அனுஸுயா. உடனே, அனுஸுயா பூஜித்த மண் லிங்கத்தில் இருந்து சிவபெருமான் தோன்றினார். ருத்ரன், பைரவன், மிருத்யுஞ்சயன், சங்கரன், சிவன் என்ற ஐந்து முகங்களுடன் பஞ்சமுக மகாதேவனாகக் காட்சி தந்தார் சிவபெருமான். அத்திரி முனிவரும் அனுஸுயாவும் பக்திப் பரவசத்தோடு, ஹரஹர மகாதேவா.. என்று கூறிப் பணிந்தனர். கங்கை கலகலவெனப் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடி, வறண்ட பூமியை வளப்படுத்தினாள். பூமித்தாய் மனம் குளிர்ந்தாள். புண்ணியத்தை தானம் செய்த புண்ணியவதி நீ என்று கூறி, சிவபெருமானும் பார்வதியும் அனுஸுயாவுக்கு ஆசி கூறி மறைந்தனர்.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X