அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக, காங்கிரசை மக்கள் ஏற்கவில்லை, என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதன்மூலம், காங்கிரசுக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காதது என்பது, தெளிவாகியுள்ளது.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, நேற்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியுள்ளதாவது:லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு என, விதிகள் உள்ளன. அதன்படி, யாருடைய தயவும் இல்லாமல், தகுதியுள்ள எவரும், தங்களுக்குரிய பதவியை பெறலாம். காங்கிரஸ், எதிர்க்கட்சியாக செயல்படுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதை, யாரும் தடுக்கப்போவதில்லை.
எதிர்க்கட்சியாக :

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக வேண்டுமென ஆசைப்படுகிறது. அதற்கு, மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லையே. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக, காங்கிரசை ஏற்றுக் கொண்டிருந்தால், கூடுதலாக, 11 இடங்களை மக்கள் அந்த கட்சிக்கு தந்து இருப்பார்களே. காங்கிரசுக்காக நடைமுறைகளை தளர்த்த வேண்டுமென எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்? இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற துடிக்கும் காங்கிரஸ், முந்தைய காலங்களில், இதுபோன்ற நேரங்களில், மற்றவர்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டு கொடுக்காதது ஏன்?கடந்த ஆட்சியின்போது, ராஜ்யசபாவில் துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டுமென, நானே பலமுறை கேட்டும்கூட, கடைசிவரை மறுத்தது காங்கிரஸ். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது, சபாநாயகரின் உரிமை. இந்த விஷயத்தில் சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், காங்கிரஸ் தாராளமாக எடுக்கட்டும். சபாநாயகரின் உத்தரவை, கோர்ட் எந்த வகையில் கட்டுப்படுத்தும் என பார்க்கலாம். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. கட்சிக்காக, வருமான வரி விலக்குடன் பணம் வசூலித்துள்ளது, காங்கிரஸ். அதை எதற்காக, மூடப்பட்ட பத்திரிகைக்கு தர வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலில் அந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதியானவர் :

விதிமுறைகளை மீறுவதற்கு, காங்கிரசுக்கோ, சோனியா குடும்பத்திற்கோ, அரசியல் சட்டம் விதிவிலக்கு அளிக்கவில்லை. சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் இல்லை.பா.ஜ.,வுக்கு தலைவராக, அமித் ஷா தேர்வு செய்யப்பட்டது, எந்த விதத்திலும் தவறு இல்லை. அந்த பதவிக்கு, அவர் முற்றிலும் தகுதியானவர். காங்., ஆட்சி காலத்தில் பழிவாங்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய அடிப்படை ஆதாரமே இல்லை.பிரதமரின் முதன்மை செயலராக, நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள், வேண்டுமென்றே, அரசியல் ஆக்குகின்றன. யாரை, தனக்கு செயலராக நியமித்துக் கொள்ள வேண்டுமென்பது குறித்து, பிரதமர் தான் முடிவு செய்வார். அது குறித்து, கேள்வி எழுப்புவது, அர்த்தமற்றது.இவ்வாறு, அமைச்சர் அருண் ஜெட்லி, கூறினார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends