Announcement

Collapse
No announcement yet.

அடியாரை தேடிவந்த கண்ணன்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அடியாரை தேடிவந்த கண்ணன்!

    கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என, கேட்பதை விட, அவனிடம் அன்புடன் கூடிய பக்தி இருந்தால், அவனே நம் இல்லம் தேடி வருவார்.
    துவாரகையிலிருந்து, 220 கி.மீ., தொலைவில் டாங்கேர் என்ற ஊரில், ராமதாசர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கண் இமைக்கும் நேரம் கூட, கண்ணனை மறக்காமல் பக்தி செய்பவர். தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து, அதில் தான் கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டு வந்தனர். ஒவ்வொரு ஏகாதசியும், வீட்டில் கண்ணனுக்குப் பூஜை செய்து, ஒரு சிலருக்காவது அன்னம் அளித்து, அதன்பின், துவாதசியன்று விரதம் முடிப்பது ராமதாசரின் வழக்கம்.
    அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் நடந்தே போய், ஆடி ஏகாதசியன்று துவாரகையில், கண்ணனை தரிசித்து திரும்புவார். ஒரு சமயம், உடல்நிலை நோய்வாய்ப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், துவாரகைக்கு புறப்பட்டார் ராமதாசர். கால்வாசி தூரம் தான் போயிருப்பார் அவரால் பயணத்தை தொடர முடியவில்லை. வழியிலேயே இருந்த சிறுகோவில் மண்டபத் தில் உட்கார்ந்து விட்டார். துவாரகை பயணம் தடை பட்டு போனதை அவரால் தாங்க முடியவில்லை. இதனால், மனம் கலங்கிய ராமதாசர், 'கண்ணா... எனக்கு அருள் புரியக்கூடாதா...' என, வேண்டியபடி அப்படியே தூங்கி விட்டார். அவருடைய கனவில் காட்சியளித்த கண்ணன், 'ராமதாசா... கவலைப்படாதே! என்னுடைய தேர் இங்கு வரும்; அதில் நான் இருப்பேன்...' என்றார்.
    கனவு கலைந்து ராமதாசர் கண்களை திறந்து பார்த்தார். அங்கே அழகான தேர் ஒன்றில், துவாரகநாதரின் விக்கிரகம் இருந்தது. ராமதாசர் மெய்சிலிர்த்து, கண்ணனை வணங்கியவர், தேரில் ஏறி, விக்கிரகத்துடன் வீடு திரும்பினார். வீட்டு முற்றத்தில், விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து, பஜனை செய்ய துவங்கினார். இந்நிலையில், துவாரகையில், கண்ணன் விக்கிரகத்தை காணாமல் திகைத்த அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும் தகவலறிந்து, ராமதாசரின் வீட்டிற்கு வந்து, விக்கிரகத்தை கைப்பற்றினர்.
    அப்போது ராமதாசர், 'கண்ணா... உன்னை நானாக தூக்கி வரவில்லை; நீயாகத் தான் என்னிடம் வந்தாய். இப்போது, உன்னை பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்...' என்று கதறி, விக்கிரகத்தின் பீடத்தில் தலையை முட்டி அழுதார். அவரது உள்ளத்தில் தோன்றிய கண்ணன், 'ராம தாசா... என் எடைக்கு எடை, தங்கம் தருவதாக சொல்; அர்ச்சகர்கள் தந்து விடுவர்....' என்றார்.
    அவ்வாறே ராமதாசரும் சொல்ல, அர்ச்சகர்களும் ஒப்புக் கொண்டனர். தராசு ஒன்றில், ஒரு தட்டில் கண்ணன் விக்கிரகத்தை வைத்தனர்.
    மற்றொரு தட்டில், தன் மனைவியின் தாலி, மூக்குப் பொட்டு இரண்டையும் வைத்தார் ராமதாசர். இதைக் கண்ட அனைவரும் ஏளனமாக சிரித்தனர். ராமதாசரோ கண்களை மூடி கண்ணனை தியானித்தார். அப்போது, ராமதாசரின் உள்ளத்தில் இருந்த கண்ணன், 'ராமதாசா... இன்னுமா என்னை நீ, புரிந்து கொள்ளவில்லை?' என்றார்.
    அதைக்கேட்டதும், ஒரு வினாடியில் ராமதாசருக்கு, நாரதர், ருக்மணி மற்றும் சத்யபாமா ஆகியோர் கண்ணனை வைத்து நடத்திய துலாபார நிகழ்வு நினைவுக்கு வந்தது. அவர், 'விறுவிறு' வென்று ஓடி, தான் வழிபட்டு வந்த துளசிச் செடியில் இருந்து இரண்டு துளசி இலைகளை எடுத்து வந்து, தராசு தட்டில் வைத்தார்.
    அதன்பின் மனைவி யுடன் சேர்ந்து தராசை வலம் வந்து வணங்கினார். தராசு தட்டுகள் இரண்டும் சமமாக ஆயின. அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் ஆச்சரியத் தில் ஆழ்ந்து, ராமதாசரை வணங்கினர். துவாரகா ராமதாசர் எனும் அந்த பக்தர் பாடிய பாடல்கள், இன்றும் துவாரகையில் பாடப்படுகின்றன. அடியாரை தேடி, ஆண்டவனே வந்த வரலாறு இது.

    பி.என்.பரசுராமன்
Working...
X