Announcement

Collapse
No announcement yet.

இரண்டு கங்கை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இரண்டு கங்கை!

    ஒரு கங்கையைப் பார்த்தாலே புண்ணியம்; இதில், இரண்டு கங்கைகளைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா! அர்ஜுனா மற்றும் வைப்பாறு என, இரு கங்கைகள் பாயும் இருக்கன்குடி பற்றி தெரிந்து கொள்வோம்...
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிராமம் இருக்கன்குடி. ஆயிரம் கண்ணுடையாளான மாரியம்மன், அனைத்துக் கண்களின் அருளையும் ஒன்று திரட்டி, இரண்டு கண்கள் வழியாகப் பக்தர்கள் மீது செலுத்துகிறாள்; இதனால் இவ்வூருக்கு, 'இருக்கண்குடி' என்ற பெயர் வந்தது. அதுவே பின் நாளில், இருக்கன்குடியாகத் திரிந்தது. இந்தக் கோவில், அர்ஜுனா மற்றும் வைப்பாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

    முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள், தங்களுடைய வனவாச காலத்தின் போது, வத்திராயிருப்பு அருகிலுள்ள மகாலிங்க மலைக்கு வந்தனர். அங்கே குளிப்பதற்கு நீர் ஊற்று தென்படாததால், அர்ஜுனன் கங்காதேவியை வணங்கி, தன் அம்பால் பூமியைப் பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே, அர்ஜுனா நதி!
    அதே போல், ராமாயணக் காலத்தில், ராமபிரான் சம்புகன் என்பவனிடம் போரிட தென்பகுதிக்கு வந்தார். அப்போது இப்பகுதியை அவர்கள் கடந்த போது, ராமபிரானின் படைவீரன் சாம்பவன் என்பவன், 'ராமா... அகத்தியர் இவ்விடத்தில், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் ஒரே குடத்தில் நிரப்பி புதைத்து வைத்துள்ளார். தங்கள் கைபட்டால், அது பலருக்கும் பயன்படும் புண்ணிய நதியாகும்...' என்றான். இதுகேட்ட ராமர், தன் அம்பால், புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பில் (புதையலில்)இருந்து தோன்றியது வைப்பாறு எனப்பட்டது.
    ராமனும், அர்ஜுனனும் உருவாக்கிய நதிகள் என்பதால், இவைகள் கங்கைக்கு சமமாகப் போற்றப்படுகின்றன.
    கடந்த, 300 ஆண்டுகளுக்கு முன், ஒரு பூஜாரி பெண், ஆற்று மணலில் கிடந்த மாட்டுச்சாணத்தை அள்ளி கூடையில் நிரப்பி, அதைத் தூக்க முயன்ற போது, முடியாமல் போகவே, அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்தாள். அவர்கள் தூக்க முயற்சித்த போது, அந்தப் பெண்ணுக்கு அருள்வந்து, 'இந்த சாணிக்கூடையின் கீழ், மாரியம்மனான நான், சிலையாக மணலில் புதையுண்டு கிடக்கிறேன்; என்னை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுங்கள்...' என்றாள்; அவள் கூறியபடியே கோவில் எழுந்தது.
    இருக்கன்குடி மாரியம்மன் சக்தி மிக்கவள்; இவளுக்கு ஆடி கடைசி வெள்ளி விசேஷ நாள். குழந்தை பாக்கியம், திருமணத்தடை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேருதல் என, எந்த வேண்டுதலாக இருந்தாலும், இவளை வழிபடலாம்; மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை இங்கு மேற் கொள்ளப்படும் முக்கிய வழிபாடுகள்.
    இன்று இங்குள்ள இரு கங்கைகளிலும், மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வருகிறது; மழை தரும் மாரியம்மனின் மனம் குளிரும் வகையில், நம் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டால், ஆண்டு முழுவதும் வற்றாத நீர் வளம், தருவாள் அந்த அம்பிகை.

    தி.செல்லப்பா

    Sourceinamalar
Working...
X