Announcement

Collapse
No announcement yet.

கரைவது கண்ணீர் அல்ல… நம் வினைகள்! – குரு தரி&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கரைவது கண்ணீர் அல்ல… நம் வினைகள்! – குரு தரி&#

    கரைவது கண்ணீர் அல்ல… நம் வினைகள்! – குரு தரிசனம் (7)

    மகா பெரியவா அவர்களை பற்றிய பதிவுகளை நாம் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்த தளத்தில் அளித்து வந்தாலும் அதில் சிறு தொய்வு கூட ஏற்பட்டுவிடக்கூடாது… குரு மகிமையை தட்டச்சு செய்யும் பாக்கியமும் அதை உங்களை படிக்க வைக்கும் பாக்கியமும் எள்ளளவு கூட நமக்கு குறைந்துவிடக்கூடாது… என்று தான் குரு வாரம் என்று கூறப்படும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகா பெரியவாவை பற்றி பதிவை வெளியிடுவதை நாமே ஒரு வழக்கமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம்.

    ‘மகா பெரியவா அவர்களை பற்றி படிக்கும்போது எங்களையுமறியாமல் கண்ணீர் வழிந்தோடுகிறது’ என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் இருக்கிறது. நமது கண்ணீர் கரைவதற்கும் வினைப் பயனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
    “சிரிக்க சிரிக்க செய்த பாவத்தை அழுது அழுது தான் தீர்க்கவேண்டும்”, “கண்ணீரால் கழுவ முடியாத பாவமும் உண்டோ…?” என்று கண்ணீரை பற்றி இரண்டு பிரபல மேற்கோள்கள் உண்டு. இந்த ஜென்மமோ எந்த ஜென்மமோ அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்கள் அனைத்தும் குருவின் மகிமையை படிக்கும்போது கண்ணீரின் ரூபத்தில் கரைந்து ஓடிவிடுகிறது. அது தான் உண்மை.
    கலியுகத்தில் குருவினால் தான் நம்மை கடைத்தேற்ற முடியும். நமது பாவங்களை சுட்டு பொசுக்க முடியும். மும்மூர்த்திகளும் ஒப்புக்கொண்ட, அனுக்கிரகித்த விஷயம் இது. (இது பற்றி ஒரு சிறப்பு பதிவின் மூலம் அடுத்த வாரம் விபரமாக கூறுகிறோம்!)
    குருவின் பெருமை படிப்போம். போற்றுவோம். குரு காட்டும் வழி நடப்போம்.
    இந்த வார குரு தரிசனம் – ஒன் பை டூ. அதாவது இரண்டு சம்பவங்கள்! வெவ்வேறு மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்டது!!
    கருவில் இருக்கும் குழந்தையின் தேவையை கூட அறிவார் நம் குரு!
    சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் பெரியவா முகாமிட்டிருந்த சமயம். ஞாயிற்றுக்கிழமை. எக்கச்சக்க கூட்டம். பூஜை முடிந்து அபிஷேக தீர்த்தம் கொடுப்பதற்காக பெரியவா தோதான ஒரு இடத்தில அமர்ந்துகொண்டார்கள்.
    நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். பெரியவா திருக்கரத்தினால் தீர்த்தம் பெற்றுக்கொள்ள விரும்பிகிறவர்கள் அதுவரையில் எதுவும் உண்பதில்லை. நேரமாகும் என்று தெரிந்தும் பட்டினாயாகவே இருப்பார்கள்.
    தீர்த்தம் கொடுத்துக்கொண்டிருந்த பெரியவா ஒரு கட்டத்தில் சட்டென்று எழுந்து நின்றார்கள். “இன்று அவ்வளவு தானா? பிக்ஷைக்கு போய்விடுவார்களோ…? அவர் கையால் தீர்த்தம் வாங்கிக்கொள்ளும் பாக்கியம் நமக்கு இல்லையோ என்று?” என்று க்யூவில் நிற்பவர்களுக்கு கவலை வந்துவிட்டது.
    பெரியவா ஒரு சிஷ்யனை கைசொடுக்கி அழைத்தார்கள். அவனிடம் க்யூவை காட்டி ஏதோ சொன்னார்கள்.
    சிஷயர் விடுவிடுவென்று வரிசையில் நின்ற நூறு பேர்களை கடந்து போய் ஒரு பெண்மணியிடம் சென்று அவரை மட்டும் அழைத்துக்கொண்டு வந்து பெரியவா முன்னர் நிறுத்தினார்.
    பெரியவா ஆசனத்தில் அமர்ந்து கனிவுடன் அந்தப் பெண்மணிக்கு தீர்த்தம் அளித்து அனுப்பி வைத்ததை அத்தனை பேரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
    அந்த பெண் நிறைமாத கர்ப்பிணி.
    தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்காக பிற்பகல் சுமார் மூன்று மணிவரை எதுவும் சாப்பிடவில்லை. காலை ஆறு மணிக்கு அருந்திய ஒரு டம்பளர் காபி மட்டும் தான்.
    உள்ளே இருந்த அந்த ஆத்மாவின் குரல் பெரியவாவின் செவிகளுக்கு மட்டும் கேட்டிருக்குமோ?
    (நன்றி : டி.எஸ்.கோதண்டராம சர்மா – ‘மகா பெரியவா தரிசன அனுபவங்கள்’ | தட்டச்சு : www.rightmantra.com)


    சமுத்திரக் கரையில் தவம் செய்யும் மகா பெரியவா – 1978ல் எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம்
    தேடினேன் வந்தது!
    ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.சுவாமிநாதன், தன் 11 வயது முதலே காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் டில்லியில் பணியாற்றிய சமயம், ஒரு நாள் பகல் விமானத்தில் சென்னை வந்து மாலையில், காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் உள்ள சிவாஸ்தானத்தில், பெரியவரைத் தரிசிக்க உத்தேசித்திருந்தார். டில்லி பாலம் விமானத்திற்கு செல்லும் வழியில் அரசு செயலர் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று, தான் காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசிக்க இருப்பதைத் தெரிவித்தார். ராமச்சந்திரன் தன் வீட்டு பச்சைக் கொண்டைக் கடலையை நிறைய பறித்து பெரியவரிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டிக் கொண்டார்.
    அன்று ஏதோ காரணத்தால் விமானம் புறப்பட தாமதமானது. அதனால், மாலையில் சென்னை வர வேண்டிய விமானம் இரவில் தான் வந்து சேர்ந்தது. மறு நாள் காலையில் சுவாமிநாதன் சிவாஸ்தானம் கிளம்பி வந்தார். பெரியவருக்கு சமர்ப்பிக்கும் திரவியங்களை எல்லாம் தட்டுக்களில் எடுத்து வைத்தார். அருகில் இருந்த பெரியவரின் சீடர் ஒருவர், “பச்சைக் கடலையை கொண்டு வந்திருக்கிறீர்களே? ஏதும் விசேஷமா?” என்று கேட்டார்.
    அதற்கு சுவாமிநாதன், வரும் வழியில் செயலர் ராமச்சந்திரனைச் சந்தித்த விபரத்தையும், அவர் கடலை பறித்து தந்து பெரியவருக்கு சமர்ப்பிக்க சொன்னதையும் தெரிவித்தார்.
    அந்த சீடர், “நேத்து காலை சரியாய் 11 மணி இருக்கிறப்போ ஜபம், அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும், பெரியவர் பச்சைக் கொண்டைக் கடலை கிடைக்குமா?” என்று கேட்டார். அருகிலுள்ள வயல் வரப்பெல்லாம் தேடித் பார்த்தும் எங்கும் தென்படவில்லை. இல்லை என்று எப்படி சொல்வது என்று தயக்கத்துடன் பெரிய வெள்ளைக் கடலைகளை கொஞ்சமாக எடுத்து வைத்தேன். பெரியவரோ, ‘இது வேண்டாமே!” என்று சொன்னதோடு, “நாளை பச்சைக் கடலை வரும்!” என்று மட்டும் தெரிவித்தார். அதன்படி நீங்களும் கொண்டு வந்து விட்டீர்கள் என்று சொல்லி, அதிகாரியை வியப்பில் ஆழ்த்தினார்.
    காஞ்சிபுரத்தில் இருந்தபடியே, டில்லி லோதி ரோட்டில் பச்சைக் கடலை இருப்பதை அறிந்து, அதை வரவழைத்த முனிபுங்கவரான காஞ்சி பெரியவரின் ஞான திருஷ்டியை கண்ட அனைவரின் நெஞ்சமும் பரவசத்தில் ஆழ்ந்தது.

    (நன்றி : தினமலர் – ஆன்மீகமலர் | தட்டச்சு : www.rightmantra.com



    மகா பெரியவா அருள்வாக்கு
    * இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.
    * தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.
    * உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.
    * ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.
    * கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.
    - காஞ்சிப்பெரியவர்
    - See more at: http://rightmantra.com/?p=13000#sthash.UbAP5v0R.dpuf
Working...
X