Announcement

Collapse
No announcement yet.

விஸ்வரூப மகா சதாசிவ மூர்த்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விஸ்வரூப மகா சதாசிவ மூர்த்தி

    விஸ்வரூப மகா சதாசிவ மூர்த்தி

    25 முக ஈசன்

    ஈசனின் அறுபத்து நான்கு திருவடிவங்கள் சிறப்பானவை என்கின்றன புராணங்கள். அவற்றுள் ஒன்று மகா சதாசிவ மூர்த்தி வடிவம். இது சிவனின் ஞானமயமான வடிவினைக் குறிக்கும். எல்லாவற்றிலும் மேலானதாகவும், சிறந்ததாகவும், உயரிய தத்துவங்களைக் கொண்டதாகவும், சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சதாசிவ வடிவம் விளங்குகிறது. சதாசிவனின் வடிவம் ஒருமுகம், இரண்டு முகங்கள், ஐந்து முகங்கள் கொண்டதாகவும், மகாசதாசிவ வடிவாக இருபத்து ஐந்து முகங்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளார். மகாசதாசிவ வடிவம் சிவனுடைய மற்றைய வடிவங்கள் போன்று எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதில்லை. அத்துடன் இவ்வடிவம் கோயில்களில் இடம் பெறுவதும் மிக அரிதே. கோபுரங்களில் சுதை வடிவில் சதாசிவமூர்த்தி அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாட்டுக் கோயில்களில் காணலாம். ஐந்துமுகமுள்ள சதாசிவன், நான்கு திசைகட்கும் நான்கு முகங்களும், உச்சியில் ஒரு முகமாக ஐந்து முகங்களையும், ஒவ்வொரு முகத்திற்கும் மும்மூன்று கண்களையும் உடையவர். உச்சியிலுள்ள ஈசானமுகம் ஈசான திசையை நோக்கியதாகவும், பளிங்கு நிறம் கொண்டதாகவும் இருக்கும். கிழக்கிலுள்ள தத்புருஷ முகம் கிழக்கு திசையை நோக்கி கோங்கம் பூ நிறத்தினைக் கொண்டதாகவும், தெற்கிலுள்ள அகோரமுகம் வலது தோள்மேல் தெற்கு நோக்கி அவிழ்ந்த ஜடை, தாடி, கருப்பு நிறம், உக்கிர தோற்றத்தினை உடையதாகவும், வடக்கிலுள்ள வாமதேவமுகம் இடது தோள் மேல் வடக்கு நோக்கியதாகவும், சத்தியோசாத முகம் மேற்கு நோக்கியதாக பால் நிறமுடையதாகவும் இருக்கும். வலது கரங்களில் சூலம், மழு, வாள், வஜ்ஜிரம், அபயமுத்திரையும்; இடது கரங்களில் பாம்பு, பாசம், அங்குசம், மணி, வரதமுத்திரை முதலியவையும் கொண்டவர். சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களும் பஞ்சபிரம்ம மந்திரம் என்றே சிவஆகமங்களில் குறிப்பிடப்படுகின்றன.


    சுடுகாட்டு சித்தன்
Working...
X