வெள்ளிக்காசு

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகும்பகோணம் அருகிலுள்ள திப்பிராஜபுரம் கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டார். பெருங்கூட்டம் அலைமோதியது. அதில் சிக்கிக்கொண்ட ஒரு ஒன்பது வயது சிறுமியை கூட்டத்தினர் அங்குமிங்கும் தள்ளினர். அவளது கையில் ஒரு நோட்டு இருந்தது. அதை பெரியவர் கையில் கொடுக்க வேண்டும் என்பது அவளது நோட்டம். எப்படியோ ஒரு வழியாக பெரியவர் முன் வந்து விட்டாள். ஆனாலும், அவளை அவர் பார்க்கவில்லை. பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒரு வழியாக, சிறுமி மீது பெரியவரின் பார்வை பட, அவரை அருகே அழைத்தார். சிறுமி அவரிடம் ஆசி பெற்றாள். இந்த நோட்டில் லட்சத்து எட்டு தடவை ஸ்ரீராம ஜெயம் எழுதிருகேன்! வாங்கிக்கிடுங்கோ! என்றாள். பெரியவரும் அதை தன் தலையில் வைத்து ராம..ராம.. என்று ஐந்துமுறை உச்சரித்தார். நோட்டை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்து, ஏதோ அவரிடம் சொன்னார். ஆனாலும், சிறுமி அங்கிருந்து நகராததைக் கண்ட பெரியவர்,வீட்டுக்குப் போகலியா? என்று கேட்டார்.சுவாமி! ஸ்ரீராமஜெயம் எழுதினா நீங்க வெள்ளிக்காசு தர்றதா சொன்னாங்க! அதற்காகத்தான் காத்திருக்கேன், என்று சற்றும் தயக்கமின்றி சொன்னாள்.பெரியவர், அவளை உற்றுப்பார்த்து விட்டு, பதில் சொல்லாமல், தீர்த்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

வருத்தமடைந்த சிறுமி வீட்டுக்குப் போய்விட்டாள். அன்று மாலை பெரியவர், அவள் வீட்டுப் பக்கமாக பல்லக்கில் பவனி வந்தார். ஒரு வீட்டின் முன் பூரணகும்ப மரியாதை அளித்த போது, சிறுமி வேகமாக அவர் அருகே சென்றாள். பெரியவரிடம்,சுவாமி! நீங்க எனக்கு இன்னும் வெள்ளிக்காசு தரலியே! சுவாமியான நீங்களே இப்படி ஏமாத்தலாமா? என்று சற்று கடுமையாகவே கேட்டாள். இதைக்கேட்ட அவளது தந்தை அவளை தரதரவென வீட்டிற்குள் இழுத்துப்போய் விட்டார். ஊராரோ மரியாதையில்லாமல் பேசிய அவளைத் திட்டினர். பெற்றவர்களுக்கு அவமானம் தாங்கவில்லை, அப்போது தான் நிகழ்ந்தது அந்த அற்புத நிகழ்வு. பெரியவர் பல்லக்கை விட்டு இறங்கி, அவளது வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார். பெரும் பணக்காரர்கள் எல்லாம் அவர் தங்கள் வீட்டுக்கு வரமாட்டாரா என்று ஏங்கித்தவித்த வேளையில், பெரியவர் தங்கள் வீட்டுக்கு வந்ததும் சிறுமியின் பெற்றோர் என்ன செய்வதென அறியாமல் திகைத்தனர். சிறுமியின் தாய், ஒரு மணையை (பலகை) கொண்டு வந்து போட்டார். அதில் ஏறி நின்ற பெரியவர், ஏதும் பேசாமல் மீண்டும் வெளியே வந்து விட்டார். மறுநாள் சாமாங்கிறது யாரு? என்ற குரல் அவள் வீட்டு வாசலில் கேட்டது. ஒருவர் மரத்தட்டுடன் வாசலில் நின்றார். அவளது அப்பா நான் தான் சாமா என்ற சாமிநாதன் என்று அவரை வீட்டுக்குள் அழைத்தார். இங்கே தங்கமணிங்கிற குழந்தை இருக்காளாமே! அவளுக்கு பெரியவா ஆசியோட பிரசாதம் அனுப்பியிருக்கா, என்றார். தட்டில் குங்குமம், பழம், அட்சதையின் நடுவே ஒரு வெள்ளிக்காசு இருந்தது.சிறுமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் வேறு யாருமல்ல. இந்த கட்டுரையை எழுதிய நானே தான்! என் பெயரை யாரிடமோ விசாரித்து, எனக்கு வெள்ளிக்காசு வழங்கிய அந்தத் தங்கக்கைகளுக்கு சொந்தமான மகாபெரியவரின் ஆசியை நினைத்து இப்போதும் நெக்குருகி நிற்கிறேன்.

Source: சுடுகாட்டு சித்தன்