Announcement

Collapse
No announcement yet.

தமிழகத்தில் ஓணம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழகத்தில் ஓணம்!

    ஓணம் கேரள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் ஓணம் கொண்டாடப்பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள அனைத்து கோவில்களிலுமே கஜபூஜை நடக்கும்; ஓணம் பண்டிகையின் போதும், யானைகளை அலங்கரித்து அணிவகுப்பு நடத்துவர். அதேபோன்று மதுரையில், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், ஓணம் பண்டிகை காலத்தில் யானைச் சண்டை நடக்கும். நான்கு புறமும் கூழாங்கற்களைக் குவித்து, மேடான பகுதியாக்கி அதன் மேல் மக்கள் அமர்ந்து கொள்வர். நடுவிலுள்ள பள்ளத்தில் யானைகளை சண்டையிடச் செய்வர். வெற்றி பெறும் யானையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேவல் சண்டை, ஆட்டுக்கிடா சண்டை நடப்பது போல் அக்காலத்தில் யானைச் சண்டையும் நடந்துள்ளது.
    மதுரைக்கும், ஓணத்திற்கும் புராண ரீதியாகவும் தொடர்பு இருந்துள்ளது. மகாபலி மன்னன் மிகவும் நல்லவன்; ஆனால், ஆணவக்காரன். அந்த ஆணவம் மட்டும் நீங்கி விட்டால், அவன் மோட்சத்திற்கு தகுதியுள்ளவனாகி, தேவலோகத்தை அடக்கியாண்டு விடுவான் என்று நினைத்த தேவேந்திரன், திருமாலின் உதவியை நாடினான். திருமால், குள்ள வடிவம் எடுத்து வாமனராக பூமிக்கு வந்தார்.
    உலகை தன் கட்டுக்குள் கொண்டு வர, யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலி, வந்தவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தான்.
    வாமனர் அவனிடம், தனக்கு மூன்றடி நிலம் வேண்டுமென கேட்டார். இந்த சின்னஞ்சிறு கால்கள் எவ்வளவு நிலத்தை அளந்து விடும் என நினைத்து சம்மதித்தான் மகாபலி. அவரோ விஸ்வரூபமெடுத்து, இரண்டடியால் உலகை அளந்து, மூன்றாம் அடிக்கு, 'எங்கே நிலம்...' என கேட்டார்.
    மகாபலி தன் தலையைக் கொடுக்க, அவனை பாதாளத்திற்குள் அனுப்பினார். பிற அவதாரங்களில், திருமால் அசுரர்களைக் கொன்று விடுவார்; ஆனால், வாமன அவதாரத்தில் மகாபலியை ஆட்கொண்டார். அதனால் தான் அவரை, 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என பாராட்டுகிறாள், ஆண்டாள். பெருமாள் உலகளந்த சமயத்தில், அவரது ஒரு திருவடி வானத்தை கிழித்து, பிரம்மலோகத்தை எட்டியது. இதைக்கண்டு மகிழ்ந்த பிரம்மா, அந்த திருவடியை தன் கமண்டலத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் பூமியை நோக்கி வந்தது; அதுவே, 'நூபுர கங்கை' எனப்பட்டது. 'நூபுரம்' என்றால் சிலம்பு; திருமாலின் திருவடி சிலம்பின் மீது பட்ட நீர், கங்கையாகப் பெருகியதால் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என பெயர் ஏற்பட்டது. இந்த தீர்த்தம் மதுரை அழகர் மலையில் இருக்கிறது; இங்கு புனித நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
    ஓணம் திருநாளன்று, நீங்களும் நூபுர கங்கைக்கு வந்து நீராடுங்கள்; அன்று இல்லங்களில் பல வகை உணவு சமைத்து, குழந்தைகளுடன் ஓணத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.


    தி.செல்லப்பா
Working...
X