முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்!! ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)


புதுவையை சேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி திரு.சந்திரமௌலிக்கு ராயர் மீது அலாதி பக்தி உண்டு. தனது வீட்டுக்கருகே இருக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு அடிக்கடி தனது மகன் ஸ்ரீனிவாசனை அழைத்துக்கொண்டு செல்வார். அந்த பிருந்தாவனம் அங்கு தோன்றியது முதலே அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. புதுவை சங்கர வித்யாலாவில் +2 படித்து வந்த ஸ்ரீனிவாசன் படிப்பில் படுசுட்டி. எல்லாப் பாடங்களிலும் 90% மேல் எடுக்கும் நம்பர் ஒன் ஸ்டூடன்ட். ப்ளஸ்-டூ முடித்த பின்னர் அண்ணா பலகலைக்கழகத்திலோ அல்லது ஏதாவது ஒரு நல்ல கல்லூரியிலோ சேர்ந்து பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கவேண்டும் என்பது அவன் கனவு. பெற்றோரின் விருப்பமும் அதே.


2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம். சரியாக பொதுத் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன், ஸ்ரீனிவாசன் உடலில் அசாதாரண மாற்றம். தீராத தலைவலி, கண்களுக்கு பின்னால் கடும் வலி, வாந்தி, கை மற்றும் கால் மூட்டுக்களில் வலி. என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. டாக்டரிடம் ஓடுகிறார்கள். ஸ்ரீனிவாசனை பரிசோதித்த டாக்டர், அப்படியொரு குண்டை தூக்கி வீசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீனிவாசனுக்கு வந்திருப்பது சிக்கன்குனியா. (சிக்கன்குனியா அப்போது வேகமாக பரவிவந்த நேரம்.​)


இரண்டு நாளில் +2 பொதுத் தேர்வு. எண்ணற்ற கனவுகளோடு தேர்வுக்கு ஆயதமாகிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசனுக்கு உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.


சந்திரமௌலி, டாக்டர் கைகளை பிடித்துக்கொண்டு கதறினார். சார் எங்களுக்கு ஒரே பையன் சார். என்னெனவோ கனவு கண்டோம். எப்படியாவது அவன் பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடிச்சிட்டா போதும் ஏதாவது பண்ணுங்க சார்.


மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர், என்னால முடிஞ்சதை செய்றேன். ஆனா நோய் அதிகமாகுமா, பையன் பரீட்சை எழுதமுடியுமா முடியாதான்னெல்லாம் என்னால சொல்லமுடியாது. நீங்கள் கடவுளைத் தான் பிரார்த்திக்கவேண்டும் என்று கூறுகிறார்.


உடனே மகனை அழைத்துக்கொண்டு குரும்பபேட் பிருந்தாவனம் ஓடுகிறார் சந்திரமௌலி.


குருராஜா, ஒரே மகனை ஆசை ஆசையாக படிக்க வைத்து அவன் கனவு நனவாகும் நேரம், இப்படி ஆகிவிட்டதே நீ தானப்பா அவனை காப்பாற்றவேண்டும். என்று கதறுகிறார்.


ஸ்ரீனிவாசனும் தன் பங்கிற்கு ராயரிடம் வேண்டிக்கொண்டான். குருராஜா, நான் நல்லபடியாக பரீட்சை எழுதி, நல்ல மார்க்குகள் எடுத்து, நான் விரும்பியவாறே நல்ல கல்லூரியில் சேர்ந்து, படித்து முடித்து வேலைக்கு போகும்போது என் முதல் சம்பளம் உனக்கே அர்பணிக்கிறேன் என்று வேண்டிக்கொள்கிறான்.


என்ன ஆச்சரியம், ஓரளவு நோயின் பாதிப்பு குறைந்தது. சிக்கன்குனியா இருந்தாலும் அவன் கைகளுக்கோ, கால்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பரீட்சையை எழுத முடிந்தது. ஒவ்வொரு பரீட்சையாக எழுத எழுத சிக்கன்குனியா போயே போய்விட்டது. பரீட்சை எழுதி முடித்தவுடன், நன்றிக்கடனாக ராயருக்கு அபிஷேகங்கள் நடத்தினார் சந்திரமௌலி.


ரிசல்ட்டுக்காக காத்திருந்த ஸ்ரீனிவாசன், சினிமா, கேளிக்கை அது இதென்று ஊர் சுற்றாமல் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று ராயரின் பிருந்தாவனத்தை 21 நாட்கள் தொடர்ந்து தினமும் 21 முறை பிரதட்சிணம் வந்தான்.


இதற்கிடையே +2 பரீட்சை முடிவுகள் வெளியானது. 1164/1200 மார்க்குகள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான் ஸ்ரீனிவாசன். பரீட்சையே எழுத முடியுமா என்று நினைத்த ஒரு மாணவன், பரீட்சை எழுதி, முதல் மாணவனாக வந்தது அந்த ராயரின் கருணையே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?


மந்த்ராலயம் மூல பிருந்தாவனம் போன்றே காட்சியளிக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனம்
மந்த்ராலயம் மூல பிருந்தாவனம் போன்றே காட்சியளிக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனம்


அடுத்து மேற்படிப்பு. பி.இ.


ஸ்ரீனிவாசன் விரும்பியது போலவே, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவில் சீட் கிடைத்தது. (அண்ணா பல்கலைக்கு அடுத்து மாணவர்கள் இங்கு தான் சேர விரும்புவார்கள். அந்தளவு பெயர் பெற்ற கல்லூரி.)


நான்காண்டுகள் பி.இ. படிப்பை இந்த ஆண்டு தான் நிறைவு செய்தார் ஸ்ரீனிவாசன். நல்ல மதிப்பெண்கள். சுத்தமான அகாடமிக் ரெக்கார்டு.


கல்லூரி வளாகத்தில் பல முன்னனி நிறுவனங்கள் சார்பில் காம்பஸ் இண்டர்வ்யூ நடைபெற்றது. முதல் இரண்டு அமர்வுகளில் இவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இவரது அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டது. நண்பர்களுக்கெல்லாம் நல்ல நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட, இவர் மனு மட்டும் ஏற்கப்படவில்லை.


மீண்டும் பெற்றோரை பார்க்க புதுவை வந்த ஸ்ரீனிவாசன், நேரே குரும்பபேட் பிருந்தாவனம் செல்கிறார். என்னை +2 தேர்வு எழுதவைத்து, நல்ல மதிப்பெண்களும் பெறவைத்து, நல்ல கல்லூரியில் இடமும் வாங்கிக் கொடுத்து, ஆனால் இப்போது வேலை மட்டும் தர மறுக்கிறாயே இது நியாயமா? எனக்கு கிடைக்கும் முதல் சம்பளம் கூட உனக்குத் தான் என்று சொல்லியிருக்கிறேனே. என்று ராயரிடம் முறையிடுகிறார்.
திங்கட் கிழமை காலை மீண்டும் கல்லூரிக்கு செல்ல, அன்று நடைபெற்ற காம்பஸ் தேர்வில் செலக்டாகிவிடுகிறார். தற்போது ஸ்ரீனிவாசன், பெருங்குடியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இஞ்சீனியராக பணியாற்றுகிறார்.


முன்னர் வேண்டிக்கொண்டபடி தனது முதல் மாத சம்பளத்தை, (ரூ.21,951/-) ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அப்படியே கொண்டு வந்து குரும்பபேட் பிருந்தாவனத்தில் உள்ள உண்டியலில் போட்டுவிடுகிறார். (பி.இ. படிச்சாலும் இப்போல்லாம் வேலை கிடைக்குங்கிறது எந்த நிச்சயமும் இல்லீங்க.)


DSCN6353கடந்த வாரம், நாம் புதுவை குரும்பபேட் பிருந்தாவனம் சென்றிருந்தபோது நமக்கு கிடைத்த தகவல் இது.


ஸ்ரீனிவாசன், தனது சம்பள பணத்தை வைத்து உண்டியலில் போட்ட கவரை நம்மிடம் காண்பித்தார்கள். வாங்கி கண்களில் அதை ஒத்திக்கொண்டோம்.


ஸ்ரீனிவாசனின் தந்தை திரு.சந்திரமௌலி அவர்களின் அலைபேசி எண் கிடைக்குமா என்று விசாரிக்க, அவர் எண் கிடைத்தது.


சென்னைக்கு சென்றபிறகு, திரு.சந்திரமௌளியை தொடர்புகொண்டு, இது பற்றி பேசுகிறேன் என்று கூறிவிட்டு விடைபெற்றோம்.


நேற்றிரவு திரு.சந்திரமௌலி அவர்களிடமும் அவர் மகன் ஸ்ரீனிவாசனிடமும் பேசியபோது கிடைத்த தகவல்கள் தான் மேலே நீங்கள் படித்த பதிவு.


திரு.சந்திரமௌலி அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ராகவேந்திரரும், மகா பெரியவாவும் எனக்கு இரண்டு கண்கள் போல இருவர் மீதும் பேரன்பு செலுத்திவருகிறேன். என் தளத்தில் இருவரைப் பற்றியும் பல பதிவுகள் அளித்துள்ளேன். இருவரையும் பிரித்துப் பார்க்க எனக்கு தெரியாது! என்றோம்.


அடஎன் சொந்த ஊர் விழுப்புரம் தாங்க. மகா பெரியவா பிறந்த வீடு இருக்குற தெருவுல தான் நாங்களும் குடியிருந்தோம் என்றார் சந்திரமௌலி. (பேரைக் கேட்கும்போதே சந்தேகப்பட்டேன்!!!)


இது போதாதா நமக்கு!


சந்திரமௌலி அவர்களிடம் பேசப் பேச மேலும் மேலும் பல தகவல்கள் கிடைத்தன.


அவர்கள் குடியிருந்தது விழுப்புரத்தில் மகாபெரியவா அவர்கள் பிறந்த வீடு அமைந்துள்ள கீழ் அனுமார் தெரு. (இப்போது சங்கர மடம் தெரு என்று அழைக்கப்படுகிறது.)


இவர் கொள்ளுத் தாத்தா, கிருஷ்ணய்யர் மகா பெரியவா கந்தம்பாக்கத்தில் படித்தபோது அவருடன் ஒன்றாக படித்தவராம். மேலும் இவரது அம்மா பிறந்த போது, இவரது பாட்டி அப்போது விழுப்புரம் வந்திருந்த மகா பெரியவரிடம் கொண்டு போய் குழந்தையை பெயர் சூட்டுவதற்கு காட்ட, திரிபுரசுந்தரின்னு பேர் வை என்று ஆசீர்வதித்தாராம்.


விழுப்புரத்திலுள்ள இவர்கள் வீடு அந்தக் காலத்தில் சற்று பெரியது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. விஷேட நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அடிக்கடி அன்னதானம் நடக்குமாம். இவரது கொள்ளுத் தாத்தா, தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் முயற்சிகளால் ஷேத்ராடனம் வரும் பல பக்தர்கள் இவர்கள் வீட்டில் பசியாறியுள்ளனர்.


ஊருக்கு பெரிய மனிதர்கள், மடாதிபதிகள் யாராவது வந்தால், இவர் வீட்டில் தான் போய் தங்குவார்களாம். புழக்கடையில் கிணறு, காற்றோட்டமுள்ள விசாலமான அறைகள் என்று தாரளமாக இருக்கும். இவர் பாட்டி (திரிபுரசுந்தரி) நிறைமாதமாக இருக்கும்போது, ஒரு முறை சிருங்கேரி சாரதா பீடத்திலிருந்து அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள் வர, இவர் தாய் எந்த நொடியும் பிரசவத்துக்கு தயாராக இருப்பதை கூறி, அழைக்க முடியாத சூழ்நிலையை குடும்பத்தினர் விளக்கினர் அப்போது அவர், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும். குழந்தைக்கு சந்திரமௌலீஸ்வரன்னு பேர் வை! என்றாராம்.


அவரது தீர்க்கதரிசனத்தை போலவே, இவர் பிறக்க, இவருக்கு சந்திரமௌலி என்றே பெயர் சூட்டிவிட்டனர்.


தாம் சிறுவயதில் இருந்தபோது தம் தெருவில் உள்ள சங்கர மடத்துக்கு மகா பெரியவா அடிக்கடி வருவது வழக்கம் என்று அப்போது அவரை தமது தந்தையாருடன் சென்று பார்த்து பலமுறை தீர்த்தப் பிரசாதம் தாங்கி வாங்கி சாப்பிட்டிருப்பதாகவும் கூறி, பழைய நினைவுகளில் மூழ்கினார் சந்திரமௌலி.


மேலும் தமக்கு பெண்பார்த்தபோது, முதல்முறை தனது மனைவியின் ஜாதகத்தை பார்த்தபோது, மகா பெரியவா தான் தனக்கு நினைவுக்கு வந்தார் என்றும் அவரிடம் இந்த பெண் மனைவியாக அமையவேண்டும். என் குடுமபத்துக்கு ஏற்றவாறு நல்ல பெண்ணாக இவர் இருக்கவேண்டும் என்று மானசீகமாக பிரார்த்திதுக்கொண்டதாகவும், அதன்படியே தனக்கு மனைவி அமைந்தது மகா பெரியவா அவர்களின் ஆசி தான் என்றும் கூறினார் திரு.சந்திரமௌலி. இவர் மனைவி உமா மகேஸ்வரி, சென்னை புறநகரில் அரசு வங்கி ஒன்றில், மானேஜராக பணிபுரிகிறார்.


மேலும் ஒரு தகவலை சொன்னார் திரு.சந்திரமௌலி. ஸ்ரீனிவாசனுக்கு வேலை கிடைத்தவுடன், ராயரிடம் வேண்டிக்கொண்டபடி தன் முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்த இருவரும் பிருந்தாவனம் சென்றனர். பிருந்தாவன அலுவலகத்தில் ராயர் அருளால் மகனுக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொன்னவுடன் டிரஸ்டி திரு.தேவராஜ் அவர்கள், மந்த்ராலயத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ராகவேந்திரர் தாமிர விக்ரகம் (நமக்கு அளித்ததைப் போல) ஒன்றை பரிசளித்தார். அதை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில், ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ரஜினி நடித்த ராகவேந்திரர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி


பொருள் : இந்த ராகவேந்திரர் ஸ்தோத்திரத்தை அனுதினமும் பக்தி சிரத்தையுடன் எவன் சொல்கிறானோ அவனது எண்ணங்கள் யாவும் ஈடேறி சகல சௌபாக்கியத்துடனும் வாழ்வான் இதற்கு சாட்சி. பிருந்தாவனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் சாட்சாத் ஹயக்ரீவரே!


- See more at: http://rightmantra.com/?p=13485#sthash.wGLTgTL4.dpuf