Announcement

Collapse
No announcement yet.

பாடம் நடத்திய பீமனின் பேரன்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாடம் நடத்திய பீமனின் பேரன்!

    நான் செய்கிறேன்; என்னால் தான் செய்ய முடியும்' என்ற எண்ணங்களை விட்டு, எவன் ஒருவன் தன் செய்கையை பரம்பொருளுக்கு அர்ப்பணிக்கிறானோ அவன் மனம், தான் என்கிற அகங்காரத்திற்குள் சிக்குவதில்லை. இதற்கு உதாரணமாக மகாபாரத யுத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம்...
    பாரத யுத்தத்தின் போது இருபுறமும் இருந்த முக்கியஸ்தர்கள், தங்கள் புஜபல ஆற்றல் குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
    அப்போது, கடோத்கஜன் மவுர்வியின் மகனும், பீமனின் பேரனுமான பர்பரிகன், 'நீங்கள் எல்லாரும் கண்ணனுடன் ஓர் ஓரமாக நில்லுங்கள்; இதோ ஒரு முகூர்த்த காலத்திற்குள், கவுரவர்கள் அனைவரையும் கொன்று வருகிறேன்...' என்றான்.
    அனைவரும் திகைத்தனர். 'பர்பரிகா... அவ்வளவு விரைவாக எப்படி அவர்களை கொல்வாய்?' எனக் கேட்டார் கண்ணன்.
    உடனே, பர்பரிகன் தன் வில்லில் அம்பைப்பூட்டி, அம்பின் நுனியில் சிவப்பு நிறச்சாம்பலைத் தடவி, அம்பை தொடுத்தான். அடுத்த வினாடி, கவுரவர் அனைவரின் உயிர் நிலைகளும் தெரிந்தன. 'இதோ... அனைவரின் உயிரும் எங்கெங்கு இருக்கின்றன எனத் தெரிந்து விட்டது. பின் என்ன...சிறிது நேரத்தில், இவர்கள் அனைவரையும் கொன்று விடுவேன்...' என, தற்பெருமை பேசினான்.
    இதைப் பார்த்த அனைவரும், 'பர்பரிகன் வாழ்க!' எனக் கூச்சலிட்டனர். கூச்சல் அடங்குவதற்குள், பர்பரிகனின் தலையை, தன் சக்கராயுதத்தால் வீழ்த்தினார் கண்ணன். உடனே, சித்தாம்பிகை, சண்டிகா தேவி முதலான தேவதா தேவிகள் அங்கு வந்தனர். கண்ணன் சண்டிகையைப் பார்த்து, 'இந்த பர்பரிகனின் தலையை அமிர்தத்தில் நனை; அது, ராகுவின் தலையைப் போல என்றும் இளமையாகவும், அமரத்துவம் பெற்றதாகவும் இருக்கட்டும்...' என்றார். சண்டி அப்படியே செய்தாள்.
    அப்போது, பர்பரிகனின் தலை, 'கண்ணா... இந்த யுத்தத்தை நான் பார்க்க வேண்டுமே...' என வேண்டியது; அதனால், அந்தத் தலையை, ஒரு மலை உச்சியில் வைத்தார் கண்ணன்.
    பாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். பீமன் முதலானவர், தங்கள் போர்த்திறமையைப் புகழ்ந்து, தங்களால் தான் இத்தகைய வெற்றி கிடைத்தது என, தற்பெருமை பேசினர். பின், கடைசியில், நம்மில் யாரால் இந்த வெற்றி விளைந்தது என்பதை, யுத்த களத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பர்பரிகனின் தலையிடம் கேட்கலாம் என முடிவு செய்து, பர்பரிகனிடம் கேட்டனர். அதற்கு அவன், 'பகைவர்களுடன் ஒரே ஒருவர் மட்டும் போரிடுவதையே கண்டேன்...' என்று துவங்கி, தான் கண்ட வடிவை விரிவாக வர்ணித்தான். அந்த வர்ணனை சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இணைந்த வடிவத்தைப் பற்றியதாக இருந்தது.
    'அவரைத்தவிர வேறு யாரும் கவுரவர்களை எதிர்த்துப் போரிட்டதை நான் பார்க்கவில்லை...' என, முடித்தான் பர்பரிகன்.
    இதைக் கேட்டதும், தற்பெருமை பேசிய அனைவரும், தலைகுனிந்து அகன்றனர்.


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!: ஒரு மனிதனிடம் எல்லா சிறப்புகளுமிருக்கலாம்; ஆனால், அவன் ஊரோடு, உறவோடு ஒட்டி வாழாமல் தனித்து நின்றால், அவனுடைய எதிரிகள் மகிழ்வர். தனி மரத்தை காற்று வீழ்த்தி விடுவது போல், அவனை எளிதில் வெல்லலாமென்று பகைவர்கள் கருதுவர்.
    — என்.ஸ்ரீதரன்.

  • #2
    Re: பாடம் நடத்திய பீமனின் பேரன்!

    nandraga sonner

    Comment

    Working...
    X